சிலர் எந்த நேரமும் கோயிலே கதியென்று கிடக்கிறார்கள்… இறைவன் பெயரை சும்மா சொல்லிக்கொண்டிருந்தால் சாப்பாடு கிடைத்து விடுமா?
– ஆர்.ராஜசேகரன், திருக்கோயிலூர்.
கோயில் திருவிழா நடந்துகொண்டிருந்தது. பக்தி பரவசத்தில் எல்லோரும் இறைவன் புகழ்பாடும் பாமாலை ஒன்றை பாடிக் கொண்டிருந்தனர். அந்த வழியாக பக்கத்து ஊர் இளைஞன் ஒருவன் வந்தான். அவனுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.‘ஏன் இப்படி கூச்சல் போடுகிறீர்கள்?’ என்று கூட்டத்தைப் பார்த்து கேட்டான். ஒரு பெரியவர் அன்பாக சொன்னார். ‘தம்பி! இறைவனைப் பழிக்காதே. அவனை விட, அவன் நாமாவுக்கு பெருமை அதிகம். அவன் நாமாவை ஜெபித்தால் எல்லா நலனும் கிடைக்கும்’ என்றார்.‘அவர் நாமாவை ஜெபித்தால் சாப்பாடு கிடைக்குமா?’ என்று கேலியாக கேட்டான் இளைஞன். ‘நிச்சயமாக. இறைவன் உன் வாயில் உணவை ஊட்டுவார்’ என்றார் பெரியவர்.அவனுக்கு சோதித்துப் பார்க்க ஆசை. அருகிலிருந்த காட்டுக்கு சென்றான். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில், ஒரு பெரிய மரத்தை தேர்ந்தெடுத்து, அதன் உச்சாணிக் கிளையில் அமர்ந்து கொண்டான். இறைவன் நாமத்தை விடாமல் ஜெபிக்க ஆரம்பித்தான். ‘இறைவன் எப்படி வந்து ஊட்டுவார் பார்ப்போம்’ என்று கேலியாக சொல்லிக்கொண்டான்.கொஞ்ச நேரத்தில் ஒரு வழிப்போக்கன் அந்த மரத்தடியில் வந்து அமர்ந்தான். தான் கொண்டு வந்திருந்த சாப்பாட்டு மூட்டையைப் பிரித்து சாப்பிட்டான். மீதியை திரும்பவும் கட்டி, தலைக்கடியில் வைத்து தூங்கினான். நீண்டநேரம் கழித்து எழுந்த அவன், அவசரமாக கிளம்பும்போது சாப்பாட்டு மூட்டையை அங்கேயே மறந்து வைத்துவிட்டு போயேவிட்டான். இருட்டும் நேரத்தில் ஒரு கொள்ளையர் கூட்டம் வந்தது. தாங்கள் கொள்ளையிட்ட நகை மூட்டைகளை பிரிக்கும் நேரத்தில், ஒரு கொள்ளையன் சாப்பாட்டு மூட்டையைப் பார்த்து பிரித்தான். சாப்பிடலாமா என யோசிக்கும் நேரத்தில் கொள்ளையர் தலைவனுக்கு சந்தேகம். ‘தங்களைக் கொல்ல யாராவது விஷம் கலந்த சாப்பாட்டை இங்கே போட்டிருப்பார்களா?’ என்ற யோசனையோடு சுற்றும் முற்றும் பார்த்த அவன் கண்ணில் மரத்தின் மீது ஒளிந்திருந்த இளைஞன் பட்டான். அவனை அதட்டி கீழே இறக்கிய தலைவன், ‘பொடிப்பயலே! சாப்பாட்டில் விஷம் வைத்து எங்களையா கொல்லப் பார்க்கிறாய்? இந்த விஷத்தை நீயே சாப்பிடு’ என அவனை பேசவே விடாமல் சாப்பாட்டை வாயில்
திணித்தான்.இறைவன் எப்படி ஊட்டுவார் என்பது அவனுக்கு புரிந்தது. அவன் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.
கிருஷ்ண பகவான், அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்யும் படத்தினை வீட்டில் வைத்தால், ‘கலகம்’ வரும் என்கிறார்களே?
– ஜி.புவனேஸ்வரி,
வத்திராயிருப்பு.
கலகமா? மனக் கலக்கத்துக்கு விளக்கம்தானே பகவத் கீதை! எங்கும், எதிலும், எதற்கும், எப்போதும் நடுநிலை மனது வேண்டும் என்றுதானே கீதை போதிக்கிறது? உயர்வு வந்தால் துள்ளாமையும், தாழ்வு வந்தால் துவளாமையும் வேண்டும் என்ற படிப்பினை நல்குவதுதானே கீதை? சோர்ந்துபோயிருக்கும் அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் வழங்கும் அற்புத மருந்தல்லவா அது! அப்படி உபதேசிக்கும் காட்சி வீட்டுக்குள் இருப்பதால் எந்தத் தீமையும் வராது. அந்தப் படத்தைப் பார்க்கும்போதெல்லாம் எதையும் நடுநிலையாக அணுகும் மனப்பக்குவம் வரவேண்டும் என்ற நம்பிக்கையும் வளருமானால் அதுதான் சிறப்பு.
ஜோதிடத்தில் வாக்கிய பஞ்சாங்கம், த்ருக்கணித பஞ்சாங்கம் என இருவித கணிப்புகள் சொல்லப்படுகின்றன. இதனால் பலன்கள் வேறுபடுமா? தயவுசெய்து விளக்கவும்.
– சு.ந.ராசன்,சென்னை.
ஜாதகங்களை கணிப் பதில் பல்வேறு முறைகள் உள்ளன. நமது இந்தியாவில் வாக்ய கணிதம், திருக்கணிதம் மற்றும் எபிமெரிஸ் ஆகிய முறைகளில் பெரும்பாலான ஜோதிடர்கள் ஜாதகங்களை கணிக்கிறார்கள். அதிலும் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான அயனாம்ச கணக்குகளைப் பயன்படுத்துவார்கள். ஒரு ஜோதிடர் எந்த முறையில் தனது அறிவினை வளர்த்துக் கொண்டிருக்கிறாரோ அல்லது எந்த முறையை அவர் தெளிவானது என்று நம்புகிறாரோ அந்த முறையில் அவர் ஜாதகத்தைக் கணித்து பலனுரைக்கிறார். இதில் இந்த முறைதான் சரியானது, மற்றவை தவறானவை என்று சொல்லக் கூடாது. எந்த முறை நமக்கு ஒத்துப்போகிறதோ அதைப் பின்பற்ற வேண்டும். அதற்காக நேரத்திற்குத் தக்கவாறும் நமது மனநிலைக்குத் தக்கவாறும் அவ்வப்போது மாற்றிக்கொள்ளக் கூடாது. எளிதில் புரியும்படியாக சொல்ல வேண்டும் என்றால் சென்னையில் இருந்து பெங்களூர் செல்வதற்கு சாலை வழியில் வேலூர், கிருஷ்ணகிரி, ஓசூர் வழியைப் பயன்படுத்தலாம். அதே போன்று ராணிப்பேட்டை, சித்தூர் வழியாகவும் பெங்களூர் செல்லலாம். இதே போல ரயில் மார்க்கத்தில் செல்லும்போது அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை என்று வேறு ஒரு மார்க்கத்தில் பெங்களூரை நோக்கி பயணிப்போம். ஆகாய மார்க்கத்திலும் பெங்களூர் செல்ல இயலும். நமது குறிக்கோள் பெங்களூரைச் சென்று அடைய வேண்டும் என்பதுதான். அதுபோல ஜாதகத்தைக் கொண்டு நமக்கு நடக்கும் பலன்களை அறிந்துகொள்வதுதான் நமது நோக்கமாக இருக்க வேண்டும். ஜோதிடரும் எது சுலபமான முறை என்று அவர் எண்ணுகிறாரோ அந்த முறையில் மட்டும்தான் கணித்து பலன் சொல்ல வேண்டுமே தவிர அனைத்து முறைகளையும் கையில் எடுத்துக்கொண்டு குழப்பிக் கொள்ளக்கூடாது. அவ்வாறு ஏதேனும் ஒரு முறையில் மட்டும் ஜாதகப்பலன் அறியும் பட்சத்தில் தவறு உண்டாவதற்கான வாய்ப்பே இல்லை. எந்த முறையைக் கையாண்டாலும் பலன்கள் நிச்சயமாக மாறாது.
The post தெளிவு பெறுவோம்! appeared first on Dinakaran.