×

ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்பது வதந்தி: தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் வீடு, குடிசை, கைத்தறி, விசைத்தறி, வணிகம், விவசாயம், தொழிற்சாலை என 3.3 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். இதில் வீட்டு மின் இணைப்புகள் 2.30 கோடிக்கு மேல் உள்ளது. இந்த இணைப்புகளுக்கான மின் விநியோகம் செய்வது முதல் மின்தொடா்பான பணிகள் அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள் செய்து வருகின்றன.

இந்த நிறுவனங்களின் வருவாய், நிா்ணயிக்கப்பட்ட அளவுக்கு இல்லாமல், தொடர்ந்து இழப்புகள் அதிகரித்து வருவதால் இந்த ஆண்டு ஜூலை மாதம் மீண்டும் மின்கட்டண உயா்வு அமலாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ஜூலை மாதம் முதல் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக பரவும் தகவல் வதந்தியே என தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழுவான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. 2022ம் ஆண்டு ஜூலையில் வெளியான செய்தி தற்போது பகிரப்பட்டு வருகிறது.

தற்போது மின் கட்டண உயர்வு செய்யப்படவில்லை. வதந்திகளை நம்பாதீர்கள். மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து தமிழக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: ஒன்றிய அரசின் உதய் மின் திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டிருப்பதால் 2027 வரை ஆண்டுதோறும் ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். 2026-27 ஆண்டு வரை ஆண்டுதோறும் ஜூலை 1ம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்தவும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது.

அதன்படி 6 சதவீதம் அல்லது ஏப்ரல் மாத பணவீக்க விகிதம் ஆகிய இரண்டில் எது குறைவோ, அந்த அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணத்தை உயர்த்தி கொள்ள அனுமதி அளித்து இருந்தாலும் அதை அப்படியே செயல்படுத்த வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 2.18 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதில், வீடுகளுக்கான கட்டண உயர்வை தமிழக அரசு ஏற்றது. வணிக வளாகம், தொழிற்சாலைகளுக்கு 1 யூனிட்டுக்கு 13 காசு முதல் 21 காசு வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. மின் கட்டண உயர்வு குறித்து தமிழக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்பது வதந்தி: தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Government ,Chennai ,Tamil Nadu ,Tamil Nadu Government Information ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...