- வண்டலூர்-மீஞ்சூர்
- பல்லாவரம்
- குணராத்தூர்
- திருந்தர்வாக்கம்
- வண்டலூர்
- மீன்ஜூர் அதிவேக பாதை
- குணராத்தூர்
- வண்டலூர் - மீஞ்சூர்
- தின மலர்
பல்லாவரம்: குன்றத்தூர் அருகே வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. குன்றத்தூர் அருகே வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் திருமுடிவாக்கம் பகுதியில் சாலையில் நேற்று இரவு ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது சாலையின் குறுக்கே திடீரென மாடு ஒன்று சாலையின் குறுக்கே ஓடியது. இதனால் அந்த வழியாக வந்த கார் ஒன்று மாட்டின் மீது மோதாமல் இருப்பதற்காக பிரேக் அடித்தார்.
இதனால் பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாக மோதியது. இதில் 4 கார்கள், ஒரு லோடு வேன் என மொத்தம் 5 வாகனங்கள் நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக வாகனத்தில் பயணம் செய்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதையடுத்து அங்கு வந்த குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார், சாலையில் தடுப்புகளை அமைத்து சேதமடைந்த வாகனங்களை கிரேன் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் வண்டலூர்-மீஞ்சூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும், சரக்கு வேனின் இடிபாடுகளில் சிக்கிய ஓட்டுநரை போலீசார் மீட்க முயன்றும் முடியாததால் தாம்பரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்து வந்து ஓட்டுநரை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் கார் மற்றும் லோடு வேனில் வந்த இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சாலை விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அடுத்தடுத்த வாகனங்கள் மோதிக் கொண்ட போதும் இந்த விபத்தில் அதிஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த நேற்று இதே வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் மாடு ஒன்றின் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் மோகன் என்பவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சாலையில் தாறுமாறாக சுற்றித் திரியும் மாடுகளால் விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்புகளை தடுக்க மாட்டின் உரிமையாளர்கள் மீது அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.
The post வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதல்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.