×

தாஸா புரந்தரதாஸா

நன்றி குங்குமம் ஆன்மீகம்

கனக தாசர், கோபால தாசர், நரசிம்ம தாசர், விஜய தாசர், ஜெகன்நாத தாசர், மோஹன தாசர், ஷாமசுந்தர தாசர், வேணு கோபால தாசர் என பல தாசகர்கள் இருந்தபோதிலும், “புரந்தரதாசருக்கு” என்று தனி முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தாஸரா? அப்படி என்றால் என்ன என்று பலரின் மனதில் கேள்வி எழும். நம் தமிழ்நாட்டில், கடவுளின் மீது சதா.. சர்வ காலமும் பக்திப் பாடல்களைப் பாடியும், இயற்றியும் இருப்பவர்களை பாகவதர் என்று கூறுவோம். அது போல, துவைத சித்தாந்தத்தில், குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் `தாசர்’ என்று கூறுகிறார்கள்.

புரந்தரதாஸரின் பிறப்பு முதல் இறப்பு வரை அவரின் வரலாறுகள், அவர் இயற்றிய பக்தி பாடல்கள் என அனைத்தையும், விரிவாக இந்த தொகுப்பில்
காண்போம்.ரத்தின வியாபாரியான வரதப்ப நாயக்கருக்கும், கமலாம்பாளுக்கும் மகனாக, 1470 – ஆம் ஆண்டு, கர்நாடக மாநிலத்தில், புரந்தடகட எனும் ஊரில் பிறந்தார். ஆரம்பத்தில், ஸ்ரீனிவாசநாயகர் என்னும் பெயரை, புரந்தரதாசருக்கு அவரின் பெற்றோர்கள் சூட்டினார்கள். அதன் பின்பு, இளமைப் பருவத்தில் சீனப்பா, திம்மப்பா, திருமலையப்பா என்ற பல பெயர்களிலும் தாசரின் பெற்றோர்கள் செல்லமாக அழைத்தனர்.

பதினாறாம் வயதில், சரஸ்வதிபாய் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் ஸ்ரீனிவாச நாயகர். தன் பெற்றோரின் மீதும், மனைவியின் மீதும் அதீத அன்புகொண்டவர். தனது இருபதாம் வயதில், பெற்றோரை இழந்தார். இந்த இழப்பு அவரை வெகுவாகப்பாதித்திருந்தது. தன் தந்தையின் ரத்தின வியாபாரத்தையே, தானும் வியாபாரம் செய்யத் தொடங்கினார். செல்வம் ஈட்டி, பெரும் பணக்காரராக `நவகோடி நாராயணன்’ என்னும் பெயருடன் வலம்வந்தார். இருப்பிலும், கருமியிலும் கருமி. கஞ்சம் என்று சொல்வார்களே.. அது நவகோடி நாராயணனுக்கு மிகவும் பொருந்தும்.

ஒரு நாள், பகவான் பாண்டுரங்கன், யாசகம் கேட்கும் வயோதிக ரூபத்தில், கூடவே ஒரு சிறுவனையும் அழைத்து, ஸ்ரீனிவாச நாயகரின் கடைக்கு முன்னால் வந்து நின்றனர். ஸ்ரீனிவாச நாயகரோ, யாசகம் கேட்கும் வயோதிகரை கண்டாலே எரிச்சல் ஆகிவிடுவார். “இன்னும் ஒருவர்கூட கடைக்கு வந்து பொருட்களை வாங்கவில்லை அதற்குள் உனக்கு நான் தர்மம் செய்யவேண்டுமா? அடுத்த ஆட்களை பாரு.’’ என்று வயோதிக ரூபத்தில் வந்த பாண்டுரங்கனை துரத்தினார்ஸ்ரீனிவாச நாயகர்.

பாண்டுரங்கனின் நாடகம் ஆரம்பமானது.“ஸ்ரீனிவாச நாயகரே… நான் மிகவும் தரித்திரத்தில் இருக்கிறேன். என் அருகில் இருக்கும் எனது பேரனுக்கு உபநயன (பூணூல்) செய்ய வயது நெருக்கிவிட்டது. பெரிய மனம் படைத்த, பணக்காரனாக இருக்கும் நீங்கள், உபநயனத்திற்கு உதவிகளை செய்து, புண்ணியங்களை பெற வேண்டுகிறேன்’’ என்றார் வயோதிகர்.
“அவனுக்கு வயதாகிவிட்டது என்றால் நான் என்ன செய்யமுடியும்? அப்புறம் ஒரு நாள் வா.. பார்ப்போம்” என்று விரட்டும் தோரணையில் நாயகர் கூறினார்.
“பிறகு என்றால் எப்போது” என்று அழும் குரலில் கேட்க.

“எட்டு நாட்கள் கடந்து வா..” என்றார் ஸ்ரீனிவாச நாயகர். நாட்கள் கடந்தன. இன்று போய் நாளை வா.. என்கின்ற கதையாக, ஆறு மாதங்கள் நடையாய் நடந்தார் வயோதிகர். என்ன காரணத்தை கூறினாலும், இந்த தரித்திர வயோதிகன் என்னை விடுவதாக தெரியவில்லையே.. என்று எண்ணிய வாறு, ஒரு பெரிய சுருக்குப் பையை எடுத்து, அதனை திறந்து அதனுள் இருக்கும் எண்ணற்ற பல பொற்காசுகளை இறைத்து,“இதோ பாரு… இதில் இருக்கும் ஒரு பொற்காசை எடுத்துக்கொண்டு இங்கிருந்து சென்றுவிடு’’ என்று அதட்டும் தோரணையில் கோபமாக நாயகர் சொல்ல, சிரித்துக் கொண்டே அதனை வாங்க மறுத்த வயோதிகன்,“ம்.. இது உங்களிடத்திலேயே இருக்கட்டும் நாயகரே. பிற்காலத்தில் அவை உங்களுக்கே தேவைப்படலாம்” என்று சொல்லி அங்கிருந்து சென்றுவிட்டார்.

“சனி தொலைந்தான்” என்று சந்தோஷமடைந்தான் நாயகர்.அங்கிருந்து கிளம்பிய வயோதிகன், ஸ்ரீனிவாச நாயகரின் வீட்டிற்கு சென்றான். அங்கு, நாயகரின் மனைவி சரஸ்வதிபாய், துளசி பூஜை செய்து கொண்டி இருந்தார். வயோதிகரை கண்டாள் சரஸ்வதிபாய்.

“முதியவரே தாங்கள் யார்? தங்களின் ஊர் எது? தாங்கள் வந்த காரணம் என்ன?’’

“என் பெயர் நாராயணாச்சார். வைகுண்டம் என்னுடைய ஊர். என் பேரனுக்கு உபநயனம் செய்ய முடிவு செய்து தேதி முடிவாகிவிட்டது. நீங்கள் பெரிய பணக்காரர் என்று கேள்விப்பட்டேன், தயவு செய்து உதவி செய்யுங்கள்’’. “வயோதிகரே.. என் கணவரை கேட்காமல், தன்னிச்சையாக என்னால் உதவி செய்ய முடியாது. நான் என்ன செய்ய..?” என்று வருத்தத்துடன் தெரிவிக்க, “சரிதான். ஆனால், உன் மூக்கில் உள்ள மூக்குத்தியை என்னிடம் கொடுக்கலாம். அதை தருவதற்கு உனக்கு முழு சுதந்திரம் உள்ளது. அதை விற்று, அதில் வந்த பணத்தை வைத்து எனது பேரனின் உபநயனத்தை முடித்துவிடுகிறேன். பெரிய மனசு பண்ணு தாயி’’ என்று கெஞ்சுகிறார்.

“உபநயனம் செய்வதற்காக, அதுவும் நல்ல காரியத்திற்காக முதியவர் உதவி கேட்கிறார். எப்படி இல்லை என்று சொல்வது? மூக்குத்தியினை கொடுத்தால் கணவர் நம்மை கொன்றுவிடுவார்’’. என மனம் நொந்து, அழுதுகொண்டே பாண்டுரங்கனை வேண்டிக்கொண்டார். மனதை தைரியப்படுத்திக் கொண்டு, தான் அணிந்திருந்த மூக்குத்தியை கழற்றி, `கிருஷ்ணார்ப்பணம்’ என்று சொல்லி, வயோதிகனிடம் கொடுத்தார். அதை பெற்றுக்கொண்டு, நேராக ஸ்ரீனிவாசநாயகரின் கடைக்கு சென்றார்.

“நாயகரே… இந்த மூக்குத்தியை வைத்துக் கொண்டு, எனக்கு பணம் தாருங்கள்’’. என்று சரஸ்வதிபாய் கொடுத்த மூக்குத்தியினை எடுத்து நீட்டினார், முதியவர். அதை கண்ட நாயகருக்கு, இந்த மூக்குத்தி சரஸ்வதி பாய் அணியும் மூக்குத்தி போல் உள்ளதே? என யோசித்தார் ஸ்ரீனிவாசநாயகர்.“என்ன யோசிக்கிறீர்கள்..? நானூறு ரூபாய் தருவதாக இருந்தால் தாருங்கள். இல்லை என்றால் நான் வேறு கடைக்கு சென்றுவிடுகிறேன்’’ என்று மூக்குத்தியினை அங்கையே விட்டுவிட்டு விறுவிறு என்று நடையைக்கட்டினார்.

அந்த நடையை பார்த்த நாயகருக்கு, ஏதோ வினோதமான நடையாக இருக்கிறேதே? என்ற ஐயப்பாடுகள் தோன்ற, தனது உதவியார்களை அனுப்பி, முதியவர் எங்கே செல்கிறார் என்பதனை பார்க்கச் சொன்னார். உதவியாளரும், முதியவரை பின்தொடர்ந்தார். சற்று தூரத்தில் பாண்டுரங்கன் கோயில் அருகில் முதியவரும்,
சிறுவனும் மறைந்துவிட்டார்கள்.

ஆச்சரியப்பட்டான் உதவியாளர்.நடந்தவற்றை அனைத்தையும் ஸ்ரீனிவாசநாயகரிடம் தெரிவித்தான். கோபமடைந்து, அந்த மூக்குத்தியை சின்ன சம்படத்தில் வைத்து மூடி, அந்த சம்படத்தை ஒரு பெரிய பெட்டியில் வைத்து மூடி, அதனை அந்த கால லாக்கரில் வைத்து மூடிவிட்டு, சரஸ்வதிபாயை காண வீட்டிற்கு சென்றார், நாயகர். அங்கு சரஸ்வதிபாய் பூஜையில் இருந்தார்.
அவரின் மூக்கை கண்ட நாயகர், மூக்கில் மூக்குத்தி இல்லாததை கண்டு கடும் கோபம் கொண்டார்.

“சரஸ்வதி… எங்கே உன் மூக்குத்தி’’?“பூஜையை முடித்த பிறகு எடுத்து தருகிறேன் சுவாமி’’“அதுவரை என்னால் காத்திருக்க முடியாது. எனக்கு இப்பவே வேண்டும். இல்லையென்றால் மூக்குத்தியினை வைத்திருக்கும் இடத்தையாவது சொல். நானே தேடிக் கண்டுபிடித்து எடுத்துக் கொள்கிறேன்.’’ என்று வீடு முழுவதும் தேடத் தொடங்கினார்.பயத்தில் செய்வதறியாது சரஸ்வதிபாய், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, தான் கையில் அணிந்திருந்த வைர மோதிரத்தை இடித்து பொடியாக்கி, தண்ணீரில் கலந்து அதனை விஷமாக மாற்றி தற்கொலைக்கு ஆயத்தமானாள். அந்த விஷத்தை பருகும் சமயத்தில், அதினுள் ஒரு ஒளி மின்னியது. அதை கையில் எடுத்து பார்த்தாள் சரஸ்வதிபாய். அதிர்ந்து போனாள். காரணம், அது அவள் அணிந்திருந்த மூக்குத்தி.

“அப்போது.. யாசகம் தேடிவந்தவர், சாக்ஷாத் ஸ்ரீ மந் நாராயணனா!.. என் பாண்டு ரங்கனா!…’’ என ஆனந்தக் கண்ணீரில் மிதந்தாள். தேடிக்கொண்டிருக்கும் தன் கணவரிடத்தில் ஓடினாள்.

“இதோ.. பாருங்கள் மூக்குத்தி’’ என்று மூக்குத்தியை காட்டினாள். மூக்குத்தியை கண்டதும் பிரம்மை பிடித்தவன் போல், மாறினான் ஸ்ரீனிவாச நாயகர். கடையில் பூட்டி வைத்த மூக்குத்தி எப்படி சரஸ்வதி கையில்? என குழம்பியபடியே கடைக்கு சென்றான். மூக்குத்தி பூட்டி வைத்த பெட்டியை திறந்து பார்த்தான். மூக்குத்தி காணவில்லை. ஆச்சரியத்தில் உறைந்து போனான். மீண்டும் அங்கிருந்து வேகவேகமாக வீட்டிற்கு வந்தான் நாயகர்.

நடந்தவற்றை அனைத்தையும், சரஸ்வதிபாயிடம் தெரிவித்தான். சரஸ்வதியும் நடந்ததை தெரிவிக்க, தன்னையே அறியாமல் ஸ்ரீனிவாசநாயகர் அழத் தொடங்கினார்.“என் கண்கள் முன்னே வந்தது பரந்தாமா.. என்பதுகூட தெரியாமல், பல முறை விரட்டினேனே.. நான் எத்தகைய பாவத்தினை செய்துவிட்டேன். ஐயோ… ஹே… பாண்டுரங்கா… வயோதிகனாக வந்த நீ… மீண்டும் அதே ரூபத்தில் எனக்கு காட்சி தரும் வரை, அன்ன ஆகாரமின்றி உன்னையே தியானித்து, உனது நாம ஸ்மரணத்தை ஜபிக்கப் போகிறேன்.’’ என்று தியானம் செய்ய தொடங்கினான் ஸ்ரீனிவாசநாயகர்.

தன் பதியே உபவாசம் இருக்குபோது, சரஸ்வதி என்ன செய்வாள்? அவளும் உபவாசம் இருந்து பாண்டுரங்கனை தியானம் செய்ய தொடங்கினாள். இப்படியாக மூன்று நாட்கள் கடந்தன. நான்காவது நாள் காலை, துளசி பூஜை செய்துகொண்டிருந்த சரஸ்வதியின் முன்னால் மந் நாராயணன் தோன்றினார்.“மூன்று நாட்களும், உபவாசம் இருந்து எம்மை தியானித்ததாலும், நாம ஸ்மரணம் செய்ததாலும் உன் கணவனின் துர்குணங்கள் பஸ்மமாகிவிட்டது. ஆனால், உங்களிடம் இருக்கக் கூடிய ஐஸ்வர்யங்களை பூர்ணமாக (முழுவதும்) நீங்கள் விட்டு
விடவில்லை.

உங்களிடம் இருக்கக் கூடிய அனைத்தையும் தியாகம் (வீடு, பொன், பொருட்கள்) செய்து என் தாசனானால், உன் கணவருக்கு எனது தரிசனம் லகுவாக (விரைவாக) கிடைக்கும். என உனது கணவரிடத்தில் சொல்’’. என்று கூறி மறைந்தார். பகவான் கூறிய தகவல்களை, தனது கணவரிடத்தில் கூறினால், சரஸ்வதி.“இந்த பொன்னாலும், பொருளாலும் பகவானை காணும் வாய்ப்பு பறிபோய்விட்டதே. சரஸ்வதி… உன் முன் தோன்றிய பகவான், எங்கு தோன்றினான்? தோன்றிய இடத்தையாவது காட்டு.’’ என உருகினான் நாயகர்.

பகவானைப் பார்த்தே… ஆகவேண்டும் என்கின்ற வைராக்கியத்தோடு, தன் மனைவி, பிள்ளைகளை அழைத்துக் கொண்டு, உடுத்திய துணிகளோடு வீட்டைவிட்டு வெளியேறினார் ஸ்ரீனிவாசநாயகர்.வீட்டின் வெளியே வந்ததும், அருகில் இருந்த துளசி மாடத்திலிருந்து ஒரு துளசியை பறித்து, அதனை வீட்டின் மீது வைத்து, “ கிருஷ்ணார்ப்பணம்’’ என்று சொல்லி திரும்பிப் பார்க்காமல் தன் குடும்பத்தோடு வெளியேறினான். இதை கண்டஊர் மக்களுக்கோ, ஆச்சரியம் ஏற்பட்டது.

அதன் பிறகு, பகவானின் நாம சங்கீர்த்தனைகளை சொல்லியவாறே சஞ்சாரங்ககளை மேற்கொண்டார். ஸ்ரீனிவாசநாயகரை பின்தொடர்ந்த வாறே, சரஸ்வதி மற்றும் குழந்தைகள் சென்றனர். செல்லுமிடமெல்லாம் இவரின் பாடல்களைக் கேட்ட பக்தர்கள், பிட்சையிட்டனர் (அன்னம்). அதனை பாண்டுரங்கனுக்கு நிவேதனம் செய்து, அதன் பிறகே உண்ணுவார்கள்.
ஒரு நாள், ஸ்ரீனிவாச நாயகரின் கனவில், பாண்டுரங்கன் தோன்றினான்.

“மகான் ஸ்ரீ வியாசராஜ தீர்த்தரிடம் சென்று, உபதேசம் பெற்று, ஹரிதாஸன் ஆகுக’’ என்று கட்டளையிட்டார். அதன்படி, உடனடியாக வியாசராஜரை காண ஹம்பி என்னும் இடத்தை நோக்கி செல்ல தொடங்கினார் (ஹம்பி கர்நாடக மாநிலத்தில் உள்ளது) சற்று தூரம் சென்றவுடன் சரஸ்வதி தயங்கித்தயங்கி நடந்தாள். இதனை கவனித்த நாயகர்,
“சரஸ்வதி.. ஏன் ஒரு வினோதமாக தயங்கி நடந்து வருகிறாய்’’?
“ஏதோ.. பயமாக இருக்கிறது.’’

“பயமா!.. ஹா…ஹா…’’ என்று சிரித்தவாறு, சரஸ்வதி கையில் வைத்திருக்கும் மூட்டையை பார்த்து,“இதில்… என்ன வைத்திருக்கிறாய்’’“ஒன்றுமே இல்லையே’’ என சரஸ்வதி மூட்டையை திறந்து காட்டினாள். அதில் தங்கச்சொம்பு ஒன்று மின்னியது.“உன் அச்சத்திற்கு காரணம் இந்த தங்கச் சொம்புதான். அதனை விட்டெறி’’ என்று கூறிய மறு நிமிடமே, தங்கச் சொம்பினை தூக்கி எறிந்தாள். சரஸ்வதி பயமில்லாமல், கணவரின் பின்னால், பயணத்தை தொடர்ந்தாள்.நீண்ட பயணத்திற்கு பின், விஜயநகர சாம்ராஜ்ய கோயில்களை தரிசித்தப்படி செல்லும்போது, வழியினில் மகான் ஸ்ரீவியாசராஜர், சிஷ்யர்களுக்கு பாடங்களை போதித்ததை பார்த்தார். தன் கனவில் தோன்றி, பாண்டுரங்கன் கூறியதை எப்படி வியாசராஜரிடம் கூறுவது என்று தயங்கி தயங்கி ஒவ்வொரு அடியாக, முன்னும்பின்னும் வைத்து நடந்துக்கொண்டிருந்தார்.

ஆனால், நாயகரை கண்டவுடன், வியாசராஜருக்கு மகிழ்ச்சி. `நாயகருக்கு நல்லது ஆகட்டும். வா.. அருகில் வா… உன்னைப் பற்றி ஸ்ரீஹரி என்னிடம் ஏற்கனவே எல்லாவற்றையும் கூறிவிட்டான். கவலை வேண்டாம்’ என்று மகான் கூறியதும், மஹானின் கடாட்சம் பரிபூர்ணமாக கிடைத்துவிட்டது. இனி நம் வாழ்வில் வேறென்ன வேண்டும் என நினைத்து பூரிப்படைந்தான். சாஷ்டாங்கமாக காலில் விழுந்து வணங்கினான்.

மறுநாள் காலையில் ஸ்ரீவியாசராஜர், ஸ்ரீனிவாசநாயகரின் மனைவி மக்களை ஆசீர்வதித்து, ஸ்ரீனிவாசநாயகருக்கு மந்திர உபதேசத்தை செய்து வைத்தார். அதன் பின், ஸ்ரீனிவாச நாயகர் `ஹரிதாசன்’ ஆனார். `இனி நீ.. உன்னை அறியாது ஹரியின் மீது பல கீர்த்தனைகளை பாடுவாய். அதனை `புரந்தரவிட்டலனுக்கு’ அர்ப்பணம் செய்து, உன்னதமான முக்திக்கு செல்வாயாக’ என்று வியாசராஜர் கூறினார்.ஸ்ரீனிவாசநாயகர், `புரந்தரதாசராக’ மாறினார். குறைந்தது 5,00,000 (ஐந்து லட்சம்) கீர்த்தனைகளையாவது இயற்ற வேண்டும் என்ற சங்கல்பத்தை வைத்திருந்தார். ஆனால், சுமார் 4,75,000 கீர்த்தனைகளை பாடி இயற்றிவிட்டார். தனது மகனான மத்வபதிக்கு, சொச்சமுள்ள 25,000 கீர்த்தனைகளை இயற்றி முடிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி, மீதமுள்ள 25,000 கீர்த்தனைகளை மத்வபதி இயற்றிமுடித்தார்.

புரந்தரதாசர், 1564 – ஆம் ஆண்டு, தனது 95 வயதில் ஸ்ரீஹரியின் பாதகமலத்தில் முக்தியடைந்தார். அவர் முக்தியடைந்த சிறிது காலத்திற்குள், விஜயநகரப் பேரரசு வீழ்ச்சியடைந்தது என்றும் வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன. புரந்தரதாஸரின் எத்தனையோ பல அருமையான கீர்த்தனைகள் இருந்தாலும், நாதனமக்ரியா ராகத்தில், தாசர் இயற்றிய `தாசனா மாடிகோ என்னா’ என்னும் வைராக்கியப் பாடலை, பாடுபவர்கள் யாராக இருந்தாலும், மனமுருகுவோம். வரும் 09.02.2024 அன்று புரந்தரதாஸரின் புண்ணிய தினம். அன்று, அவர் இயற்றிய `தாசனா மாடிகோ என்னா’ பாடலை நாம் தியானிப்போம்.

`தாசனா மாடிகோ என்னா சுவாமி..
சாசிர நாமதா வெங்கடரமணா..
துர்புதிகலனெல்லா.. பிடிசோ…நின்னா..
கருநா கவச்சவென்னா.. ஹரநகே தோடிசோ..
சரணசேவே எனகே கொடிசோ.. அபய
கரபுஷ்ப என்னய ஷிரதல்லி முடிசோ..’

பொருள்: ஆயிரம் நாமங்கள்கொண்ட வெங்கடரமணா.. (சாசிர நாமதா) என்னை உமது அடியேனாக ஏற்றுக்கொள். தீய மனங்கள் அனைத்தையும் என்னிடமிருந்து அகற்று, உனது அனுதாபக் கவசத்தால், என் வாழ்க்கையை மூடி, உனது பாதங்களில் சேவை செய்ய எனக்கு வாய்ப்பளிக்கவும் (தோடிசோ). (முழுப் பாடலும் அதன்
பொருளும் இணையதளத்தில் உள்ளது).

தொகுப்பு: ரா.ரெங்கராஜன்

The post தாஸா புரந்தரதாஸா appeared first on Dinakaran.

Tags : Kanaka Dasara ,Gopala Dasara ,Narasimha Dasara ,Vijaya Dasara ,Jagannatha Dasara ,Mohana Dasara ,Shamasundara Dasara ,Venu Gopala Dasara ,
× RELATED வாசிப்பும் வழிபாடுதான்…