×

நெதர்லாந்து அணிக்கு எதிராக அசலங்கா அதிரடியில் இலங்கை ஆறுதல்

கிராஸ் ஐலெட்: நெதர்லாந்து அணியுடனான உலக கோப்பை லீக் ஆட்டத்தில், இலங்கை அணி 83 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை வசப்படுத்தியது. டி பிரிவில் இடம் பெற்றிருந்த இந்த அணிகளுக்கு இதுதான் கடைசி லீக் ஆட்டம். இலங்கை அணி வெளியேறுவது ஏற்கனவே உறுதியாகிவிட்ட நிலையில், நெதர்லாந்து நூலிழை வாய்ப்புடன் களமிறங்கியது. டாஸ் வென்ற நெதர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. வழக்கத்துக்கு மாறாக இலங்கை வீரர்கள் அதிரடியாக விளையாடினர். குஷால் மெண்டிஸ் 46 ரன் (29 பந்து, 5 பவுண்டரி), தனஞ்ஜெயா 34 ரன் (26 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), சரித் அசலங்கா 46 ரன் (21 பந்து, 1 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினர்.

இலங்கை 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன் குவித்தது. மேத்யூஸ் 30 ரன் (15 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் ஹசரங்கா 20 ரன்னுடன் (6 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். நெதர்லாந்து தரப்பில் லோகன் வான் பீக் 2, விவியன் கிங்மா, ஆர்யன் தத், பால் வான் மீகரன், டிம் பிரிங்கிள் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 202 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நெதர்லாந்து களமிறங்கியது. தொடக்க வீரர் மைக்கேல் லெவிட் 31 ரன் (23 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 31 ரன் (24 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினர்.

மற்றவர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்ப, நெதர்லாந்து 16.4 ஓவரில் 118 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. இலங்கை தரப்பில் துஷாரா 3, ஹசரங்கா, பதிராணா தலா 2, தீக்‌ஷனா, ஷனகா தலா 1 விக்கெட் அள்ளினர். இலங்கை 83 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது. நடப்பு தொடரில் அந்த அணி பெற்ற ஒரே வெற்றி இதுதான். லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு பிறகு 200 ரன் கடந்த ஒரே அணியும் இலங்கை தான். இரு அணிகளும் தலா 201 ரன் விளாசி இருந்தன. இலங்கயுடன் சேர்ந்து நெதர்லாந்து அணயும் ஏமாற்றத்துடன் வெளியேறியது. சரித் அசலங்கா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

The post நெதர்லாந்து அணிக்கு எதிராக அசலங்கா அதிரடியில் இலங்கை ஆறுதல் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Asalanga ,Netherlands ,World Cup League ,Dinakaran ,
× RELATED இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மர்மநபர்களால் சுட்டுக்கொலை