×

ரஷ்யாவில் உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடிக்கு மாஸ்கோவில் உற்சாக வரவேற்பு: அதிபர் புடினுடன் இன்று பேச்சுவார்த்தை

மாஸ்கோ: இந்தியா, ரஷ்யா இடையேயான இருதரப்பு உச்சி மாநாடு கடந்த 2000ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 21வது உச்சி மாநாடு டெல்லியில் நடந்தது. அதில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா வந்தார். இதைத் தொடர்ந்து, 22வது உச்சி மாநாடு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இம்மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி 2 நாள் பயணமாக மாஸ்கோவுக்கு நேற்று புறப்பட்டுச் சென்றார்.

கடந்த 2019ம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் ரஷ்ய பயணம் இது. மேலும், 2022ல் உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்புக்குப் பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி ரஷ்யா செல்கிறார். அதோடு, 3வது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் மோடி மேற்கொள்ளும் முதல் ரஷ்ய பயணம் இது. உக்ரைன் போர் விவகாரத்தில் இதுவரை ரஷ்யாவுக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்கவில்லை. பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்கப்பட்ட வேண்டுமென இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் போருக்கு மத்தியில் பிரதமர் மோடியின் ரஷ்ய பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நேற்று காலை ரஷ்யா புறப்படும் முன்பாக பிரதமர் மோடி விடுத்த அறிக்கையில், ‘‘இந்தியா, ரஷ்யா இடையேயான ஒத்துழைப்பு கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரம், பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், கல்வி, கலாச்சாரம், சுற்றுலா மற்றும் மக்கள் பரிமாற்றம் உள்ளிட்ட துறைகளில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. எனது நண்பர் புடினுடன் இருதரப்பு ஒத்துழைப்பின் அனைத்து அம்சங்களையும் மறுபரிசீலனை செய்யவும், பல்வேறு பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்களில் ஆலோசனைகளை பகிர்ந்து கொள்ளவும் ஆவலுடன் இருக்கிறேன்’’ என்றார்.

பின்னர் நேற்று மாலை மாஸ்கோ சென்றடைந்த பிரதமர் மோடி அங்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் மோடியை ரஷ்யாவின் முதல் துணைப் பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் வரவேற்றார். ராணுவ மரியாதையும் வழங்கப்பட்டது. அங்கிருந்து பிரதமர் மோடி ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஓட்டலின் வெளியே ரஷ்ய கலைஞர்கள் இந்தி பாடல்களுக்கு நடனமாடி வரவேற்றனர். இதைத் தொடர்ந்து அதிபர் மாளிகையில் பிரதமர் மோடிக்கு அதிபர் புடின் இரவு விருந்தளித்து உபசரித்தார்.

பயணத்தின் 2வது நாளான இன்று, உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, அதிபர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதில் மின்சாரம், வர்த்தகம், பாதுகாப்பு ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உக்ரைன் போர் விவகாரம் குறித்தும் இரு தலைவர்கள் ஆலோசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரஷ்யாவில் வாழும் இந்திய வம்சாவளிகளையும் பிரதமர் மோடி இன்று சந்தித்து பேச உள்ளார். அத்துடன் ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு ஆஸ்திரியாவுக்கு மோடி புறப்பட்டுச் செல்வார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரியாவுக்கு இந்திய பிரதமர் மேற்கொள்ளும் முதல்
பயணம் இது.

The post ரஷ்யாவில் உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடிக்கு மாஸ்கோவில் உற்சாக வரவேற்பு: அதிபர் புடினுடன் இன்று பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : PM ,Modi ,Moscow ,Russia ,President Putin ,India ,Delhi ,President ,Vladimir Putin ,Putin ,Dinakaran ,
× RELATED நாடு முழுவதும் பா.ஜ உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி