×

இன்ஸ்டாகிராம் மூலம் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் வீடியோ கால், ரியல் மீட் என்ற பெயரில் அத்துமீறும் இளைய தலைமுறையினர்: காவல் துறை எச்சரிக்கை

விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் வளர வளர நாடு பல்வேறு பரிணாமங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. செல்போன் பயன்பாட்டிற்கு முன்பு ஒருவரை ஒருவர் தொடர்புகொள்ள முடியாத நிலை இருந்தபோது கடிதம், டெலிபோன் மூலமாக தகவல்களை பரிமாறிக் கொண்டிருந்தனர். அதன் பின்பு நாகரிக வளர்ச்சியின் காரணமாக அபரிவிதமான அறிவியல் கண்டுபிடிப்புகளின் காரணமாக தற்போது நமது கையில் உள்ள ஸ்மார்ட் போன், இன்டர்நெட் வசதி மூலமாக உலகத்தில் எந்த ஒரு மூலையிலும் நடக்கும் விஷயங்களை நாம் அடுத்த நொடியே எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது.

அதே நேரத்தில் எந்த நேரத்திலும் உலகத்தில் எந்த ஒரு மூலையில் உள்ள நபர்களையும் எளிதில் தொடர்பு கொண்டு அவர்களுடன் பேசி உறவாட முடிகிறது. இவையெல்லாம் அறிவியலின் வளர்ச்சி. இதில் பல்வேறு நன்மைகள் உள்ளன. பிள்ளைகள் வெளிநாட்டில் இருந்தால் அவர்களை வீடியோ கால் மூலம் பெற்றோர்கள் தினமும் பார்க்க முடிகிறது. அதே வேளையில் தந்தையோ அல்லது தாயோ வேறு ஒரு ஊரில் இருந்தால் வீடியோ கால் மூலம் குழந்தைகள் எளிதில் அவர்களைப் பார்த்து நாம் நம்மை தேற்றிக்கொள்ள முடிகிறது.

எந்த ஒரு விஷயம் நேர்மறையாக இருந்தாலும் அதற்கு கண்டிப்பாக எதிர்மறையான ஒரு விஷயமும் இருக்கத்தான் செய்கிறது. இந்த ஸ்மார்ட் போன்களில் உள்ள பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கில் இன்றை தலைமுறை மூழ்கி கிடக்கிறது. இதன் மூலம் உலகில் எந்த பகுதியில் நடக்கும் விஷயங்களையும் நாம் உடனே அறிந்து கொள்ள முடியும் என்ற நிலை உள்ளது. ஆனால், இதை பலர் தவறாக பயன்படுத்தவும் தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக, பண மோசடி, பாலியல் உள்ளிட்ட விவகாரங்களுக்கு பலர் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு காலகட்டத்தில் ஒருவர் பாலியல் தேவைக்காக ஒரு பெண்ணுடன் செல்ல விரும்பினால் முதலில் எங்கே பாலியல் தொழில் நடக்கிறது என்பதை அவர் கண்டுபிடிக்க வேண்டும். அதன் பின்பு அதை யார் நடத்துகிறார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அவரை எப்படி தொடர்பு கொள்வது என அறிந்து, அதன் பிறகு அவரிடம் பேசி சம்மதம் பெற்று, அதன் பிறகு யாருக்கும் தெரியாமல் அவர்கள் உல்லாசமாக இருப்பது வழக்கம்.

ஆனால் இப்போது நிலைமை அனைத்தும் மாறிவிட்டது. சமூக வலைதளங்களை உல்லாசத்திற்காக பலர் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்அப், டெலிகிராம், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகளவில் பாலியல் சம்பந்தமான பதிவுகளும், பாலியல் விவகாரங்களும் நடைபெற்று வருகின்றன. தவறான வழியில் பணம் சம்பாதிக்க விரும்பும் சில பெண்கள், சென்னை போன்ற பெருநகரங்களில் தற்போது சமூக வலைதளங்களை ஒரு கருவியாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

ஒரு காலகட்டத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் மட்டுமே பணம் சம்பாதிப்பதற்காக தங்களது சுய விவரங்களை வெளியே தெரிவித்து, அதன் மூலம் வாடிக்கையாளர்களை கவர்ந்து பணம் சம்பாதித்து வந்தனர். ஆனால் தற்போது சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி கல்லூரி மாணவிகள், குடும்ப பெண்கள் என பலரும் பகுதி நேரமாக பணம் சம்பாதிக்க தொடங்கி விட்டனர்.

அந்த வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ கால் மற்றும் ரியல் மீட் என கூறி பலரும் பாலியல் சம்பந்தமான விஷயங்களில் ஈடுபடுவது தற்போது மிகவும் ட்ரெண்டிங்காக உள்ளது. ஒரு காலகட்டத்தில் பாலியல் தொழில் என்பது எங்கேயாவது நடைபெறும். அதனை யாரும் பெரியதாக கவனிக்க முடியாது. அப்படியே பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் மாட்டினாலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டு வந்தனர்.

ஆனால் காலம் மாறமாற சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் அந்த தொழிலை எவ்வாறு நடத்துவது, காவல்துறையில் சிக்கினாலும் வழக்கு இல்லாமல் எவ்வாறு சட்ட ரீதியாக வெளியே வருவது என்பதில் மிகுந்த கவனமாக உள்ளனர். ஒரு ஆணும், பெண்ணும் திருமணம் ஆகாமல் ‘லிவ் இன்’ முறையில் சேர்ந்து வாழலாம். ஒரு ஆணும், பெண்ணும் ஒன்றாக இருக்கிறார்கள் எனில் அவர்களுக்குள் பண பரிவர்த்தனை இல்லை என்றால் அவர்கள் உல்லாசமாக இருப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை போன்ற பல நீதிமன்ற தீர்ப்புகள் தற்போதைய பாலியல் தேடல்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

அந்த வகையில் சமீப காலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலரும் தங்களது பாலியல் தேடல்களை பதிவிட்டு அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களைத் தேடும் நபர்கள் இன்ஸ்டா பக்கத்தில் யார் அதிகமாக வீடியோ போடுகிறார்கள், அது எது போன்ற வீடியோ என்பதை பார்க்கின்றனர். செக்ஸ் சம்பந்தமான வீடியோக்களை குறிப்பிட்ட பெண்கள் அதிகமாக பதிவிட்டால் அதன் பின்பு அவர்களிடம் நண்பர்கள் போல பழகி பேசுகின்றனர்.

அதற்கு அவர்கள் ரிப்ளை செய்யும்போது அடுத்த கட்ட நகர்வுக்குச் செல்கின்றனர். மறுமுனையில் உள்ள பெண்களும் அதற்கு தயாராகின்றனர். இதில் முதலில் தங்களது செல்போன் நம்பரை பரிமாறிக் கொள்கின்றனர். அதன் பின்பு வீடியோ கால் மூலம் ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர். இதில் பெரும்பாலும் முன்கூட்டியே 5 நிமிடத்திற்கு 500 ரூபாய் என இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. 500 ரூபாய் செலுத்திய பின்பு பெண்கள் தங்களது மார்பகத்தை காட்டுகின்றனர்.

மற்றபடி முழு நிர்வாணமாக காட்ட 1000 ரூபாய் முதல் ஆளுக்கு ஏற்றார் போல் பணம் நிர்ணயிக்கப்படுகிறது. இதில் பெரும்பாலும் பெண்கள் தங்களது முகத்தை காண்பிப்பது கிடையாது. முழுவதுமாக பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் மட்டுமே தங்களது முகத்தை காண்பித்து அதற்கு தனியாக 2000 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை வாங்குகின்றனர். இவை அனைத்திலும் முன்கூட்டியே கூகுள் பே மூலம் பணம் செலுத்தினால் மட்டுமே பெண்கள் தங்களது அந்தரங்களை காண்பிக்கின்றனர்.

சபலத்திற்குள்ளான ஆண்கள் பலரும் பணத்தை செலுத்தி வீடியோ கால் மற்றும் செக்ஸ் சாட் எனப்படும் ஆபாச பேச்சுக்களை கேட்டு ரசிக்கின்றனர். இதில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஒத்துப்போகிறது என்றால் அடுத்த கட்டமாக அவர்கள் ரியல் மீட் என்ற ஒரு நகர்வை நோக்கிச் செல்கின்றனர். அதாவது ரியல் மீட் என்பது வீடியோ கால் மற்றும் செக்ஸ் சாட்டிங்கில் ஈடுபட்ட நபர்கள் நேராக சந்தித்துக் கொள்வது.

ஏதாவது ஒரு விடுதி அல்லது அவர்களுக்கு தெரிந்த வீட்டில் இருவரும் ஒன்றாக சந்தித்துக் கொண்டு அதன் பிறகு இருவரும் உல்லாசமாக இருக்கின்றனர். இதற்கு ஏற்கனவே 3 ஆயிரம் ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாய் வரை பேசி முடிக்கப்பட்டு முன்பணம் செலுத்தினால் மட்டுமே இந்த ரியல் மீட் சம்பவம் அரங்கேறுகிறது. முன்பெல்லாம் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் புரோக்கர் மூலமாக செல்வார்கள். இதற்காக புரோக்கர்களுக்கு தனியாக கமிஷன் தர வேண்டும். மேலும் போலீஸ் தொல்லையையும் தாங்கிக் கொள்ள வேண்டும்.

ஆனால் தற்போது அதுபோன்று எதுவும் இல்லை. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அக்கவுண்ட் ஓபன் செய்து, தங்களது புகைப்படங்களை கொஞ்சம் செக்ஸியாக போட்டால் போதும், ஆண் நண்பர்கள் தேடி வந்து அடுத்த கட்ட நகர்வுக்கு பெண்களை அழைத்துச் சென்று விடுகின்றனர். அதன் பின்பு ஆண் நண்பர்களை வளைத்துப் போட்டு நயமாக பேசி வீடியோக்கள் மற்றும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்தால் போதும், ஆயிரக்கணக்கான நபர்கள் அதனை லைக் செய்து பின் தொடர்கிறார்கள். இதன் மூலம் பலருக்கு நல்ல வருமானமும் வருகிறது.

மேலும் யாருக்கும் எதற்கும் பயப்பட வேண்டிய சூழ்நிலையும் இல்லை. இதனால் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் சர்வ சாதாரணமாக இதனை செய்து வருகின்றனர். தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலியல் சம்பந்தமான தேடல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதில் பலர் போலியாக பலரை ஏமாற்றி பணம் சம்பாதித்து வரும் சம்பவங்களும் நடந்து வரும் வேளையில், வீடியோ கால், ரியல் மீட் என்ற பெயரில் தொடர்ந்து பாலியல் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன.

தற்போது இதில் என்ன தவறு என கேட்கத் தோன்றும் வகையில் இளைய தலைமுறையினர் மாறிவிட்டனர். எங்களது தேவைகளை நாங்கள் யாருக்கும் எந்தவித தொந்தரவும் இல்லாமல் தீர்த்துக் கொள்கிறோம், இதில் யாருக்கு எந்த பிரச்னை வந்துவிடப் போகிறது என கேள்வி கேட்கும் அளவிற்கு தற்போது சமூக வலைதளங்களில் பாலியல் தொழில் கொடி கட்டி பறந்து வருகிறது.

கல்லூரி, குடும்ப பெண்கள்
கல்லூரி, குடும்ப பெண்களில் சிலர் தங்களது வருமானத்தை பெருக்கிக் கொள்வதற்காக இன்ஸ்டா பக்கத்தில் போலியான பெயரில் ஒரு கணக்கை தொடங்கி, அதன் பின்பு ஆண் நண்பர்கள் வட்டாரத்தை விரிவுபடுத்திக் கொண்டு இதற்காக தனியாக ஒரு செல்போன் நம்பரை வாங்குகின்றனர். அந்த நம்பரை தங்களது இன்ஸ்டா பக்கத்தில் பதிந்து ஆண் நண்பர்கள் பலருடன் சாட்டிங் செய்து வீடியோ கால் முறையில் தங்களது அந்தரங்க உறுப்புகளை காண்பிக்கின்றனர். அதற்கு முன்பே கூகுள் பே மூலம் பணத்தை பெற்றுக் கொள்கின்றனர்.

இவ்வாறு தங்களது அந்தரங்க உறுப்புகளை காட்டும் பெண்கள் முகத்தை காட்டுவது கிடையாது. இதனால் அவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என நினைத்துக் கொள்கின்றனர். மேலும் சபல புத்திகளுக்கு ஆளான சில ஆண்கள் வீடியோ காலில் பெண்களின் அந்தரங்க உறுப்புகளை மட்டும் பார்த்து ரசிக்க தங்களது பணத்தை வாரி தருகின்றனர். வீடியோ காலில் பலமுறை பேசி பழகிய ஆண்கள் அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும் போது அவர்களை பெண்கள் பிளாக் செய்து விடுகின்றனர்.

* மோசடிகள் ஏராளம்
இவ்வாறு இன்ஸ்டாகிராமில் பல நபர்கள் தங்களை பெண் என்று கூறி போலியாக கணக்கை தொடங்கி தொடர்ந்து சாட்டிங் செய்து கஸ்டமர்களை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வர வைக்கின்றனர். அப்படி வந்ததும் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று காத்திருங்கள் என கூறுகின்றனர். மேலும் முன்கூட்டியே பணத்தையும் வாங்கி விடுகின்றனர்.

ஆனால் அவர்கள் காத்திருந்து காத்திருந்து அதன் பின்பு தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து இதுகுறித்து வெளியே புகார் கொடுக்க முடியாமல் வீட்டிற்கு சென்று விடுகின்றனர். சில இடங்களில் செல்போன், செயின், மோதிரம் உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டு அடித்து அனுப்பி வைக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

* புரோக்கர்களுக்கு நெருக்கடி
இன்ஸ்டாவில் தற்போது பெண்கள் நேரடியாக பேசி பழகி பாலியல் தொழிலில் ஈடுபடுவதால் ஆண் புரோக்கர்களுக்கும், பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தும் பலருக்கும் இது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. எனவே பல ஆண் புரோக்கர்கள் இன்ஸ்டாவில் பெண்கள் பெயரில் அக்கவுண்ட் தொடங்கி ஆண்களை பின்தொடர்ந்து பேசி பெண்கள் புகைப்படங்களை காண்பித்து ஆட்களை பிடிக்கின்றனர்‌. முதல் முறை செல்லும்போது புரோக்கர் மூலமாக செல்லும் பெண்கள் இரண்டாவது முறை செல்லும்போது கஸ்டமர் பழகிவிட்டால் புரோக்கரை கழட்டிவிட்டுச் செல்கின்றனர். இதனால் புரோக்கர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

* பிரச்னையில் சிக்க வேண்டாம்
இன்றைய தேதியில் இன்ஸ்டாவில் பணத்திற்காக சில கல்லூரி மாணவிகள் மற்றும் குடும்ப பெண்கள் தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால் அவர்கள் சமூக விரோதிகள் மற்றும் காம கொடூரர்கள் கையில் சிக்கும்போது பல இக்கட்டான சூழ்நிலைகளை அவர்கள் சந்திக்கின்றனர்.

சில நேரங்களில் அதிக பணம் தருவதாக கூறி பெண்களை அழைத்துச் சென்று கொலை செய்யும் சூழல்களை கூட தற்போது நாம் காண்கிறோம். எனவே புதிய செல்போன் நம்பர், போலியான முகவரி என நினைத்து பெண்கள் தவறான செயல்களில் ஈடுபட வேண்டாம். அதுவே அவர்களுக்கு மிகப்பெரிய பிரச்னைகளில் வந்து முடிந்து விடுகிறது. எனவே ஒழுக்கமான வாழ்க்கையை தேர்ந்தெடுத்து நியாயமான முறையில் பணம் சம்பாதிக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கின்றனர்.

The post இன்ஸ்டாகிராம் மூலம் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் வீடியோ கால், ரியல் மீட் என்ற பெயரில் அத்துமீறும் இளைய தலைமுறையினர்: காவல் துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Instagram ,Dinakaran ,
× RELATED இன்ஸ்டாகிராம் மூலம் பணம்...