×
Saravana Stores

நாடாளுமன்றம் நாளை மறுநாள் கூடும் நிலையில் சபாநாயகர், துணை சபாநாயகர் பதவிக்கு ஒருமித்த கருத்து இல்லை: போட்டி வேட்பாளர்களை நிறுத்த எதிர்கட்சிகள் முடிவு

புதுடெல்லி: நாடாளுமன்றம் நாளை மறுநாள் கூடும் நிலையில் சபாநாயகர், துணை சபாநாயகர் பதவிக்கு ஆளுங்கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. அதவால் போட்டி வேட்பாளர்களை நிறுத்த எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிந்த நிலையில், வரும் 24ம் தேதி (திங்கட்கிழமை) முதல்முறையாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. புதிய எம்பிக்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். கேரளாவில் இருந்து 8 முறை எம்பியாக தேர்வு செய்யப்பட்ட கொடிக்குன்னில் சுரேஷ் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்படுவார் என காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்தது. ஆனால் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு அவரை நியமிக்கவில்லை. மாறாக பாஜக மூத்த தலைவரும், 7 முறை ஒடிசா மாநில எம்பியுமான பர்த்ருஹரி மஹ்தாப்பை தற்காலிக சபாநாயகராக நியமித்தது.

இவர்தான் புதிய எம்பிக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். மேலும் சபாநாயகர் தேர்தலை நடத்துவார். அதன்பிறகு வரும் 26ம் தேதி புதிய சபாநாயகர் தேர்தல் நடக்கும். தற்காலிக சபாநாயகர் நியமனத்தில் பாஜக – காங்கிரஸ் இடையே மோதல் வெடித்துள்ள நிலையில், இன்னும் மக்களவை சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வில் பல பிரச்னைகள் எழக்கூடும் என்கின்றனர். 18வது மக்களவை சபாநாயகர் பதவியை பாஜக தக்கவைத்துக் கொள்ளும் என்றே ெதரிகிறது. இந்த விவகாரத்தில் பாஜக கூட்டணி தலைவர்கள் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இம்முறை துணைத் தலைவர் பதவியும் நியமிக்க வாய்ப்பு உள்ளதால், அந்த பதவியை தெலுங்கு தேசம் கட்சிக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ராஜ்யசபா துணைத் தலைவர் பதவியை ஐக்கிய ஜனதா தளத்திற்கு ஒதுக்கப்பட்டதால், இம்முறை தெலுங்கு தேசத்திற்கு கொடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. லோக்சபா சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஆகிய இரு பதவிகளையும் ஆளுங்கட்சியே தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது. பொதுவாக துணை சபாநாயகர் பதவி எதிர்கட்சிக்கு கொடுக்கப்படும். இவ்விசயத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கருத்து தெரிவித்த எதிர்கட்சி தலைவர்கள், ‘துணை சபாநாயகர் பதவியை எங்களுக்கு ஒதுக்கினால், சபாநாயகரை போட்டியின்றி தேர்வு செய்யலாம்.

இல்லாவிட்டால் சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வில் எதிர்கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள்’ என்று கூறினர். இத்தகைய சூழ்நிலையில், புதிய மக்களவை கூட்டத் தொடரில் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் ஒருமித்த கருத்து எட்டப்படாததால், சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வில் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு தேர்தல் நடந்தால், யார் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றுகிறார்களோ அவர்களே சபாநாயகர், துணை சபாநாயகராக தேர்வு செய்யப்படுவர். மக்களவையில் பாஜக கூட்டணிக்கு 292 இடங்களும், இந்தியா கூட்டணிக்கு 234 இடங்களும் உள்ள நிலையில், சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜே.பி.நட்டாவுக்கு பாஜக
மாநிலங்களவை தலைவர் பதவி?
பிரதமர் மோடியின் முந்தைய ஆட்சி காலத்தில் ஒன்றிய மூத்த அமைச்சர் பியூஷ் கோயல், பாஜக மாநிலங்களவை தலைவராக இருந்தார். தற்போது மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டதால், பாஜக மாநிலங்களவை தலைவர் பதவி காலியாகிறது. அந்த இடத்தை பூர்த்தி செய்வதற்காக, பாஜக மூத்த அமைச்சர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. பாஜக தேசிய தலைவரும், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சருமான ஜே.பி.நட்டா, பாஜக மாநிலங்களவை அவைத் தலைவராக வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக இந்த பதவிகளில் மூத்த ஒன்றிய அமைச்சரை தான் நியமனம் செய்வார்கள்.

அதன்படி ஜே.பி.நட்டா நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பாஜக மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘ஒன்றிய அமைச்சராக பதவியேற்ற ஜே.பி.நட்டா, தனது தேசிய கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு 4 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வருவதால், அந்த தேர்தல்கள் முடியும் வரை அவர் தற்போதைய பதவியில் நீடிக்க வாய்ப்புள்ளது. பாஜக மாநிலங்களவை தலைவராக ஜே.பி.நட்டாவை பிரதமர் மோடி பரிந்துரைக்க வாய்ப்புள்ளது. அவர் இதுதொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சருக்கு ஜே.பி.நட்டாவின் பெயரை பரிந்துரை செய்வார். பிரதமர் பரிந்துரைக்கும் பெயர் ராஜ்யசபா தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும்’ என்று கூறினர்.

The post நாடாளுமன்றம் நாளை மறுநாள் கூடும் நிலையில் சபாநாயகர், துணை சபாநாயகர் பதவிக்கு ஒருமித்த கருத்து இல்லை: போட்டி வேட்பாளர்களை நிறுத்த எதிர்கட்சிகள் முடிவு appeared first on Dinakaran.

Tags : Speaker ,Parliament ,NEW DELHI ,Lok Sabha elections ,
× RELATED பாஜ எம்பி ஜகதாம்பிகா அடாவடி சபாநாயகரை...