புதுடெல்லி: நாடு முழுவதும் பா.ஜ உறுப்பினர் சேர்க்கையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் பா.ஜ சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. டெல்லி பா.ஜ தலைமை அலுவலகத்திற்கு சென்ற பிரதமர் மோடி, தனது செல்போன் மூலம் மிஸ்டு கால் கொடுத்து தனது உறுப்பினர் அட்டையை புதுப்பித்துக் கொண்டார். அவருக்கு புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அட்டையை பாஜ தலைவர் ஜே.பி.நட்டா வழங்கினார். அதன் பிறகு நாடு முழுவதும் பா.ஜ உறுப்பினர் சேர்க்கையை பிரதமர் மோடி முறைப்படி தொடங்கி வைத்தார்.
அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: அரசியல் அமைப்புகள் உள் ஜனநாயகத்தைப் பின்பற்றாதபோது என்ன நடக்கும் என்பதற்கு எதிர்க்கட்சிகளில் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. எனவே இந்த உறுப்பினர் சேர்க்கை மூலம் பாஜ தன்னை மேலும் வளர்த்துக் கொள்ளும்போது, சட்டசபைகளிலும், மக்களவையிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும். 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பாஜவின் உறுப்பினர் சேர்க்கையின் போது, ஏற்கனவே உள்ள உறுப்பினர் சேர்க்கைகள் புதுப்பிக்கப்பட்டு, புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுகின்றனர். எனவே கட்சியினர் புதுமையாக சிந்தித்து, எல்லையோர கிராமங்களை கட்சிக்கு கோட்டையாக மாற்ற வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மோசடிகள் குறித்த தலைப்புச் செய்திகள் புதிய தலைமுறையினருக்குத் தெரியாது.
எனவே உறுப்பினர் சேர்க்கையின் போது 18-25 வயதுக்குட்பட்டவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ஜ மக்களவை தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட போது 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. தற்போது அதன் எழுச்சி முழு தேசம் முழுவதும் பரவி உள்ளது என்றால் அதற்கு காரணம் மக்கள் நலன் என்ற சித்தாந்தமும், அதற்காக உழைத்த அர்ப்பணிப்பும்தான் காரணம். பா.ஜவும், அதன் முன்னோடியான ஜனசங்கமும் கேலி செய்யப்பட்டன. ஆனால் இன்று பா.ஜ நாட்டை பெருமிதப்பட வைத்துள்ளது. நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்ற பா.ஜ நிறைய உழைத்துள்ளது. எனவே புதிய உறுப்பினர்களை ஒருகுடும்பமாக வரவேற்க வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.
The post நாடு முழுவதும் பா.ஜ உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.