×

6 மாஜி அமைச்சர்கள் திடீர் சந்திப்பின் பின்னணி எடப்பாடி பழனிசாமியை கடுமையாக மிரட்டிய பாஜ: ஓபிஎஸ்சை கட்சியில் சேர்க்க ஆகஸ்ட் 15 வரை கெடு

சேலம்: ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் மீண்டும் சேர்த்துக்கொள்வதுடன் பாஜவுடன் கூட்டணிக்கு வரவேண்டும், இல்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்ற பாஜ மிரட்டலை தொடர்ந்து எடப்பாடியை மாஜி அமைச்சர்கள் 6 பேர் சந்தித்து பேசிய பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்க்க மாட்டோம் என விடாப்பிடியாக கூறி வருகிறார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம்விஸ்வநாதன், கே.பி.அன்பழகன் ஆகியோர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். அப்போது ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்க்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதற்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர்களின் சந்திப்பு எதேச்சையாக நடந்தது இல்லை. பாஜ விடுத்த மிரட்டல் பற்றி எடப்பாடி பழனிசாமியிடம், அவர்கள் கூறியதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுபற்றி அதிமுகவின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னாள் அமைச்சர் தங்கமணியுடன் பாஜ மூத்த நிர்வாகியும், ஒன்றிய அமைச்சருமான பியூஸ் கோயல் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். தங்கமணிக்கு இந்தி நன்றாக தெரியும். தமிழக பாஜ பொறுப்பாளராக கோயல் இருந்தபோது அவருடன் நெருங்கிய பழக்கம் உண்டு. தங்கமணியை தொடர்பு கொண்டு கோயல் பேசியபோது, ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்க்க வேண்டும். இல்லையென்றால் சசிகலா, தினகரன் ஆகியோரை வெளியே செல்லாமல் அவர்களை முடக்கியது போன்று எங்களால் எதுவும் செய்ய முடியும். எடப்பாடிக்கு தெளிவாக சொல்லி விட்டே அவரின் கதையை முடிப்போம்.
4 ஆண்டு காலம் எங்கள் தயவால் ஆட்சியை நடத்திவிட்டு நாடாளுமன்ற தேர்தலின்போது கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து விலகியது நியாயமா?. கூட்டணியில் இருந்திருந்தால் 20 இடங்களில் வென்றிருப்போம். மத்தியில் யார் தயவும் இல்லாமல் ஆட்சியை பிடித்திருக்கலாம். தற்போது கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறோம். இதனால் தைரியமாக எந்த முடிவும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தற்போதே கூட்டணியை உறுதி செய்ய வேண்டும். பாஜவுடன் அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சியை இணைத்து இப்போதே ஒற்றுமையாக இருந்தால்தான் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள முடியும். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலைதான் உங்களுக்கு பிரச்னை என்றால் நாங்கள் அவரை மாற்றி விடுகிறோம். அந்த இடத்திற்கு நயினார் நாகேந்திரனை நியமிப்போம். ஓ.பன்னீர்செல்வம் தனக்கு பொறுப்பு எதுவும் வேண்டாம்; கட்சி ஒன்றிணைந்தால் போதும், பதவி தேவையில்லை என கூறி விட்டார். எனவே, எடப்பாடி பழனிசாமி பயப்பட வேண்டிய அவசியமில்லை. இன்னும் நான் மட்டுமே அதிமுக என்ற கர்வத்தோடு இருந்தால் என்ன செய்ய வேண்டும் என எங்களுக்குத் தெரியும். டெல்லியில் அவரை பிரதமர் அருகில் அமரவைத்து அழகு பார்த்தார். அப்படிபட்டவருக்கு துரோகம் செய்ததால் பிரதமர் கடும் கோபத்தில் இருக்கிறார். ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் நல்ல முடிவை அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் டெல்லியில் இருக்கும் கோப்புகளை வைத்து அதிமுக நிர்வாகிகள் ஒவ்வொருவராக கைது செய்யப்படுவார்கள், என கடுமையாக எச்சரித்துள்ளார். இதன் பிறகே 6 மாஜி அமைச்சர்களும் ஒன்று கூடி பேசி, எடப்பாடியை சந்தித்துள்ளனர். ஆனால் எடப்பாடி அவர்களின் பேச்சுக்கு செவி கொடுக்கவில்லை.

சட்டமன்றத் தேர்தலில் பொதுமக்கள் நமக்கு வாக்களிப்பார்கள், பாஜவுடன் கூட்டணி வேண்டாம் என உறுதிபட கூறி உள்ளார். தொடர்ந்து 6 பேரும் வற்புறுத்திய நிலையில், கே.பி.முனுசாமி, உதயகுமார் ஆகியோருடன் கலந்து பேசி தெரிவிப்பதாக கூறி இருக்கிறார். இதனால் கோபம் அடைந்த சி.வி.சண்முகம் கடுமையான வார்த்தைகளால் பேசி விட்டு இருக்கையில் இருந்து எழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தி உள்ளனர். தொடர்ந்து மீண்டும் இதுபற்றி சந்தித்து பேசுவோம் என அவர்கள் கூறிச்சென்றுள்ளனர். பாஜவை சி.வி.சண்முகம் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் தற்போது அவரே அக்கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என தெரிவித்ததால் எடப்பாடி அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த சந்திப்புக்கு பின் மற்ற 4 பேரும் ஊர்களுக்கு சென்று விட்ட நிலையில், நத்தம் விஸ்வநாதனும், சி.வி.சண்முகமும் சேலத்திலேயே அன்றையதினம் தங்கினர். நேற்றுமுன்தினம் விமானத்தில் எடப்பாடி சென்னை சென்றபோது 2 பேரும் அவருடன் சென்னை சென்றுள்ளனர். இதனால் விரைவில் அதிமுகவில் ஓபிஎஸ்-ஐ சேர்த்துக்கொள்வது குறித்த அறிவிப்பு வெளியாகலாம். தங்கள் சுய லாபத்திற்காக பாஜ அதிமுகவை மிரட்டி பணிய வைப்பது அதிர்ச்சியாக தான் இருக்கிறது. இவ்வாறு அந்த நிர்வாகி தெரிவித்தார்.

The post 6 மாஜி அமைச்சர்கள் திடீர் சந்திப்பின் பின்னணி எடப்பாடி பழனிசாமியை கடுமையாக மிரட்டிய பாஜ: ஓபிஎஸ்சை கட்சியில் சேர்க்க ஆகஸ்ட் 15 வரை கெடு appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,BJP ,OPS ,Salem ,O. Panneerselvam ,AIADMK ,Edappadi ,General Secretary ,Dinakaran ,
× RELATED ஊழல் வழக்குகளை தூசி தட்ட தயாராகும்...