×

குமரி மாவட்டத்தில் 1230 பள்ளிகள் திறப்பு 3.25 லட்சம் மாணவ மாணவியர் பள்ளிகளுக்கு வருகை

*முதல் நாளே பாட புத்தகம் வழங்கப்பட்டது

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 3 லட்சத்து 25 ஆயிரம் மாணவ மாணவியர் பள்ளிகளுக்கு வருகை தந்தனர்.
கோடை விடுமுறைக்கு பின்னர் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. குமரி மாவட்டத்திலும் 1 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதனை போன்று தனியார் மெட்ரிக் பள்ளிகளும் திறக்கப்பட்டு நேற்று வகுப்புகள் தொடங்கியது. குமரி மாவட்டம் முழுவதும் சுமார் 1230 பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் சுமார் 3 லட்சத்து 25 ஆயிரம் மாணவ மாணவியர் பள்ளிகளுக்கு நேற்று வருகை தந்துள்ளனர். அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 லட்சத்து 60 ஆயிரம் மாணவ மாணவியர் வருகை தந்துள்ளனர். தனியார் பள்ளிகளில் 1 லட்சத்து லட்சத்து 65 ஆயிரம் மாணவ மாணவியர் வரை இந்த கல்வியாண்டில் சேர்ந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நர்சரி, பிரைமரி பள்ளிகளில் குழந்தைகளை பெற்றோர் பள்ளிகளுக்கு நேரடியாக அழைத்து கொண்டுவந்து விட்டனர்.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ மாணவியருக்கு விநியோகம் செய்யப்பட வேண்டிய தமிழ்நாடு அரசின் இலவச பாட புத்தகங்கள் ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. பள்ளிகள் திறக்கப்பட்ட நேற்று பாட புத்தகம் விநியோகம் செய்யப்பட்டது. பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், வரைபட புத்தகங்கள் போன்றவையும் இலவசமாக வழங்கப்பட்டன. முதல் நாளான நேற்று மாணவ மாணவியருக்கு வழிகாட்டி வகுப்புகள் நடத்தப்பட்டன.

இதில் மாணவ மாணவியர் பள்ளியில் வகுப்பறைகளில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் தொடர்பாக தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் விளக்கினர். மாணவ மாணவியருக்கு காலை வணக்க கூட்டம் நடத்தப்பட்டும் அறிவுரைகள் வழங்கப்பட்டது. பல பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கொண்டாட்டமாக கடைபிடிக்கப்பட்டது. சமூக நலத்துறையின் உத்தரவுபடி அரசு பள்ளிகளில் முதல் நாள் மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் மதிய உணவு நேரத்தில் வழங்கப்பட்டது.

மாணவ மாணவியர் புதிய இலவச பயண அட்டை கிடைக்கும் வரை ஏற்கனவே உள்ள பழைய பஸ் பயண அட்டையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் முதல் நாளே மாணவ மாணவியர் அரசு பஸ்களிலும் பள்ளிகளுக்கு வருகை தந்தனர். நடப்பு கல்வியாண்டில் 220 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவ மாணவியர் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த மதிய வேளையில் 20 நிமிடங்கள் புத்தகங்கள், செய்திதாள்கள் வாசிக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அழுது அடம் பிடித்த குழந்தைகள்

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி, கல்வி சாரா செயல்பாடுகள், மன்ற செயல்பாடுகள் போன்றவற்றுக்கு தனித்தனி பாட வேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நர்சரி, பிரைமரி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்ட நிலையில் பெற்றோரை பிரிந்து குழந்தைகள் வகுப்புகளில் அமர மறுத்து அழுது அடம் பிடித்தனர். அவர்களை ஆசிரியர்கள் இனிப்புகள், பலூன், விளையாட்டு பொருட்கள் கொடுத்து சமாதானம் செய்து அமர வைத்தனர்.

போக்குவரத்து போலீசார் நியமிக்கப்படுவார்களா?

குமரி மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஆட்டோக்களிலும், வேன்களிலும் பள்ளி மாணவ மாணவியர் அளவுக்கு அதிகமாக ஏற்றப்பட்டு பள்ளிகளுக்கு கொண்டு வரப்படுகின்றனர்.மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகர பகுதியில் கடந்த சில நாட்களாக காலை முதல் மாலை வரை கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. குறிப்பாக பள்ளிகளுக்கு மாணவ மாணவியர் சென்று வருகின்ற காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் கட்டுக்கடங்காமல் உள்ளது. இந்த வேளையில் நாகர்கோவில் மாநகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து போலீசாரோ, ஊர்க்காவல் படையினரோ அல்லது ஆயுதப்படை போலீசாரோ போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நிறுத்தப்படுவது இல்லை.

குறிப்பாக வடசேரி சந்திப்பு, எஸ்எம்ஆர்வி சந்திப்பு, காசி விஸ்வாநர் கோயில் சந்திப்பு உட்பட பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீசாரை காண முடியவில்லை. அதனை போன்று அளவுக்கு அதிகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்கின்ற வாகனங்களையும் கண்காணிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இது தொடர்பாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

The post குமரி மாவட்டத்தில் 1230 பள்ளிகள் திறப்பு 3.25 லட்சம் மாணவ மாணவியர் பள்ளிகளுக்கு வருகை appeared first on Dinakaran.

Tags : Kumari district ,Nagercoil ,Dinakaran ,
× RELATED குமரி மாவட்டத்தில் உணவு, காய்கறி கழிவில் இருந்து எரிவாயு தயாரிப்பு