×

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நேரில் சந்திப்பு தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க சில அரசியல் கட்சிகள், அமைப்புகள் சதி: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் -ஒழுங்கை சீர்குலைக்க சில அரசியல் கட்சிகள், அமைப்புகள் சதி செய்கின்றன என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த பின்னர் திருமாவளவன் கூறினார். முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சென்னை தலைமை செயலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் சந்தித்து பேசினார். அப்போது முதல்வரிடம் அளித்த மனுவில் திருமாவளவன் கூறி இருப்பதாவது: தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்ட நீட் நுழைவு தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பது உறுதியாகி இருக்கிறது. எனவே தேர்வை ரத்து செய்ய வேண்டும் என நூற்றுக்கணக்கான மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகி உள்ளனர். இதுதொடர்பான வழக்கை சிபிஐயிடம் ஒன்றிய அரசு ஒப்படைத்துள்ளது. சிபிஐயும் குற்றவாளிகள் சிலரை கைது செய்திருக்கிறது.

இவ்வளவுக்கு பின்பும், ‘இதில் பரவலாக முறைகேடு நடக்கவில்லை என்றும், எனவே தேர்வை ரத்து செய்ய வேண்டாம்’ என்றும் ஒன்றிய அரசின் சார்பிலும், தேசிய தேர்வு முகமையின் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஒன்றிய பாஜ அரசு தனது தோல்வியை மூடி மறைப்பதற்காகவும், குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காகவும்தான் இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. இது கண்டனத்துக்குரியது. ஒன்றிய அரசால் நாடாளுமன்றத்தில் எவ்வித விவாதமும் இன்றி, நூற்றுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்துவிட்டு நிறைவேற்றப்பட்ட மூன்று கிரிமினல் சட்டங்கள் இப்போது நடைமுறைக்கு வந்துள்ளன.

இந்த சட்டங்களில் எத்தகைய திருத்தங்களை செய்வது என்பது குறித்து தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைகளை வழங்குவதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இந்தியா கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களும் இதுபோல் திருத்தம் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முதல்வர் கடிதம் எழுத வேண்டும். தமிழ்நாட்டில் சட்டம் -ஒழுங்கை சீர்குலைத்து தமிழ்நாடு அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும், தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வரும் மக்கள் நலத்திட்டங்களை முடக்கவும் வலதுசாரி சனாதன சக்திகள் சதி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன. சிறு வாய்ப்பு கிடைத்தாலும் அதை தமிழ்நாடு அரசுக்கும், திராவிட கொள்கைகளுக்கும் எதிராக திருப்புவதில் அவர்கள் முனைப்பாக உள்ளனர்.

ஒருபுறம் சமூக விரோதிகளுக்கு அரசியல் அடைக்கலம் தருவது, இன்னொரு புறம் அத்தகைய சமூக விரோதிகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆதரவாக பேசுவது என்று நாடகமாடுகிறார்கள். அந்த வேடதாரிகள் சதித்திட்டத்துக்கு இடமளித்து விடாமல் தமிழ்நாட்டில் சாதியவாதிகளையும், மதவாதிகளையும் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையின் பின்னணியில் உள்ளவர்கள் மற்றும் கூலிக்கும்பல் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்து தண்டிக்க வேண்டும். தமிழ்நாட்டில் கூலிக்கு கொலை செய்யும் கும்பலையும், அவர்களுக்கு அரசியல் புகலிடம் கொடுப்போரையும் இரும்புக்கரம் கொண்டு அரசு அடக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்புக்கு பின் திருமாவளவன் அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கை கெடுத்து பிரச்னைகளை உருவாக்க சில அரசியல் கட்சிகள், அமைப்புகள் சதி செய்கின்றன. பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையிலும் அரசியல் சதி இருப்பதாக விசிக கட்சி சந்தேகிக்கிறது. ஆம்ஸ்ட்ராங் பலியான சில நிமிடங்களிலேயே பாஜவை சேர்ந்த ஒருவர் சிபிஐ விசாரணை வேண்டும் என பேட்டி தருகிறார். எடுத்த எடுப்பிலேயே தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் விசாரிக்க கூடாது என கூறியது ஏன்? ஆருத்ரா கோல்டு மோசடியில் ஈடுபட்டவர்கள் பாஜவில் பொறுப்பில் உள்ளார்கள் என ஒரு வருடத்திற்கு மேல் பேசப்பட்டு வருகிறது. ஆருத்ரா மோசடியில் தொடர்புடையவர்கள் தான் ஆம்ஸ்ட்ராங் கொலையிலும் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலையை சிபிஐ விசாரிக்க பாஜ கூறுகிறது. கலைஞர் குறித்து கொச்சையாக விமர்சித்து சட்டம் -ஒழுங்கை சீர்குலைக்க சதி செய்கின்றனர். நீட் தேர்வு முறைகேடு உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில் அதை மறைக்க பாஜ முயற்சித்து வருகிறது.

* அரசு சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த வேண்டும்
நீட் தேர்வு தொடர்பாக சரியான நிலைப்பாட்டை முதன்முதலில் எடுத்தது தமிழ்நாடுதான். இதை இன்று ஒட்டுமொத்த இந்தியாவும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்நிலையில் இப்போது முடிவு அறிவிக்கப்பட்ட தேர்வை மட்டுமின்றி, ஒட்டுமொத்தமாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நீட்டிலிருந்து தமிழ்நாடு உள்பட விரும்பும் மாநிலங்களுக்கு விலக்களிக்க வேண்டும். இதற்கான அரசியல் ரீதியான அழுத்தத்தை கொடுத்தாக வேண்டும். நீட் தேர்வு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வருகிற 18ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் ஒன்றை கூட்டி அதில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் அளிக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நேரில் சந்திப்பு தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க சில அரசியல் கட்சிகள், அமைப்புகள் சதி: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Tamil Nadu ,VC ,President ,Thirumavalavan ,CHENNAI ,Chennai Secretariat ,Liberation Tigers of India Party ,Parliament ,
× RELATED சென்னையில் ஒன்றாக சைக்கிள் பயணம்...