×

வாழ்வா, சாவா நெருக்கடியில் பாகிஸ்தான்! கனடாவுடன் இன்று மோதல்

நியூயார்க்: டி20 உலக கோப்பை கிரிக்கெட்டின் இன்றைய போட்டி பாகிஸ்தான் அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. 2009ம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற பாகிஸ்தான் அணி, சிறப்பாக ஆடிய அணிகளின் ஒன்றாக கருதப்படுகிறது. 2022ம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரின் போது ஜிம்பாப்வே மற்றும் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியை தழுவியது. எனினும் அடுத்தடுத்த ஆட்டங்களில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. தற்போதும் அதேபோன்ற ஒரு சூழலில் தான் பாகிஸ்தான் அணி சிக்கியுள்ளது. 2 போட்டிகளில் களம் கண்டு தோல்வியடைந்து இன்னும் வெற்றிகணக்கையே தொடங்காத பாகிஸ்தான் இன்று கனடாவுடன் மோதுகிறது. இதில் பாகிஸ்தான் மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால், அவர்களது ரன் ரேட் உயர்வதோடு சூப்பர் 8 சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளலாம்.

இந்தியாவுக்கு எதிராக தோல்வியடைந்த அதே நியூயார்க் மைதானத்தில் தான் பாகிஸ்தான் அணி இன்றிரவு கனடாவை எதிர்கொள்கிறது. நியூயார்க் மைதானம் எளிதாக கணிக்க முடியாததால் அணிகள் திணறுகின்றன. அமெரிக்காவுக்கு எதிரான தனது முதல் போட்டியில் கனடா பெரிய இலக்கை நிர்ணயித்தது. அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றியும் பெற்றது. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் கனடா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து பெரிய இலக்கை நிர்ணயித்தால் அது பாகிஸ்தானுக்கு இக்கட்டாக அமையும் என்பதில் மாற்று கருத்தில்லை.

அது மட்டுமல்லாமல் வெஸ்ட் இண்டீஸை பூர்வீகமாகக் கொண்ட நிக்கோலோஸ் க்ரிட்டன் என்ற வீரர் தற்போது கனடாவுக்காக விளையாடி வருகிறார். இவர் நேபாளம் அணிக்கு எதிராக 39 பந்துகளில் 52 ரன்களும், அமெரிக்காவுக்கு எதிராக 51 ரன்களும், அயர்லாந்துக்கு எதிராக 49 ரன்களும் எடுத்து அதிரி புதிரி பார்மில் இருக்கிறார். இதனால் இவர் பாகிஸ்தானுக்கு நிச்சயம் சிம்ம சொப்பனமாக விளங்குவார் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள். பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை தொடக்க வீரராக சையும் அயுப் களமிறங்க வாய்ப்பு இருக்கிறது. டி20 உலக கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணி ஆரம்ப கட்டங்களில் தொடர்ந்து 3 போட்டிகளில் தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பாபர் அசாமின் தலையெழுத்து இன்றைய ஆட்டத்தின் மூலம் தீர்மானிக்கப்படும் என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டமாக கருதப்படுகிறது.

The post வாழ்வா, சாவா நெருக்கடியில் பாகிஸ்தான்! கனடாவுடன் இன்று மோதல் appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Canada ,New York ,T20 World Cup cricket ,2009 ,2022 T20 World Cup Series ,Sawa ,Dinakaran ,
× RELATED பவுலர்களால் வெற்றி…ரோகித் ஷர்மா பாராட்டு