சென்னை: சிறுநீரகம் செயலிழந்த கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை காப்பாற்றி காவேரி மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. 30 வயதுள்ள கர்ப்பிணி பெண் கிரியேட்டினின் அளவு, சிறுநீரில் புரதக் கசிவு மற்றும் ரத்த அழுத்தம் உள்ளிட்ட சிறுநீரக பிரச்சனைகளுடன் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவ்வாறு சிகிச்சை பெற்ற மருத்துவமனைகளில் கர்ப்பம் தரிப்பது சாத்தியமில்லை கருக்கலைப்பு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.
இறுதியாக காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்து சிகிச்சை பெற்றுள்ளார். 36 வார கர்ப்பகாலம் முழுவதும், தாய் மற்றும் குழந்தை ஆகிய இருவரின் நல்ல ஆரோக்கியத்தை உறுதி செய்ய மருத்துவர்களின் நெருக்கமான கண்காணிப்பு மற்றும் கவனிப்பு வழங்கப்பட்டது.
உயர் ரத்த அழுத்தம் போன்ற வாய்ப்புள்ள சிக்கல்கள் பற்றிய கவலைகள் இருந்தபோதிலும், அவரது கர்ப்பநிலையில் உரிய முன்னேற்றம் இருந்தது.
அவரது ரத்த அழுத்தமும் அதிகரிப்பின்றி சீராக இருந்தது, புரதக் கசிவும் நிலையாக இருந்தது, கிரியேட்டினின் அளவு கணிசமாக அதிகரிக்கவில்லை. இறுதியில், சிசேரியன் சிகிச்சை வழியாக ஆரோக்கியமான பெண் குழந்தையை அப்பெண் பெற்றெடுத்தார். இது தொடர்பாக ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை சிறுநீரக மருத்துவர் பாலசுப்ரமணியன் கூறியதாவது: இப்போது கர்ப்பத்தைத் திட்டமிட முடியாவிட்டால், அவரது நோய் வளர்ந்து முதிர்ச்சியடையும் வரை காத்திருந்து, அதற்கு பிறகு வெற்றிகரமான உறுப்புமாற்று அறுவைசிகிச்சை செய்ய வேண்டியிருக்கும் அதற்கு மேலும் 10-15 ஆண்டுகள் எடுக்கும்.
இந்த காலகட்டத்தில், அவரால் கர்ப்பம் தரிக்க முடியாது. எனவே, கர்ப்பம் தரிக்கும் யோசனையை செயல்படுத்த தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கர்ப்பத்துடன் தொடர்புடைய ஆபத்துகள் அதிகமாக இருந்தாலும், கவனமாகக் கண்காணித்தல் மற்றும் நிர்வகிப்பதன் மூலம் கர்ப்ப காலத்தினை வெற்றிகரமாக கடந்து செல்ல முடியும். சரியான வழிகாட்டுதல் மற்றும் இதில் உள்ள அபாயங்களைப் புரிந்துகொள்வதன் மூலம், நோயாளிகள் தங்களது மகப்பேறு தொடர்பான ஆரோக்கியம் குறித்து மருத்துவர்களின் ஆலோசனையோடு தகவலறிந்த தேர்வுகளைச் செய்யலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
The post சிறுநீரகம் செயலிழந்த கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை: காவேரி மருத்துவமனை சாதனை appeared first on Dinakaran.