×

சீனாவில் மக்கள் தொகை சரியும் 2060ல் இந்திய மக்கள் தொகை 170 கோடியாக இருக்கும்: ஐநா கணிப்பு

ஐநா: வரும் 2060ல் இந்திய மக்கள் தொகை 170 கோடியாக உயரும், சீனாவின் மக்கள் தொகை சரியும் என்றும் இந்த நூற்றாண்டு வரை அதிக மக்கள் தொகை உடைய நாடாக இந்தியா இருக்கும் என ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐநா சபையின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை உலக மக்கள் தொகை 2024 அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டது. இன்னும் 50-60 ஆண்டுகள் வரை உலகளவில் மக்கள் தொகை அதிகரிக்கும். தற்போது உலக மக்கள் தொகை 820 கோடி.

2080ன் நடுப்பகுதியில் உலகின் மக்கள் தொகை 1030 கோடியாக அதிகரிக்கும். உச்சத்தை அடைந்த பிறகு, உலக மக்கள்தொகை படிப்படியாகக் குறையத் தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நூற்றாண்டின் இறுதியில் உலகின் மக்கள் தொகை 1020 கோடியாக குறையும். உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்த சீனாவை கடந்த ஆண்டு இந்தியா பின்னுக்குத் தள்ளியது.2100ம் ஆண்டு வரை அந்த இடத்தை இந்தியா வகிக்கும்.

அந்த வகையில்,இந்த நூற்றாண்டு முழுவதும் உலகின் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும்.இந்தியாவின் மக்கள்தொகை 2060ல் 170 கோடியாக உயர்ந்த பிறகு நூற்றாண்டின் இறுதியில் 12% குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை பிரிவின் மூத்த அதிகாரி கிளேர் மெனோஸி கூறுகையில்,‘‘இந்தியாவின் மக்கள் தொகை தற்போது 145 கோடி ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. இது மேலும் அதிகரிக்கும். 2024ல் 141 கோடியாக உள்ள சீனா மக்கள் தொகை 2054ல் 121 கோடியாக குறையும்.

மேலும் 2100ல் அது 63.3 கோடியாக குறையும்.2024 மற்றும் 2054க்கு இடையில் சீனா முழுமையான மக்கள்தொகை இழப்பை(20.4 கோடி) சந்திக்கும். அதை தொடர்ந்து ஜப்பான் (2.1 கோடி) மற்றும் ரஷ்யாவிலும் (1 கோடி) மக்கள் தொகையில் இழப்பு ஏற்படும் என்றார்.
சீனாவின் மக்கள்தொகை கணிப்பு குறித்து, ஐநாவின் மக்கள்தொகை பிரிவின் இயக்குனர் ஜான் வில்மோத் கூறுகையில், “இது தற்போது சீனாவில் காணப்படும் கருவுறுதலுடன் தொடர்புடையது. தற்போதைய நிலையில் ஒரு பெண்ணுக்கு வாழ்நாள் முழுவதும் சராசரி குழந்தை பிறப்பு ஒன்று என உள்ளது. இத்தாலி,தென் கொரியா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் பெண்ணுக்கு சராசரி குழந்தை பிறப்பு 1.4 என்ற குறைந்த அளவிலே உள்ளது’’ என்றார்.

* அமெரிக்காவை முந்தும் பாக்.
மக்கள் தொகையில் மூன்றாவது பெரிய நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவின் மக்கள் தொகை 34.5 கோடியாகும். வரும் 2054ல் மக்கள் தொகை 38.4 கோடியாக உயரும்.ஆனால் 24 கோடியாக உள்ள பாகிஸ்தான் மக்கள் தொகை 2054ல் 38.9 கோடியாக உயர்ந்து அந்த நாடு மூன்றாவது இடத்தை பிடிக்கும் என்றும் 2100ல் பாகிஸ்தானின் மக்கள் தொகை 51 கோடியாக உயரும் என கூறப்பட்டுள்ளது.

The post சீனாவில் மக்கள் தொகை சரியும் 2060ல் இந்திய மக்கள் தொகை 170 கோடியாக இருக்கும்: ஐநா கணிப்பு appeared first on Dinakaran.

Tags : UN ,India ,China ,Dinakaran ,
× RELATED இந்தியா -சீனா போரில் பயன்படுத்திய...