திருச்சி, ஆக.26: திருச்சி, காந்தி மார்க்கெட் தஞ்சை சாலை பகுதியை சேர்ந்தவர் சரவணன் (45). அதே பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். பங்கில் மோகன் என்பவர் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். பங்கில் வசூலாகும் ரொக்கத்தின் குறிப்பிட்ட தொகையை மதுரையைச் சேர்ந்த பங்குதாரருக்கு திருச்சியில் இருந்து தனியார் (ஆம்னி) பேருந்தில் (டிரைவர் மூலமாக அவ்வப்போது கொடுத்து அனுப்புவது வழக்கம்.
அந்தவகையில் ரூ.35 லட்சத்தை ஒரு பையில் வைத்து, குறிப்பிட்ட தனியார் பேருந்து ஓட்டுநரிடம் கொடுத்தனுப்புவதற்காக மோகன் நேற்று அதிகாலை பங்கிலேயே காத்திருந்தார். குறிப்பிட்ட பேருந்து வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பெட்ரோல் பங்க்லிருந்த அறையில் பணப்பையுடன் மோகன் உறங்கிவிட்டாராம்.
சிறிது நேரம் கழித்து அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், மோகனை எழுப்பி, பேருந்து வெளியே நிற்கிறது, தான் பேருந்து ஓட்டுநரின் கிளீனர் ரொக்கத்தை டிரைவர் வாங்கி வரச்சொன்னார் எனக் கூறியுள்ளார். அதை நம்பிய மோகனும் அறையிலிருந்தவாரே ரூ.35 லட்சம் ரொக்கத்தை பையுடன் கொடுத்துள்ளார்.
பின்னர் ஒரு மணி நேரம் கழித்து வழக்கமாக வரும் குறிப்பிட்ட பேருந்து ஓட்டுநர் வந்து மோகனை எழுப்பி பணத்தை கேட்டுள்ளார். பணத்தை ஏற்கெனவே உங்க ஆளிடம் கொடுத்து அனுப்பினேனே? முதலில் வந்தது யார் ? என மோகன் கேட்டு அதிர்ச்சி அடைந்தார். அது யாரெனத் தெரியாது, வரும் வழியில் பேருந்தில் பழுது ஏற்பட்டதால் சரிசெய்து தற்போதுதான் வருகிறோம் என பேருந்து டிரைவர் தெரிவித்துள்ளார்.
பிறகுதான் யாரோஆள் மாறாட்டம் செய்து பணத்தை அபகரித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, ரூ.35 லட்சம் ரொக்கத்தை அபகரித்துச் சென்ற அந்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
The post பெட்ரோல் பங்கில் ஆள்மாறாட்டம் செய்து ₹35 லட்சம் அபகரிப்பு appeared first on Dinakaran.