×
Saravana Stores

கவலைகளைப் போக்கிடும் கார்த்திகை மாதம்!

கார்த்திகை மாதம் அக்னி (நெருப்பு) பகவானுக்கு உரிய மாதமாகும்!சூரிய பகவான், அவரது நீச்ச வீடான துலாம் ராசியை விட்டு, அக்னிக் கிரகமான செவ்வாயின் ராசியான விருச்சிகத்திற்கு மாறி, அந்த ராசியில் வலம் வரும் மாதமே கார்த்திகை மாதமாகும்.திருக்கயிலை சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து சரவணப் பொய்கையில் தெரித்துவிழுந்த தீப்பொறிகளே ஆறு குழந்தைகளாக மாறின. தெய்வப் பெண்மணிகளான கார்த்திகைப் பெண்கள், அந்த ஆறு குழந்தைகளையும் வாரியெடுத்து, அணைத்தபோது, அவை ஒரே குழந்தையாக – ஆறுமுகப் பெருமானாகக் காட்சியளித்தன.அந்த இடம் (சரவணப் பொய்கை) திருக்கயிலையின் மலை மானஸ ஸரோவர் கரையில் சூரிய வம்சத்து மாமன்னர் மாந்தாதா தவமியற்றிய சிகரத்தில் உள்ளது, திருக்கயிலாய யாத்திரை செல்லும் பேறு பெற்றவர்கள் இன்றும் தரிசிக்கலாம் (இந்த ராசி பலன்களின் ஆசிரியர் ஏ.எம். ராஜகோபாலன்) தரிசித்துள்ளார். அதியற்புத தரிசனமாகும், அது!ஜோதிடக் கலையில், விருச்சிக ராசியும், மேஷ ராசியும், தீக் கிரகமாகிய செவ்வாயின் ஆட்சி வீடாகும். செவ்வாய் தோஷத்திற்கு முருகப் பெருமானின் தரிசனம் மிகச் சிறந்த பரிகாரமாகும். பகவான் ÿதிருக்கயிலை நாதன், அக்னி மலை வடிவமாக திருவண்ணாமலை திவ்ய திருத்தலத்தில் எழுந்தருளியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை மாதத்தில், குறிப்பிட்ட நன்னாளில், மலை மீது மிகப் பெரிய அளவில், தீபம் ஏற்றி வழிபடுகிறோம். அந்த வைபவத்தையே “ÿஅண்ணாமலையார் தீபம்” எனவும், “காத்திகை தீபம்” எனக் கொண்டாடி வருகிறோம். அதே நன்னாளில், மாலை நேரத்தில், ஒவ்வொருவர் வீட்டிலும், தீபங்கள் ஏற்றி வைத்துப் பூஜிக்கின்றோம்.

ஒவ்வொரு திருக்கோயிலிலும், “கார்த்திகை தீபம்” என்று விசேஷ தீபம் ஏற்றப்படும். இதனை “சொக்கப்பனை” என்று கூறுவர் பக்தர்கள். அன்று கோயிலின் பிரதான மூர்த்தி, “சொக்கப்பனை” ஏற்படுத்தப்பட்டுள்ள இடத்திற்கு எழுந்தருளுவார். அவருக்கு எதிரிேலயே, அந்த “சொக்கப்பனை”க்கு தீவைத்து “மகா தீபமாக” வழிபடுவது இன்றும் அனைத்து திருக்கோயில்களிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.திருவரங்கம் ÿரங்கநாதர், ÿரங்கநாயகி திருக்கோயிலில் “கார்த்திகை கோபுர வாசல்” என்றே பிரசித்தி பெற்ற கோபுர வாயில் உள்ளது. அங்குதான் சொக்கப்பனை ஒவ்வொரு கார்த்திகை மாதத்திலும்! உலகில் “அக்னி” (நெருப்பு) என்று ஒன்று இல்லையென்றால், நிலைமை என்னவாகும் என்று சற்று கற்பனை செய்து பார்த்தால், நம்மால் உணர்ந்து கொள்ள முடியும், அக்னியின் உயர்வை!இதுவே அக்னியின் அம்சமான கார்த்திகை மாதத்தின் தெய்வீகச் சிறப்பாகும். இனி, இம்மாதத்தில் நிகழவிருக்கும் தெய்வீக நிகழ்வுகளை – திருநன்னாட்களைக் காண்போம் வாருங்கள்!

கார்த்திகை 1, (16-11-2024) : விஷ்ணுபதி புண்ணியகாலம் – முடவன் முழுக்கு :

“அரிது, அரிது மானிடராதல் அரிது…
மானிடராயினும் கூன் குருடு
செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது”
– ஒளவைப் பிராட்டி

ஒரு ஊரில் அங்கஹீனமுடைய ஒருவர் (physically challenged), வாழ்ந்துவந்தார். தான் உடலால் ஊனமுற்றிருந்தாலும், இறைவன்பால் கொண்டிருந்த பக்தியும் – பிரேமையும் அளப்பரியது. தமிழ் மாத “ஐப்பசி நன்னாளில் அனைத்து புண்ணிய நதிகளும் கங்கையில் புனிதமாய் காவிரித் தாயிடம் சங்கமிக்கின்றது. இந்நன்னாளில் காவிரியில் ஸ்நானம் செய்தால் அனைத்து புண்ணிய நதிகளிலும் ஸ்நானம் செய்த பலனும், அதனால், அனைத்துவிதப் பாபங்களும் நம்மை விட்டு விலகிடும்” என்பதையறிந்த அவர், காவிரி நதியை நோக்கிப் புறப்பட்டார். கரையை நெருங்குவதற்குள்ளாகவே ஐப்பசி மாதம் முடிவுற்று, கார்த்திகை மாதம் பிறந்ததைக் கண்ட அவர், இறைவனை நினைந்து மனம் கலங்கிக் கண்ணீர் சிந்தினார்; உண்மையான பக்தர்களின் கண்ணீரைக் காணச் சகியாத பரம காருண்ய மூர்த்தியாகிய இறைவன் அவர்முன் தோன்றி, “ஐப்பசி மாதம் மட்டுமல்ல; கார்த்திகை மாத முதல் நாளில் காவிரியில் நீராடினாலும் அதே பலன்களைப் பெறலாம்!” எனத் திருவாய் மலர்ந்தருளினார். இறைவனைக் கண்ணாறக் கண்டதினாலும், காவிரியில் துலா ஸ்நானம் செய்ததினாலும், அவருடைய அங்கஹீனம் அனைத்தும் மறைந்து, கம்பீரத்துடனும், புன்முறுவலுடனும்,் ஆஜானுபாகுவாய், காவிரித் தாயை வணங்கினார். பக்தர்கள் அனைவரும் இந்நன்னாளில் காவிரியில் நீராடி அனைத்துவிதப் பாவங்களும் அகன்று, புண்ணியசாலிகளாக – பரம பாக்கியசாலிகளாக பரிமளிக்க வேண்டுகிறோம். மேலும் இன்று கிருத்திகை விரதம். இவ்விரதத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு, எவ்வாறு முருகப் பெருமானை கார்த்திகைப்் பெண்கள் சீராட்டி, தாலாட்டி, பாலூட்டி வளர்த்ததைப் போல், உங்கள் குடும்பத்தாரையும் அப்பெண்களே காப்பார்கள். மேலும், சகலவிதமான ஐஸ்வர்யங்களையும், அழகான, அறிவார்ந்த குழந்தைப் பேறுகளையும் வரமாகத் தந்தருள்வதாக “ÿகந்தபுராணம்” கூறுகிறது.

கார்த்திகை 3, (18-11-2024) : சித்த மகா புருஷர் கோரக்கர் (மிருகசீரிஷம்) திருநட்சத்திரம். இவரது ஜீவ சமாதி வடக்குப் பொய்கை நல்லூரில் அமைந்துள்ளது. முடிந்தவர்கள் இவரது ஜீவ சமாதிக்குச் சென்று மூன்று நெய் தீபங்கள் ஏற்றி வைத்துவிட்டு நமஸ்கரித்துவிட்டு, அமைதியாக, சித்த மகாபுருஷரை தியானித்தவாறு ஐந்து நிமிடங்கள் அமர்ந்துவிட்டு வாருங்கள். உங்கள் துயரங்களை (நீங்கள் சொல்லாமலேயே) அம்மகாபுருஷரால் உடனடியாக தீர்க்கப்படுவதைக் கண்கூடாகக் காண்பீர்கள். அங்கு செல்லமுடியாதவர்கள், உங்கள் வீட்டுப் பூஜையறையிலும் இதைச் செய்யலாம். அதே பலனை நீங்கள் அடைவது திண்ணம். (நாகப்பட்டினம் (பழைய பேருந்து நிலையம்) – ஈச்சங்குப்பம் – அக்காரப்பேட்டை வழியாக, வேளாங்கன்னி செல்லும் சாலையில் உள்ளது),

கார்த்திகை 8, (23-11-2024) : காலபைராஷ்டமி – சிவபெருமானின் சொத்தாகிய ஈரேழு பதினான்கு லோகங்களுக்கும் காவல் தெய்வமாகவும், நவக்கிரகங்களை தன்வசத்தில் வைத்திருப்பவரும், சிவபெருமானின் அம்சமும், காசி மாநகரின் காவல் தெய்வமாகவும் விளங்கும், இன்றைய தினத்தில் காலபைரவருக்கு ஐந்து எள்எண்ணெய் தீபம் ஏற்றி, தரிசனம் செய்து, எலுமிச்சை – சாதம் நிவேதனம் செய்து, ஏழை-எளியோர்க்கு விநியோகிக்க, மனோவியாதி (அநாவசிய பயம்) சனிதோஷம் விலகும், திருமணத் தடை விலகும், ஏவல், பில்லி -சூனியம் தீயினிற் தூசாகும். காரியசித்தியுண்டாகும். தீராத வியாதிகள் தீரும். கடன் சுமை அறவே குறையும். தனவரவு உண்டாகும். கோபத்தால் செய்த பஞ்சமாபாதகங்களும் விலகும்.

கார்த்திகை 16, (1-12-2024) : லட்சுமி பிரபோதன தினம் – மஹாலட்சுமி அஷ்டோத்ரம் சொல்லி ஏழை – எளியோர்க்கு வெற்றிலை, பாக்கு, பழத்துடன், ரவிக்கைத் துண்டு, வசதிபடைத்தவர்கள் புடவை தானமளித்தால் நீண்ட நெடுநாட்களாகக் கொடுத்த பணம் இனி திரும்ப வராது என்ற தீர்மானமாக நினைத்திருந்தமாட்டில் அவையனைத்தும் எவ்விதச் சேதாரமுமின்றி உங்களை வந்தடைவது திண்ணம்.

கார்த்திகை 17, (2-12-2024) : இந்நன்னாளில் சூரிய அஸ்தமனமாகியபின், மேற்குக் கீழ்வானில் தோன்றும் சந்திரனை தரிசனம் செய்தால், அந்நாள் முதற்கொண்டு, அம்மாதம் முடியுறும்காலந்தொட்டு நம் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தையும் கண்டு, அளவில்லா ஆனந்தத்தை அடைவர். அதற்கும் ஒருபடி மேலாக, ஆயிரம் பிறைகளைக் காணும் பேறு பெற்று, (80 வயதைக் கடந்தும், திடகாத்திரத்துடன்) வையத்துள் வாழ்வாங்கு வாழ்வர் என “நவக்கிரக புராணம்” தெள்ளத் தௌிவாகவும், உறுதிபடவும் உரைக்கின்றது.

கார்த்திகை 18, (3-12-2024): திந்த்ரிணீ கௌரி விரதம்-இவ்விரதத்தை அனுஷ்டிப்போர்க்கு சனி தோஷம் உட்பட நவக்கிரக தோஷங்களனைத்தும் விலகப் பெறுவர். வாழ்க்கையில் மகிழ்ச்சியும், மனநிறைவையும் பெறுவர்.

கார்த்திகை 19, (4-12-2024) : அபியோக திருதியை – திருதியை என்றாலே அளவற்ற – அபரிமிதமாக வளரக்கூடிய ஒன்று. இந்தத் தினத்தில் நல்லன எதைச் செய்தாலும், அச்செயல் மேன்மேலும் வளர்ந்து விருத்தியடையும் என பிருஹத் ஸம்ஹிதையில் அறுதியிட்டுக் கூறப்பட்டுள்ளது. இன்றைய தினத்தில், அரிசி மாக் கோலமிட்டு, லோக மாதாவாகிய அம்பாளின் படத்தை எழுந்தருளிச் செய்து, உமா மகேஸ்வர – தேவிபுஜங்க ஸ்தோத்திரம், சௌந்தர்ய – ஆநந்த லஹரி, திரிபுர ஸுந்தரி வேதபாத – மானஸ பூஜா, தேவி – மகாத்மியம், பாகவதம், மீனாட்சி பஞ்சரத்னம் இவற்றில் எது முடிகிறதோ அவற்றை படித்து, சொல்லக் கேட்டாலே மகத்தான புண்ணிய பலன்களை மட்டுமல்லாது, சுணக்க நிலையிலிருக்கும் தொழில் விருத்தியடையும்; எதிர்பாராவிதத்தில், மூதாதையர் சொத்தும், தன லாபமும், எண்ணிலடங்கா திடீர் பணவரவும் லட்சுமி கடாட்சமும் உண்டாகும்.

கார்த்திகை 21, (6-12-2024): சஷ்டி விரதம். விரதமிருந்து, முருகப் பெருமானை வழிபட்டால், ஐஸ்வர்யத்தையும், சகல காரிய சித்தியும் உண்டாகி, புஷ்டி, தைரியம், உடற்பிணியற்ற நீண்ட ஆயுள் ஆகியவற்றை அனுபவிப்பார்கள் என “ÿபவிஷ்ய புராணம்” கட்டியம் கூறுகிறது.

கார்த்திகை 27, (12-12-2024): பரணி தீபம். இந்நாளில் அணையா-விளக்கேற்றி ÿமகாவிஷ்ணுவைப் பூஜித்து, வேதம் பயின்ற ஒரு அந்தணரை அழைத்து, போஜனமும், தங்களால் இயன்ற தட்சிணையும் கொடுத்து வணங்கினால், தீராத நோய் தீரும்.

கார்த்திகை 28, (13-12-2024) : இந்நாளில், மாக்கோலமிட்டு, ÿமகாவிஷ்ணு – மகாலட்சுமி புகைப் படத்தை எழுந்தருளிச் செய்து, செந்தாமரை மலர்களைக் கொண்டு அர்ச்சித்து, ஏழை – எளியோர்க்கு அன்னதானமளித்தால், அஷ்ட ஐஸ்வர்யங்களும் உங்களை வந்தடையும். மேலும், இந்தத் தினத்தில் ரதி-மன்மதனைப் புஜித்தால், தம்பதியருக்குள் அந்நியோன்யம் மேலோங்கும். ஆயுள் முழுவதும் ஈறுடல் ஓருயிராக நிதர்சன தம்பதியராய் பரிமளிக்கப் போவது சத்தியம். மேலும், இன்றைய தினம் அண்ணாமலையார் தீபம். இன்று திருமங்கையாழ்வார் திருநட்சத்திரம். கிருத்திகை விரதம்.

கார்த்திகை 29, (14-12-2024): திரிபுர பைரவி ஜெயந்தி – திருமாலின் தசாவதாரங்களில் 10-வது அவதாரமாகிய கல்கியின் சக்தியனைத்தையும் ஒருங்கே பெற்றவளும், ஒருவரின் ஜனன ஜாதகத்தில் லக்னத்தில் ஏற்பட்டுள்ள தோஷங்களனைத்தையும் போக்கிக் காத்தருளும் மகத்தான புண்ணிய தினம். மேலும் இன்று ஸர்வாலய, வைகாஸன தீபம். மேலும் இன்று திருப்பாணாழ்வார் திரு நட்சத்திரம். இன்று பௌர்ணமி விரதம். சித்தத்தை அடக்கி, பதினெண் சித்தர்களுள் மகா யோகியாக, அஷ்ட மகாசித்துக்களையும் கைவரப் பெற்ற சித்த மகா புருஷர் மூலத்தீசரின் ஜெயந்தி.

கார்த்திகை 29, (14-12-2024): நித்ய சிரஞ்சீவிகளான அனுமன்,மார்க்கண்டேயன், விபீஷணன், அஸ்வத்தாமன், வியாசபகவான், மகாபலி, (அத்ரி மகரிஷிக்கும், அவரது தேவியும், மகா உத்தமியுமான அனுசூயைக்கும், பிரம்மா, ÿமகாவிஷ்ணு, சிவபெருமான் மூவரும் குழந்தைகளாக இணைந்து, )தத்தாத்ரேயராக அவதரித்த மகத்தான, புண்ணிய தினம். பகவான் ÿமந் நாராயணன், சிஷ்டிக்கும் கடவுளான பிரம்மதேவர், சிவபெருமான் ஆகிய மூவரையும் ஒருங்கே பூஜிக்கும் புண்ணிய தினம்.

கார்த்திகை 30, (15-12-2024) : பாஞ்சராத்ர ÿமகாவிஷ்ணு தீபம் – தஸவித தீபங்கள் ஏற்றலாம். 1. தரையில் வரிசையாக, மாக்கோலமிட்டு அல்லது தெய்வ திருவுருவச் சித்திரம் வரைந்து அதில் விளக்கேற்றலாம், மாலை வடிவில், கேரளத்தைப் போல் அடுக்கடுக்காக, மேல் மாடியில் ஆகாச தீபம், தண்ணீரில் மிதக்கவிட்டும் தீபங்களை ஏற்றலாம். எந்தவிதக் கொடிய விஷமுடைய பாம்பானாலும் வெறுங்கையினால் பிடித்து விளையாட்டுக்காட்டும் பாம்புப் பிடாரனிடம், சூரிய ஒளிகூட உட்புகமுடியாத அடர்ந்தக் காட்டினுள் ஒளிப் பிழம்புடன்கூடிய ஒரு பாம்பு இருப்பதாகக் கூறக்கேள்விப்பட்ட அவன், கானகத்தினுள் புகுந்து தேடினான். அந்தப் பாம்பும் கண்களில் சிக்கியது. தேஜஸ்மயமான – சூரிய பகவானே நேரில் உதித்ததுபோன்ற ஒளிப்பிழம்புடன் காட்சியளித்த அந்தப் பாம்பைப் பிடிக்காமல் வைத்த கண் வாங்காமல் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தார் பாம்புப் பிடாரி! அந்தப் பாம்பு, திடீரென ஒரு தவயோகியாக மாறியது.

உடனே தன் சுய நிலைக்குத் திரும்பிய பாம்புப் பிடாரி, சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, கைகட்டி-வாய்பொத்தி நின்றார்!! புன்முறுவல் பூத்த அந்த யோகி, தன்னை சட்டைமுனி என அறிமுகம் செய்துகொண்டு பின், “விலைமதிப்பற்ற பிரகாசமான நாகமணியுடன்கூடிய பாம்பை உன்னுள்ளே (மட்டுமல்ல! அனைவரிடமும் உள்ள பாம்பைப் போல் சுருண்டு கிடக்கும் குண்டலினி சக்தி!!) வைத்துக்கொண்டு, வெளியே தேடுகிறாயே?” என வினவியவாறு, பாம்பாட்டியின் உச்சந்தலை முதல், திருப்பாதம் முழுவதும் நோட்டம்விட்ட அக்கணமே – குருவின் திருவடித் தாமரையில் சிரஸானது வணங்கிய மாத்திரத்திலேயே, குருவின் திருநேத்திர ஸ்பரிசத்தினாலேயே, திருஹஸ்தத்தினால் அருளிய ஆசியினாலும், அஷ்டமாசித்துக்கள் அனைத்தையும் கைவரப் பெற்றார், பிடாரனாகிய, பாம்பாட்டிச் சித்தர்!! சித்த மகா புருஷர் பாம்பாட்டி சித்தரின் அவதாரப் புண்ணிய தினம். இவரது ஜீவ சமாதி சங்கரன் கோவிலில் (தென்காசி மாவட்டத்தில்) உள்ளது. ஊரில் இரவு ரோந்துக்காக சென்ற அரசனைப் பாம்பு கடித்து, இறந்துவிட அரசி முதற்கொண்டு அனைவரும் கதறினர். அவரருகில் கடித்த பாம்பையும் அடித்துப் போட்டிருந்தனர்!

கூடுவிட்டுக் கூடுபாயும் திறத்தால், பாம்பாட்டி சித்தர் அரசனின் உடலில் புகுந்தார்; அரசன் உயிர் பெற்று எழுந்தான் என்று அரசியும், மக்களும் நினைத்தார்கள் அனைவரும்! பாம்பின் அருகிற்சென்ற சித்தர், “பாம்பே! எழுந்திரு!” என்றதுதான் தாமதம், குற்றுயியுரும் குலையுயிருமாய்க் கிடந்த பாம்பு, உயிர்பெற்று ஓடியது. “பலமாக அடி வாங்கி, இறந்த பின்னரும் இன்னும் உயிர்வாழ ஆசையா?!” என பாம்பைப் பார்த்து வினவ, அப்பாம்பு இவரருகே வந்து, ஒரு பிரதட்சணம் செய்துவிட்டு காட்டுக்குள் மறைந்தது. அரசிக்கு தன் நிஜஸ்வரூபத்தைக் காண்பித்து அவ்வுடலிலிருந்து விலகி, ஞானவழியினை அரசிக்கு போதித்துவிட்டு தன்னுடலில் புகுந்தார், அனைத்துவிதமான சித்துவிளையாட்டுக்களையும் புரிந்த பாம்பாட்டி சித்தரின் குரு பூஜை இன்று! மனத்தளவில் நினைத்தாலே அஷ்டமா சித்துக்களைப் பெற யோக்கியதை உண்டாகும்!!

 

The post கவலைகளைப் போக்கிடும் கார்த்திகை மாதம்! appeared first on Dinakaran.

Tags : Kartika ,Lord ,Surya ,Scorpio ,Mars ,Lord Shiva ,
× RELATED சரணம் ஐயப்பா… சாமி சரணம் ஐயப்பா…