×

பணம்தான் சந்தோஷத்தைத் தரும் என்கின்றார்களே, உண்மையா?

சிலருக்கு ஞானம் உடனடியாகக் கிடைத்துவிடுகிறது. சிலருக்கு அதிகக் காலம் ஆகிறது. இந்த வேறுபாடு ஏன்?
– நந்தகுமார், தஞ்சை.
இப்பொழுது நீங்கள் பொறியியல் துறை படிக்கிறீர்கள் என்று சொன்னால், அதற்கான கால அவகாசம் நான்கு வருடம் அல்லது ஐந்து வருடம் என்று வைத்திருக்கின்றார்கள். நீங்கள் முறையாகப் படித்தால், ஐந்தாவது வருடத்தில் நீங்கள் பொறியாளர் பட்டத்தைப் பெற்றுவிடலாம். ஆனால், ஞானம் பெறுவது என்பது அப்படி அல்ல. பக்குவப்பட வேண்டும். அந்தப் பக்குவத்திற்கு ஏற்ற கால அவகாசம் வேண்டும். ஸ்ரீரமணர் இதற்கு அற்புதமான ஒரு உதாரணம் கூறுகிறார். வெடி மருந்து உடனே பற்றிக் கொள்ளும். நிலக்கரி பற்றிக் கொள்வதற்கு வெகு நேரம் ஆகும். பக்குவப்பட்டவர்கள் ஞானம் பெறுவதற்கும் பக்குவப்படாதவர்கள் ஞானம் அடைய முயற்சிக்கும் காலத்திற்கும் உள்ள வேறுபாடு இதுதான்.

பணம்தான் சந்தோஷத்தைத் தரும் என்கின்றார்களே, உண்மையா?
– ஜீவானந்தம், கிருஷ்ணராயபுரம் – கரூர்.
அது உண்மை போல் தெரியும்; ஆனால் உண்மை அல்ல. பணமும் சந்தோஷத்தை தரும் என்று வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். பணம் மட்டுமே சந்தோஷத்தைத் தந்து விடும் என்று எடுத்துக் கொள்ள முடியாது. அப்படி இருந்தால் நிறைய பணம் வைத்திருக்கக் கூடிய பணக்காரர்களும் சந்தோஷமாக அல்லவா இருக்க வேண்டும். நடைமுறையில் அப்படி இல்லையே. பணக்காரர்கள் அனைவரும் சந்தோஷமாக இருப்பதில்லை. ஆனால், சந்தோஷமாக இருப்பவர்கள் எல்லோரும் பணக்காரர்கள்தான்.

ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால் அந்த வீட்டில் உள்ளவர்கள் சில நாட்கள் கோயிலுக்குச் செல்ல கூடாது என்று சொல்கிறார்களே, குழந்தை பிறந்தது நல்ல விஷயம் தானே?
– காயத்திரி வரதராஜன், நாகை.
நம் சமய மரபில் தீட்டு என்கிற ஒரு விஷயம் உண்டு. இந்த விஷயத்தை இரண்டாகப் பிரித்து இருக்கிறார்கள். ஒன்று சுபத்தீட்டு. இன்னொன்று அசுபத்தீட்டு. மரணம் போன்ற நிகழ்வுகளில் வரும் தீட்டு அசுபத்தீட்டு. இது இறந்தவர்களோடு கொண்ட பல்வேறு உறவுகளின் அடிப்படையில் ஒரு நாள், மூன்று நாள், பத்து நாள், பதினாறு நாள் என்று வரும். அதைப் போலவே வீட்டில் குழந்தை பிறந்தால், அதனை சுபத்தீட்டு என்பார்கள். இதுவும் அந்தக் குழந்தையோடு கொண்ட உறவுக்குத் தகுந்தபடி நாள்கள் மாறும். இதை பெரியவர்களிடம் கேட்டு கடைபிடிக்க வேண்டும்.

சுப நிகழ்ச்சிக்கு வாழை மரத்தைக் கட்டுவது ஏன்?
– மௌலீஸ்வரன், சிதம்பரம்.
விருத்திக்கு என்று சொல்வார்கள். எதுவும் விருத்தி அடைய வேண்டும். திருமணம் நடக்கிறது என்றால் மேற்கொண்டு அவர்கள் சந்ததிகளை விருத்தி செய்து நன் மக்களாக, பெயர் சொல்லும் படி வாழ வேண்டும் இந்தச் சந்ததித் தொடர்பு கெட்டுவிடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் வாழை மரத்தை வாசலில் கட்டுகின்றார்கள். ‘‘வாழையடி வாழையாக’’ என்று பழமொழியே இருக்கிறது அல்லவா இதில் இன்னொரு நுட்பமும் இருக்கிறது. வாழை மரத்தை போல மனிதர்களும் வாழ வேண்டும் என்று உணர்த்துவதற்கும் வாழை மரத்தைக் கட்டுகின்றார்கள். வாழையில் உள்ள எந்த பொருளும் ஏதாவது ஒரு வகையில் உபயோகமாகிக் கொண்டே இருக்கும். காயாக இருக்கட்டும், கனியாக இருக்கட்டும், பிஞ்சாக இருக்கட்டும், இலையாக இருக்கட்டும், நாராக இருக்கட்டும், தண்டாக இருக்கட்டும், எதுவுமே வீணாகாது. அதுபோல், நம்முடைய வாழ்நாளும் நம் சக்தியும் வீணாகக் கூடாது. நம்முடைய செயல்கள் ஒவ்வொன்றும் மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டும். அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ வேண்டும்.

The post பணம்தான் சந்தோஷத்தைத் தரும் என்கின்றார்களே, உண்மையா? appeared first on Dinakaran.

Tags : Nandakumar ,Thanjai ,Dinakaran ,
× RELATED பெட்ரோல் பங்கில் ஆள்மாறாட்டம் செய்து ₹35 லட்சம் அபகரிப்பு