×

ஸ்காட்லாந்தை வீழ்த்திய ஆஸி

க்ரோஸ் ஐலெட்: ஐசிசி ஆண்கள் டி20 உலக கோப்பையின் 35வது லீக் ஆட்டத்தில், பி பிரிவு அணிகளான ஆஸ்திரேலியா-ஸ்காட்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸி பந்து வீச முடிவு செய்தது. ஆஸி தான் விளையாடிய 3 ஆட்டங்களிலும் வென்று சூப்பர்-8 சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறி விட்டது. அதே நேரத்தில் ஆஸியை வீழ்த்தினால், கூடவே நமீபியாவிடம் இங்கிலாந்து தோற்றால் ஸ்காட்லாந்துக்கு அடுத்தச் சுற்று வாய்ப்பு.

இடையில் இங்கிலாந்து-நமீபியா இடையிலான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட ஸ்காட்லாந்து நம்பிக்கை அதிகரித்தது. அது அதன் ஆட்டத்தில் எதிரொலித்தது. அந்த அணியின் ஜார்ஜ் 35(23பந்து, 2பவுண்டரி, 3சிக்சர்), பிராண்டன் மெக்கலன் 60(34பந்து, 2பவுண்டரி, 6சிக்சர்), கேப்டன் பெர்ரிங்டன் ஆட்டமிழக்காமல் 42(31பந்து, 1பவுண்டரி, 2சிக்சர்) ரன் வெளுத்து ஸ்கோர் உயர உதவினர். கூடவே 6 ‘கேட்ச்’களை தவற விட்டு உலக கோப்பையில் ஆஸி வரலாறு படைத்தது.

அதனால் ஸ்காட்லாந்து 20ஓவர் முடிவில் 5விக்கெட் இழப்புக்கு 180ரன் குவித்தது. ஆஸியின் மேக்ஸ்வெல் 2 விக்கெட் எடுத்தார்.அடுத்து விளையாடிய ஆஸி வார்னர், கேப்டன் மார்ஷ், மேக்ஸ்வெல் விக்கெட்களை இழந்து பரிதாபநிலையில் இருந்தது. ஆனால் அடுத்து இணை சேர்ந்த டிராவிஸ், ஸ்டோய்னிஸ் இருவரும் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து அரை சதத்தை கடந்தனர்.

தொடர்ந்து 4வது விக்கெட்டுக்கு 80ரன் சேர்த்த டிராவிஸ் 68(49பந்து, 5பவுண்டரி, 4சிக்சர்), ஸ்டோய்னிஸ் 59(29பந்து, 9பவுண்டரி, 2சிக்சர்) ரன்னில் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு வந்த டிம் டேவிட் 14பந்தில் 24ரன் எடுத்து ஆட்டத்தை வெற்றியுடன் முடித்தார். அதனால் ஆஸி 19.4ஓவரில் 5விக்கெட் இழப்புக்கு 186ரன் எடுத்து 5விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. இந்த ஆட்டத்துடன் வெளியேறிய ஸ்காட்லாந்து வீரர்கள் மார்க் வாட், சஃப்யான் ஷரிப் தலா 2 விக்கெட் எடுத்தனர். ஆட்ட நாயகனாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் தேர்வானார்.

The post ஸ்காட்லாந்தை வீழ்த்திய ஆஸி appeared first on Dinakaran.

Tags : Aussie ,Scotland Gros Islet ,Australia ,Scotland ,ICC ,Men's T20 World Cup ,Aussies ,Super ,8 ,Dinakaran ,
× RELATED சில்லி பாயின்ட்…