×

தமிழ்நாட்டில் எந்த சக்தியும் கலவரம் உருவாக்க முடியாது: அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் எந்த சக்தியும் கலவரத்தை உருவாக்க முடியாது என்று அமைச்சர் ரகுபதி கூறினார். புதுக்கோட்டையில் 1200 ஏக்கர் பரப்பளவு கொண்ட கவிநாடு கண்மாயில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தில் தண்ணீர் சேமித்து வைக்கப்பட உள்ளது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம், கைஃபா என்ற தனியார் அமைப்பு இணைந்து கவிநாடு கண்மாயை தூர்வாரி கருவேல மரங்களை அகற்றி பல்லுயிர் காடுகளை உருவாக்கும் பணி இன்று தொடங்கியது. இந்த பணியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பின்னர் அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டி: கவிநாடு கண்மாய் தூர்வாரும் பணி நிறைவடைந்த பிறகு பல்லுயிர் காடுகளை உருவாக்கி வெளிநாட்டு பறவைகள் வரும் இடமாக மாற்றப்பட உள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் அறிவிக்கப்பட்டாலும், நிலம் கையகப்படுத்தும் பணி நடக்கவில்லை. தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் முடிவடையும். தமிழ்நாட்டில் காடுகளை வளர்ப்பதற்கு ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக தமிழக முதல்வர் காடுகளை அதிகளவில் உருவாக்க வேண்டும் என்று முக்கியத்துவம் அளித்து செயலாற்றுகிறார். தற்போது காடுகள் பரப்பளவு அதிகரித்துள்ளது.

நெடுஞ்சாலைத்துறை சாலை விரிவாக்கத்திற்கு மரங்கள் அகற்றப்பட்டாலும், அதற்கு நிகராக 10 மடங்கு மரங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வு குளறுபடியை நாடே பார்த்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து வழக்கும் நடைபெற்று வருகிறது. ஆனால் உச்சநீதிமன்றம், மாணவர் சேர்க்கையை அனுமதிக்க கூறியுள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால், அது முடிந்த பிறகு நீட் தேர்வு ஒரு முடிவுக்கு வரும். கலவரம் ஏற்படுத்தினால்தான் பாஜ வளர முடியும் என்று இந்து மக்கள் கட்சி நிர்வாகி கூறிய ஆடியோ வைரலான நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் எந்த சக்தியும் கலவரத்தை உருவாக்க முடியாது. ஒருபோதும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது.

The post தமிழ்நாட்டில் எந்த சக்தியும் கலவரம் உருவாக்க முடியாது: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister Ragupati ,Pudukkottai ,Minister ,Ragupathi ,Kavrinadu ,Pudukkota ,Kaifa ,Ragupati ,
× RELATED ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒரு...