×

இந்தியா – பாகிஸ்தான் இன்று மோதல்: நியூயார்க்கில் இரவு 8.00 மணிக்கு தொடக்கம்

நியூயார்க்: உலக கோப்பை டி20 தொடரின் ஏ-பிரிவில் இன்று நடைபெறும் பரபரப்பான லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. உலக கோப்பை, ஆசிய கோப்பை போட்டிகளில் மட்டுமே இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேரடியாக மோதும் வாய்ப்பு உள்ளதால், இப்போட்டிகள் உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தத் தவறுவதில்லை. நடப்பு உலக டி20 தொடரின் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இரு அணிகளும் நியூயார்க் நகரில் இன்று இரவு மோதுகின்றன. ரோகித் தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்திய உற்சாகத்துடன் களமிறங்குகிறது. அமெரிக்க ஆடுகளங்களின் தன்மை குறித்து முழுமையாகத் தெரியாத நிலையில், போட்டிக்கான வியூகம் அமைப்பதில் அனைத்து அணிகளுமே சற்று தடுமாறுகின்றன.

அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்துக்கு பிறகு பேசிய கேப்டன் ரோகித், ‘இந்த புதிய களத்தில் எப்படி ஆடுவது என்றே தெரியவில்லை. அனுபவ வீரர்களான இந்திய வீரர்கள், களத்தில் நிதானித்து எப்படி விளையாடுவது என்று யோசித்து பந்துகளை எதிர்கொள்ள வேண்டும்’ என்று கூறியிருந்தார். எனினும், அதிரடி வீரர்கள் மற்றும் ஆல் ரவுண்டர்கள் அதிகம் உள்ளதால் இந்திய அணி எத்தகைய சவாலுக்கும் தயாராகவே உள்ளது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான களம் என்பது பாபர் ஆஸம் தலைமையிலான பாக் அணிக்கு சாதகமான அம்சம். முதல் ஆட்டத்தில் அறிமுக அணியான அமெரிக்காவிடம் அதிர்ச்சி தோல்வியை தழுவிய பாக். அணி இடியாப்ப சிக்கலில் சிக்கியுள்ளது. இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் வரிந்துகட்டுவதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

* சர்வதேச டி20ல் இரு அணிகளும் 12 முறை மோதியுள்ளதில் இந்தியா 9-3 என முன்னிலை வகிக்கிறது.
* இந்த 12 ஆட்டங்களில் ஒன்று கூட பாகிஸ்தானில் நடைபெறவில்லை. இந்தியாவில் 2 ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன.
* டி20 உலக கோப்பையில் 7 முறை மோதியதிலும் இந்தியா 6-1 என ஆதிக்கம் செலுத்தியுள்ளது. பாக். வென்ற ஒரு ஆட்டம் 2007ல் சூப்பர் ஓவர் மூலம் கிடைத்தது.

* இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் இந்தியா 3-2 என முன்னிலையில் உள்ளது.
* இந்தியா கடைசியாக விளையாடிய 5 டி20யிலும் வென்றுள்ளது (ஒரு சூப்பர் ஓவர் வெற்றி).

* பாகிஸ்தான் கடைசியாக விளையாடிய 5 டி20ல் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை (2 ரத்து, 2ல் நேரிடையாக தோல்வி, அமெரிக்காவுக்கு எதிராக சூப்பர் ஓவர் தோல்வி).

இந்தியா: ரோகித் ஷர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, யஜ்வேந்திர சாஹல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, யாஷஸ்வி ஜெய்ஸ்வால், விராத் கோஹ்லி, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ரிஷப் பன்ட், அக்சர் படேல், சஞ்சு சாம்சன், சூரியகுமார் யாதவ்.

பாகிஸ்தான்: பாபர் ஆஸம் (கேப்டன்), அப்பாஸ் அப்ரிடி, அப்ரார் அகமது, ஆஸம் கான், பகார் ஸமான், ஹரிஸ் ராவுப், இப்திகார் அகமது, இமத் வாசிம், முகமது ஆமிர், முகமது ரிஸ்வான், நசீம் ஷா, சயிம் அயூப், ஷதாப் கான், ஷாகீன் ஷா அப்ரிடி, உஸ்மான் கான்.

The post இந்தியா – பாகிஸ்தான் இன்று மோதல்: நியூயார்க்கில் இரவு 8.00 மணிக்கு தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : India ,Pakistan ,New York ,A-Division ,World Cup T20 ,World Cup ,Asia Cup ,Dinakaran ,
× RELATED பவுலர்களால் வெற்றி…ரோகித் ஷர்மா பாராட்டு