×

பி.இ விண்ணப்ப பதிவு மேலும் 2 நாள் நீட்டிப்பு: தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு

சென்னை: நடப்பாண்டு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு 2 நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்ஜினியரிங் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் கடந்த மாதம் 6ம் தொடங்கியது. அதன்படி அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழக வளாக பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக் கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்காக விண்ணப்பதாரர்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் தங்களது விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து வந்தனர்.

விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள் முதலே மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வந்தனர். இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 6ம் தேதியுடன் விண்ணப்பப் பதிவானது நிறைவு பெற்றிருந்தது. ஜூன் 6 நள்ளிரவு நிலவரப்படி 2 லட்சத்து 49 ஆயிரத்து 918 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 12 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி இருந்தனர். இந்நிலையில் விண்ணப்ப பதிவிற்கான கால அவகாசத்தை மேலும் 2 நாட்கள் நீட்டித்து பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: மாணவ-மாணவிகளின் கோரிக்கைகளை ஏற்று பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவானது ஜூன் 10 மற்றும் 11 ஆகிய 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து பதிவு கட்டணம் மற்றும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து ஜூன் 12ம் தேதி ரேண்டம் எண், ஜூலை 10ம் தேதி தரவரிசைப் பட்டியலும் வெளிடப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து சிறப்பு இடஒதுக்கீடு மற்றும் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) அட்டவணைக்கு ஏற்ப விரைவில் அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பி.இ விண்ணப்ப பதிவு மேலும் 2 நாள் நீட்டிப்பு: தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Directorate of Technical Education ,CHENNAI ,Tamil Nadu ,Anna University ,
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...