சென்னை, ஜூன் 9: பேருந்து படிக்கட்டில் பயணம் செய்பவர்கள் மற்றும் இருச்க்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழும்போது, பேருந்து சக்கரத்தில் சிக்கி, உயிரிழப்பதை தடுக்கும் வகையில், 1,315 மாநகர பேருந்துகளின் பக்கவாட்டில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 600க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு பேருந்தும் நாள்தோறும் 265 முதல் 270 கிமீ பயணிக்கிறது. இவற்றில் நாள்தோறும் சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணித்து வருகின்றனர். இந்த பேருந்துகளால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க போதிய நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, முன்னெச்சரிக்கையுடன் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல் வழங்குதல், அவர்களுக்கு பயிற்சி வழங்குதல் போன்றவற்றை செய்து வருகின்றனர். இந்நிலையில், பேருந்துகள் செல்லும் போது பக்கவாட்டில் சில இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி சக்கரத்துக்கு அடியில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களை தடுக்கும் விதமாக பேருந்துகளுக்கு இரு புறமும் கீழ் பக்கவாட்டில் தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணிகளை மாநகர போக்குவரத்துக் கழகம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தற்போது 1,315 பஸ்களில் இத்தகைய கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், ‘‘கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்வோர், அன்றாடம் கூலி வேலைக்கு செல்வோர் என தினமும் லட்சக்கணக்கான பயணிகள் மாநகர பேருந்துகளை பயன்படுத்தி வருகிறார்கள். மாநகர பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மாநகர பேருந்து கழக நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. பேருந்துகளின் தானியங்கி கதவு பொருத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன. படிக்கட்டுகளின் தொங்கியபடி உயிருக்கு ஆபத்தான முறையில் பயணிப்பதை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கையை எடுத்தது. சென்னையை பொறுத்தவரை கல்லூரி மாணவர்கள் பலரும் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகிறார்கள்.
தற்போது தானியங்கி கதவுகள் பொருத்தப்படுவதன் மூலம் அந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பதால் பயணிகள் மத்தியில் இந்த முயற்சிக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது சென்னை மாநகர பேருந்துகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதை தடுக்கும் விதமாக புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, பேருந்து செல்லும்போது பக்கவாட்டில் சில இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி பேருந்து சக்கரத்தில் கீழே விழுந்து சில நேரங்களில் விபத்து ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கும் விதமாக பேருந்துகளுக்கு இரு புறமும் கீழ் பக்கவாட்டில் தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணிகளை மாநகர போக்குவரத்துக் கழகம் மேற்கொண்டு வருகிறது. தற்போது 1,315 பஸ்களில் இத்தகைய கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது,’’ என்றனர்.
The post தடுமாறி கீழே விழுபவர்கள் சக்கரத்தில் சிக்காமல் தடுக்க 1,315 மாநகர பேருந்துகளின் பக்கவாட்டில் தடுப்பு கம்பி: மாநகர போக்குவரத்து கழக நிர்வாகம் நடவடிக்கை appeared first on Dinakaran.