×

கோவை மருதமலை வனப்பகுதியில் குட்டியை தாய் யானையுடன் சேர்க்க வனத்துறை தீவிரம்..!!

கோவை: கோவை மருதமலை வனப்பகுதியில் குட்டியை தாய் யானையுடன் சேர்க்க வனத்துறை போராடி வருகிறது.  கோவை மருதமலை வனப்பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் காட்டுயானை உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் வனத்துறை அதற்கு சிகிச்சை அளித்தது.  சிகிச்சை பெற்று பின் காட்டுக்குள் சென்ற தாய் யானை அதன் குட்டியை ஏற்று கொள்ளாமல் சென்றுவிட்டது. பாதிக்கப்பட்ட பெண் யானையுடன் இருந்த குட்டி யானை காணாமல் போனதால் 4 குழு அமைத்து குட்டி யானையை வனத்துறை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் தொண்டாமுத்தூர் விராலியூர் அடுத்த தட்டான்கள் என்ற பகுதியில் தனியார் தோட்டத்தில் குட்டி யானை இருப்பதாக வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

விரைந்து சென்ற வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு தாய் யானை இருக்கும் இடமான மருதமலை பகுதியில் உள்ள யானை மடூர் என்ற இடத்திற்கு கொண்டு சென்றனர். ஏற்கனவே அப்பகுதியில் உள்ள யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், குட்டி யானையை அதனுடன் சேர்க்கும் முயற்சி நேற்று காலை முதலே நடைபெற்று வந்தது. பின்னர், குட்டி யானையை வனப்பகுதியில் உள்ள மரத்தில் கட்டிவிட்டு தாய் யானையை கண்காணித்து வந்தனர். குட்டியணையை கண்டதும் தாய் யானை 10 மீட்டர் தொலைவில் பார்த்துவிட்டு மீண்டும் வனப்பகுதிக்கு சென்றது. இதனை கண்ட வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.

நேற்று காலை முதல் இன்று வரை தொடர்ந்து தாய் யானை குட்டியை சேர்க்காமல் இருப்பதால் வனத்துறையினர் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகின்றனர். அதே வேலையில் குட்டி யானை என்பதால் புட்டியில் பால் ஊற்றி கொடுத்து வருகின்றனர். இதே நிலை நீடித்தால் ஆனைமலை புலிகள் காப்பக முகாமிற்கு கொண்டு சென்று அங்கு முகாம்களில் குட்டி யானையை வளர்க்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக கோவை மண்டல வனப்பாதுகாவலர் பால சுப்ரமணியம், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் மற்றும் வனசரகர் திருமுருகன், அருண்குமார் உள்ளிட்ட வனத்துறையினர் தொடர்ந்து 10 நாட்களாக இரவு பகல் பாராமல் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர். 100 மீட்டர் தொலைவில் உள்ள தாய் யானை குட்டியை பார்த்துவிட்டு செல்கிறது. இன்று இரவுக்குள் தாய் யானையுடன் குட்டியை சேர்த்துவிடுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

 

The post கோவை மருதமலை வனப்பகுதியில் குட்டியை தாய் யானையுடன் சேர்க்க வனத்துறை தீவிரம்..!! appeared first on Dinakaran.

Tags : Marudamalai forest ,Coimbatore ,Marudamalai Forest of ,department ,
× RELATED குட்டி யானையை தாயுடன் சேர்க்க 3வது...