×

சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து திவாகரனுடன் ரகசிய பேச்சு மாஜி அமைச்சரை ஓரங்கட்டும் எடப்பாடி: டெல்டா மாவட்ட அதிமுகவினர் அதிர்ச்சி

திருச்சி: சசிகலாவுக்கு ஆதரவாக பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜை, எடப்பாடி பழனிசாமி ஓரங்கட்டி வருவதாக கூறப்படும் தகவல் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த அதிமுகவினிரிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் சசிகலா மற்றும் ஓபிஎஸ்சை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று கட்சியில் உள்ள ஒரு தரப்பு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அண்மையில் எடப்பாடி தஞ்சைக்கு வந்த போது, அவருடன் திருச்சியில் இருந்து காரில் முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், ஓ.எஸ்.மணியன், சி.விஜயபாஸ்கர் சென்றனர். அப்போது சசிகலாவை கட்சியில் சேர்க்கலாம் என்று காமராஜ் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு ஓ.எஸ்.மணியன் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆமாம் போட்டுள்ளனர். ஆனால் எடப்பாடி எந்த பதிலும் கூறாமல் இருந்து உள்ளார்.

இதைத்தொடர்ந்து கொங்கு மண்டலத்தை சேர்ந்த 6 மாஜி அமைச்சர்கள் சேலத்தில் எடப்பாடியை சந்தித்து அதிமுக ஒருங்கிணைப்பு குறித்தும், சசிகலா மற்றும் ஓபிஎஸ்சை சேர்க்க பாஜ தலைமை வலியுறுத்துவதை குறித்தும் பேசி உள்ளனர். கடந்த வாரம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் பல்வேறு மாவட்ட கட்சி நிர்வாகிகள் சசிகலாவை சேர்க்க வலியுறுத்தி உள்ளனர். ஆனால், சசிகலா மற்றும் ஓபிஎஸ்சை எந்த காலத்திலும் கட்சியில் சேர்க்க மாட்டேன் என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறி உள்ளார்.

இந்த சூழலில், சசிகலா தயவால் அமைச்சர்களானவர்களிடம் சசிகலாவின் தம்பியான திவாகரன் ரகசிய ஆலோசனை நடத்து வருகிறார். இதற்காக கடந்த சில வாரங்களாக சென்னையில் தங்கி மாஜி அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகளுக்கு தூது விட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். விரைவில் டெல்டாவை சேர்ந்த மாஜி அமைச்சர்கள் சசிகலாவை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், மன்னார்குடியை சேர்ந்த ஒரு நகைக்கடைக்காரரின் இல்ல திருமண விழா கடந்த வாரம் சென்னையில் நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் காமராஜ், சசிகலா தம்பி திவாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இருவரும் அருகருகே அமர்ந்து உணவருந்தினர். பின்னர் தனி அறையில் இருவரும் 1 மணி நேரம் ரகசிய ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. டெல்டா மாவட்டங்களுக்கு சசிகலா சுற்றுப்பயணம் வரும் போது, அவருக்கு காமராஜ் வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பார் என்றும், இது தொடர்பாகவே அவரும், திவாகரனும் ஆலோசித்ததாகவும் அதிமுக வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.

இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் அனைத்து கட்சி கூட்டம் நடத்தினார். இதில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டனர். வழக்கமாக டெல்டா மாஜி அமைச்சர் என்ற பெயரில் காமராஜை அனுப்பி வைக்கப்படுவார். ஆனால், இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான காமராஜை அனுப்பாதது டெல்டா மாவட்ட அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆதரவாளர்கள் வட்டாரத்தில் விசாரித்த போது, அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, கோவையை சேர்ந்தவர். அவருக்கும், டெல்டாவுக்கும் சம்பந்தமில்லை. மற்றொருவரான ஓ.எஸ்.மணியன் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் பாசன பரப்பளவு குறைவு. டெல்டாவிலேயே அதிகளவில் பாசனம் நடைபெறும் மாவட்டம் திருவாரூர். அந்த மாவட்டத்தை சேர்ந்தவர் காமராஜ். மேலும் கடந்த ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர். வேளாண் தொடர்பான விவரங்கள் தெரிந்தவர்.

எனவே, காமராஜை தான் அனைத்து கட்சி கூட்டத்துக்கு அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் வேண்டுமென்றே எடப்பாடி அவரை தவிர்த்துள்ளார். சசிகலாவை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதாலும், திவாகரனுடன் ரகசியமாக பேசியதாலும் எடப்பாடி அவரை ஓரங்கட்டுகிறார். அதேபோல் காமராஜூம், எடப்பாடி மீது அதிருப்தியில் தான் உள்ளார். விரைவில் இந்த விவகாரம் கட்சியில் பூதாகரமாக வெடிக்கும் என்றனர்.

The post சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து திவாகரனுடன் ரகசிய பேச்சு மாஜி அமைச்சரை ஓரங்கட்டும் எடப்பாடி: டெல்டா மாவட்ட அதிமுகவினர் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Divakaran ,Sasikala ,Maji Minister ,Delta district ,Trichy ,Former minister ,Kamaraj ,Edapadi ,Palanisami ,Orangati ,Adamugavini ,Delta districts ,OPS ,Minister ,Maji ,High Commissioner ,Dinakaran ,
× RELATED தலித்தை முதலமைச்சராக்க தலித்...