×

திமுக ஆட்சியில் மக்களுக்கு வழங்கிய திட்டங்களை தேர்தல் பிரசார கூட்டங்களில் எடுத்துரைத்து நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வெற்றி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு

சென்னை: திமுக ஆட்சியில் மக்களுக்கு வழங்கிய திட்டங்களை தேர்தல் பிரசார கூட்டங்களில் எடுத்துரைத்து நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவித வெற்றி வாகை சூட வைத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நடைபெற்று முடிந்துள்ள 18வது நாடாளுமன்ற தேர்தலில் பெற்றுள்ள வெற்றி தனித்தன்மையானது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இது, முதல்வர் இதற்கு முன் பெற்ற வெற்றிகளை எல்லாம்விட பெருமைக்குரிய மகத்தான வெற்றியாகும். மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்ற 2018ம் ஆண்டிற்கு பிறகு நடைபெற்ற 8 தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளார்.

தேர்தல் பிரசார கூட்டங்களில் ஒவ்வொரு முறையும் இந்தியாவை காப்போம், உரிமைகளை மீட்கும் ஸ்டாலினின் குரல் எனும் தலைப்புகளில் பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்து, அவற்றை பொதுமக்களிடையே பேசும் பொருளாக மாற்றி இந்தியா கூட்டணி வெற்றி பெற வழிவகுத்தார். தமிழ்நாட்டில் உள்ள கூட்டணி கட்சிகளை எல்லாம் ஒருங்கிணைத்து அழைத்துப்பேசி தமிழ்நாடு + புதுவை மாநிலங்களில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் ஏறத்தாழ 50 சதவிகித தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கெல்லாம் மிகவும் பெருந்தன்மையுடன் பகிர்ந்தளித்தார்.

2004ம் ஆண்டிற்கு பிறகு புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் போட்டியிட்டு 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்று புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சார கூட்டங்களில் திராவிட மாடல் அரசு நிறைவேற்றிய கட்டணமில்லா விடியல் பேருந்து பயணத் திட்டம், 1 கோடியே 15 லட்சம் இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் மாபெரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மகளிர்க்கும் மாணவர்களுக்கும், மாதம் 1,000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ் புதல்வன் திட்டம், படித்த இளைஞர்களுக்கு பல்வேறு தொழில் திறன் பயிற்சிகள் அளித்து வேலைவாய்ப்புகள் பெற வழிவகுத்திடும் நான் முதல்வன் திட்டம், மக்களைத்தேடி அதிகாரிகள் சென்று அவர்களின் குறைகளை குறிப்பிட்ட நாள்களில் தீர்த்து வைக்கும் மக்களுடன் முதல்வர் திட்டம், பசியோடு பள்ளி செல்லும் குழந்தைகளுக்குச் சூடான சுவையான சத்தான காலை உணவு வழங்கி கல்வியில் நாட்டம் செலுத்திட செய்யும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் முதலான சிறப்பான திட்டங்களை எல்லாம் மக்களிடம் துல்லியமாக எடுத்துரைத்தார்.

10 ஆண்டு காலம் இந்திய திருநாட்டை ஆட்சி செய்த பாஜ கட்சி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உட்பட கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றாமல் வாய்ஜாலம் காட்டிய பொய்முகத்தை தமிழ்நாடு முழுவதும் மக்கள் அடையாளம் காணச் செய்தார். திமுக முக்கிய கொள்கைகளில் ஒன்று ‘சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம்’ என்பது. அதன்படி, சொல்லிச் செய்த திட்டங்களை எல்லாம் பட்டியலிட்டு காட்டினார். அவை மட்டுமல்லாமல் தேர்தலின்போது சொல்லாத செய்திகளையும் திட்டங்களாக அறிவித்து செயல்படுத்திய சாதனைகளை எல்லாம் மக்கள் மனதில் பதியும்படி கூறினார்.

இந்திய அரசியல் சட்டம் வகுத்துள்ள சமத்துவ, சமதர்ம, ஜனநாயக குடியரசு என்ற கோட்பாடுகளை மிதித்து, மத ஆதிக்க வெறி உணர்வுகளை வளர்த்து இந்திய நாட்டு மக்களை பிளவுபடுத்தும் ஆணவ அதிகாரத்தை செலுத்திடும் பாஜ ஆட்சியின் முறையற்ற செயல்களை மக்களுக்கு எடுத்துரைத்து மக்களின் ஆதரவை திரட்டினார். ஒவ்வொரு தொகுதியிலும், ஒவ்வொரு நாளும் வேட்பாளர்களையும் தொண்டர்களையும், தொடர்பு கொண்டு தொகுதி நிலவரங்களை கேட்டறிந்து தொய்வின்றி ஊக்கமுடன் தேர்தல் பணிகளை ஆற்றிட அறிவுரைகள் வழங்கி உற்சாகப்படுத்தினார்.

இத்தகைய பணிகளின் வாயிலாக நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் நாற்பதும் நமதே என்று கூறிய முழக்கம் மெய்பட்டு; நாற்பதிலும் நூற்றுக்கு நூறு திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கண்டுள்ள வெற்றி என்பது மகத்தான வெற்றியாகும். இது இந்த 18வது நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் படைத்துள்ள சரித்திர சாதனை என்பதை ஒரு புதிய வரலாறாக காலம் பறைசாற்றிக் கொண்டிருக்கும். மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்ற 2018ம் ஆண்டிற்கு பிறகு நடைபெற்ற 8 தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளார்.

The post திமுக ஆட்சியில் மக்களுக்கு வழங்கிய திட்டங்களை தேர்தல் பிரசார கூட்டங்களில் எடுத்துரைத்து நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வெற்றி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : DMK ,Chief Minister ,M. K. Stalin ,CHENNAI ,M.K.Stalin ,
× RELATED திமுகவின் 40 எம்.பி.க்களும்...