×
Saravana Stores

புரந்தரதாசரின் ஆசையை நிறைவேற்றிய விஜயதாசர்!

ஸ்ரீவிஜயதாசர், பிருகு மகரிஷியின் அம்சஸம்பூதர் ஆவார். மத்வ மதத்தில், தாஸசாஹித்யத்திற்கு பெரும் பங்களிப்பை அளித்த, அஷ்டதாஸர்களில், மிக முக்கியமான ஸ்தானத்தில் போற்றப்படுபவர். திரேதாயுகத்தில், `ஸூரலீ’ என்ற கபியாக அவதரித்து, ஸ்ரீராமபிரானுக்கு சேவை புரிந்தவர். திவாபரயுகத்தில், `நிகம்பனாக’ பிறந்து, ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிற்கு ஸகாவாக (தோழனாக) இருக்கும் பாக்கியத்தைப் பெற்றவர். கலியுகத்தில், ஸ்ரீபுரந்தரதாசரின் வீட்டு கன்றுக் குட்டியாகவும், பின்னர் ஸ்ரீபுரந்தரதாசரின் மகன் மத்வபதியாகவும் அவதரித்து, மீண்டும் அவரே தாசரின் அனுகிரகத்திற்கு பாத்திரராகி, ஸ்ரீவிஜயதாசராகவும் அவதரித்தார்.

ஸ்ரீவிஜயதாசர், 1682-ல் துங்கபத்திரா நதி தீரத்தில் உள்ள சீக்லபர்வியில், ஸ்ரீநிவாச-கூஸம்மா தம்பதியருக்கு மகனாக `தாஸப்ப’ (கூஸி மகதாஸ) என்ற பெயரில் அவதரித்தார். சிறுவயதிலிருந்தே வறுமையில் திளைத்து வந்த சூழ்நிலையில், தனது 14-வது வயதில், அரஸம்மா என்ற கன்னிகையை மணந்துக் கொண்டார். இதனால், மேலும் அவரை வறுமை வாட்டி வதைக்க, விரக்தியினால் காசி ஷேத்திரம் சென்று, சத்ஸங்கத்தில் ஈடுபட்டார்.

அதன் பயனால், பக்தி உணர்வு மேலிட, ஸ்வப்னத்திலேயே (கனவில்) பகவான் ஸ்ரீவேதவியாசர், புரந்தரதாசரின் ரூபத்தில் தோன்றி, காசிக்கு அழைத்துச் சென்று, வியாசபகவான் மூலமாக நாவினில் `விஜய’ என்னும் பீஜாக்ஷரத்தை எழுதி, அனுகிரகம் செய்ய, “விஜயதாசராக’’ பரிமளித்து “விஜய விட்டல’’ என்ற முத்திரையில், பல தேவர நாமாக்களை (பக்தி பாடல்கள்) இயற்றி, தாசஸாஹித்யத்திற்கு பெரும் பங்களித்தவர்.

அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த திருப்புமுனைக்குப் பின், பகவத் அருளால், நித்ய அன்னதானம், பிராமண போஜனம், கன்யாதானம், தர்ம உபநயனம் என பல சத்காரியங்களைச் செய்தவர். ஸ்ரீபுரந்தரதாசரின் ஐந்து லட்சம் தேவர நாமாக்களை இயற்றும் சங்கல்பத்தில், அதில் 25000 குறைய, தாசர், தனது மகன் மத்வபதியை அழைத்து, மீதமுள்ளதை முடிக்க ஆணையிட்டார். அவரே ஸ்ரீவிஜயதாசராக அவதரித்து, ஸ்ரீபுரந்தரதாசரின் சங்கல்பத்தை நிறைவு செய்துள்ளார். கோபாலதாசர், மோஹனதாசர், வேணுகோபாலவிட்டலதாசர், வியாசவிட்டலதாசர் போன்ற 60-க்கும் மேற்பட்ட சிஷ்யர்களுக்கு, அங்கிதம் அளித்தவர். பாரததேசம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டு, மத்வசித்தாந்தத்தை தாசஸாஹித்யத்தின் மூலம் பரப்பி, பாமரர்களுக்கும் பக்தியையும், ஞானத்தையும் ஊட்டியவர் தாசர்.

திருப்பதி க்ஷேத்திரத்திற்கு இவர் மேற்கொண்ட யாத்திரை, கணக்கிலடங்காதது. பதங்கள், விருத்த நாமங்கள், பத்யங்கள், கீர்த்தனைகள், உகாபோகங்கள் மற்றும் கத்யங்கள் எனப் பலவகைகளிலும் தாசாஹித்யத்திற்கு வித்திட்டவர் நம் விஜயதாசர்.விசேஷமாக, வேத சாஸ்திர உபநிஷத்துக் களின் சாரத்தை, மிகச் சுலபமான வகையில், “ஸூளாதிகளாக’’ அளித்து, `ஸூளாதி தாசர்’ என்று பலராரும் போற்றப்படுபவர். 1755-ல், தமது 73-வது வயதில், கார்த்திகை சுத்த தசமியன்று, பாஸ்கர க்ஷேத்திரமான சிப்பகிரியில் அவதாரத்தை பூர்த்தி செய்து, இன்றும் வேண்டும் பக்தர்களின், மனோபீஷ்டங்களை நிறைவேற்றி ஞானம், பக்தி மற்றும் வைராக்கியத்தை அருளிவருகிறார் ஸ்ரீவிஜயதாசர்.

S.லக்ஷ்மிபதிராஜா

The post புரந்தரதாசரின் ஆசையை நிறைவேற்றிய விஜயதாசர்! appeared first on Dinakaran.

Tags : Vijayadasa ,Purandaradasa ,Srivijayadasa ,Bhrigu Maharishi ,Ashtadasas ,``Suralee'' ,Sri Ramaphiran ,Divaparayuga ,Shrikrishna Paramatma ,
× RELATED தாஸா புரந்தரதாஸா