சென்னை: மயிலாப்பூர் நொச்சிக்குப்பம் பகுதியில் பிஸ்கட் போட்டு விளையாடிய போது தெரு நாய் கடித்து 6 வயது சிறுவன் படுகாயமடைந்தான். மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மயிலாப்பூர் நொச்சிக்குப்பம் எல்லையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (36). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவருக்கு 6 வயதில் மகன் உள்ளான். வழக்கம் போல் நேற்று முன்தினம் வீட்டின் எதிரே, இந்த சிறுவன் தெரு நாய்களுக்கு பிஸ்கட் போட்டு விளையாடி கொண்டிருந்தான்.
அப்போது எதிர்பாராத விதமாக தெரு நாய் ஒன்று, சிறுவனை கடித்தது. இதனால் அலறி கூச்சலிட்டான். இதை சற்றும் எதிர்பார்க்காத அவனது பெற்றோர், நாயிடம் இருந்து மகனை மீட்டனர். இந்த சம்பவத்தில் சிறுவனுக்கு தோள்பட்டை, முகம் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்த கொட்டியது. உடனே சிறுவனை மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். இதுகுறித்து மெரினா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
The post பிஸ்கட் போட்டு விளையாடிய போது தெரு நாய் கடித்து சிறுவன் படுகாயம் appeared first on Dinakaran.