- பசுமை ஒப்பந்தம் திட்டக் குழு அமைப்பு
- சேலம்
- பசுமை ஒப்பந்தம்
- இர்ரத்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தின மலர்
சேலம், ஜூன் 24: சுற்றுலா தலமான ஏற்காட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க பசுமை ஏற்காடு திட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கலெக்டர் தலைமையில் 19 அதிகாரிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அக்குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது.
தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கும் மலைகளின் அரசன் என்றழைக்கப்படும் ஏற்காடு சுற்றுலா மையத்தை மேம்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆண்டுதோறும் மே மாத இறுதியில் கோடை விழா நடத்தப்பட்டு, அண்ணாபூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம் உள்ளிட்டவற்றை பராமரிக்கின்றனர். ஆண்டு முழுவதும் வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிகளவு வருவதால், பிளாஸ்டிக் தவிர்ப்பு நடவடிக்கையை கடந்த 3 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
இந்தவகையில், பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத ஏற்காடாக மாற்ற புதிய திட்டமாக ‘‘பசுமை ஏற்காடு திட்டம்’’ தொடங்கப்படுகிறது. இத்திட்டத்தை செயல்படுத்திட மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவியை தலைவராக கொண்ட பசுமை ஏற்காடு திட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் உறுப்பினர் செயலராக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) லலிதாதித்யா நீலம் நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோக உறுப்பினர்களாக செயற்பொறியாளர், தமிழ்நாடு வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர், ஊராட்சிகள் உதவி இயக்குநர், உட்கட்டமைப்பு உதவி திட்ட அலுவலர், மாசு கட்டுப்பாட்டு வாரிய மேலாளர், ஏற்காடு தோட்டக்கலை இணை இயக்குநர், சேர்வராயன் கோயில் செயல் அலுவலர், ஏற்காடு சுற்றுலாத்துறை மேலாளர், சேலம் வனக்கோட்ட உதவி வனப்பாதுகாவலர், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர், ஏற்காடு தாசில்தார், ஏற்காடு வட்டார மருத்துவ அலுவலர், ஏற்காடு உணவு பாதுகாப்பு அலுவலர், ஏற்காடு தமிழ்நாடு ஓட்டல் மேலாளர், ஏற்காடு வனச்சரகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வட்டார ஊராட்சி மற்றும் கிராம ஊராட்சி ஆகிய 17 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பசுமை ஏற்காடு திட்ட குழுவின் முதல் ஆலோசனை கூட்டம், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று (24ம் தேதி) நடக்கிறது. அதில், கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் ஏற்காட்டில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் குப்பைகளை மறுசுழற்சி செய்தல் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கின்றனர். மேலும், ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகள் (ரிசார்ட்), உணவு விடுதிகள் மற்றும் இதர கடைகளில் இருந்து சேகரமாகும் குப்பைகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்தல், அங்கிருந்து கிடைக்கும் குப்பைகளை மறுசுழற்சி செய்யும் பொருட்டு குப்பை குழிகள் அமைத்தல், வீடுகளில் சேகரமாகும் குப்பை கழிவுகளில் இருந்து உரம் தயாரித்தல் போன்றவை மேற்கொள்வது தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளனர்.
அதேபோல், ஏற்காட்டில் பிளாஸ்டிக் ஒழிப்பு பணியை மேற்கொள்ள கிராம அளவில் கூட்டடைப்பு குழுக்கள் அமைக்கவும், தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு பல்வேறு மேம்பாட்டு பணிகளை செய்யவும் முடிவு செய்துள்ளனர். ஏற்காட்டின் பசுமை சூழலை பாதுகாக்கும் வகையில் இந்த பசுமை ஏற்காடு திட்டக்குழு செயல்பட்டு, பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post பசுமை ஏற்காடு திட்ட குழு அமைப்பு appeared first on Dinakaran.