×

175 தொகுதிகளில் 134ல் வெற்றி ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றிய சந்திரபாபு: எதிர்க்கட்சி தகுதியை கூட இழந்த ஜெகன்மோகன்

திருமலை: ஆந்திராவில் சந்திரபாபு ஆட்சியை கைப்பற்றிய நிலையில், எதிர்க்கட்சி தகுதியை கூட ஜெகன்மோகன் இழந்தார். ஆந்திராவில் கடந்த 13ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. மாநிலத்தில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்தும், தெலுங்குதேசம், ஜனசேனா மற்றும் பாஜக மற்றொரு அணியாகவும், காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் தனி அணியாகவும் போட்டியிட்டன. இதனால் மும்முனை போட்டி ஏற்பட்டது.

ஆந்திராவில் மொத்தம் 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 88 தொகுதிகளில் வெற்றிபெறும் கட்சி ஆட்சி அமைக்கும். வாக்குகள் எண்ணும் பணி மாநிலம் முழுவதும் நேற்று 33 இடங்களில் 401 மையங்களில் நடந்தது. வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்திலிருந்து தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை வகித்து வந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சி 134 இடங்களில் வெற்றி பெற்றது. மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்களின் ஆதரவு அந்த கட்சிக்கு கிடைத்துள்ளது. நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 21 இடங்களில் வெற்றி பெற்றது.

பாஜ 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி 164 இடங்களை கைப்பற்றியது. ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 12 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட ஜெகனின் கட்சியால் பெற முடியாது.

எதிர்கட்சி தலைவராக பவன்கல்யாண் தேர்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது. இதேபோல் ஆந்திராவில் உள்ள 25 மக்களவை தொகுதியில் 16ல் தெலுங்கு தேசம், ஜனசேனா 2, பாஜ 3, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 4 இடங்களில் முன்னிலை வகித்தது. சட்டப்பேரவை தேர்தலிலும், மக்களவை தேர்தலிலும் காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

* கிங்மேக்கர் சந்திரபாபு
மக்களவை தேர்தல் முடிவின்படி, ஆந்திராவில் சந்திரபாபு தலைமையிலான தெலுங்குதேசம் ஒரு தொகுதியை வென்று 16 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனால், தெலுங்கு தேசத்தின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. பாஜவுக்கு மெஜாரிட்டி கிடைக்காததால் புதிய அரசு அமைவதற்கான துருப்பு சீட்டு தெலுங்கு தேசத்திடம் இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சந்திரபாபு நாயுடு கிங்மேக்கராக உருவெடுத்துள்ளார்.

The post 175 தொகுதிகளில் 134ல் வெற்றி ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றிய சந்திரபாபு: எதிர்க்கட்சி தகுதியை கூட இழந்த ஜெகன்மோகன் appeared first on Dinakaran.

Tags : Chandrababu ,Andhra Pradesh ,Jaganmohan ,Tirumala ,YSR Congress ,Desam ,Janasena ,Andhra ,
× RELATED ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு...