×

வட தமிழக கடலோர பகுதிகளில் காற்று சுழற்சி 8ம் தேதி வரை மழை நீடிக்கும்

சென்னை: தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளின்மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டு இருப்பதால், 8ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டு இருப்பதால் பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டியும், சில இடங்களில் இயல்பைவிடக் குறைவாகவும் பதிவாகியுள்ளது. அதனால் அனேக இடங்களில் மழை பெய்துள்ளது. திருவண்ணாமலை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது.

அதன் தொடர்ச்சியாக சென்னையில் சில இடங்களிலும், புறநகரில் சில இடங்களிலும் நேற்று மழை பெய்தது. இதற்கிடையே, தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளி மண்டலம் தவிர, தெற்கு ஆந்திரா- வட தமிழக கடலோரப் பகுதிகளின் மேலும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகள், திருப்பத்தூர், வேலூர், ராணிப் பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்றும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். அதனால் இந்த பகுதிகளில் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. மேலும், 6ம் தேதியில் நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

அதன் தொடர்ச்சியாக 7 மற்றும் 8ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. வெப்பநிலையை பொருத்தவரையில் இன்று பெரும்பாலான இடங்களில் இயல்பை ஒட்டியும், ஓரிரு இடங்களில் இயல்பைவிட சற்று அதிமாகவும் வெப்பநிலை இருக்கும் வாய்ப்புள்ளது. குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 கிமீ வேகம் முதல் 55 கிமீ வேகத்தில் வீசும், 6ம் தேதி தெற்கு வங்கக் கடலின் வடக்குப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கிமீ வேகம் முதல் 55 கிமீ வேகம் வரை வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

The post வட தமிழக கடலோர பகுதிகளில் காற்று சுழற்சி 8ம் தேதி வரை மழை நீடிக்கும் appeared first on Dinakaran.

Tags : North Tamilnadu ,Chennai ,South Andhra Pradesh ,North Tamil Nadu ,Chennai Meteorological Department ,South Tamil Nadu ,Dinakaran ,
× RELATED வாரிசு அருளும் வடசெந்தூர் முருகன்