×

சென்னையில் உலக தரம் வாய்ந்த கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கும் பணி தீவிரம்

* சிங்கப்பூரில் உள்ள ‘கார்டன்ஸ் பை தி பே’ பூங்கா போல் உருவாக்க திட்டம்

* ரோப் கார், கண்ணாடி தோட்டம், பசுமை நடைபாதையுடன் வடிவமைப்பு

உலக தரத்தில் சென்னையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் வேளாண் தோட்டகலை சங்கம் என்ற தனியார் அமைப்பால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 6 ஏக்கர் நிலத்தை, தமிழ்நாடு அரசு பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பிறகு மீட்டு, சென்னை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைந்திருந்தது. இதனை தொடர்ந்து, கடந்த சுதந்திர தின விழாவின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த இடத்தில் உலக தரத்தில் ‘‘கலைஞர் நூற்றாண்டு பூங்கா’’ அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இதற்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. குறிப்பாக, சிங்கப்பூரில் உள்ள தாவரவியல் பூங்காவான ‘கார்டன்ஸ் பை தி பே’ பூங்கா வடிவில் அமைக்க திட்டங்கள் வகுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதேபோல், இங்கு 40 மீட்டர் நீளம், 13 மீட்டர் அகலம் மற்றும் 12 மீட்டர் உயரம் கொண்ட கண்ணாடி மாளிகை அமைக்கப்பட உள்ளன. இதில் வண்ணமலர்கள், அழகிய தாவரங்கள் கொண்ட பசுமை குடில் வடிவமைக்கப்பட உள்ளன.

இதுதவிர, இந்தியாவிலேயே முதல் முறையாக 105 அடி உயரத்தில் சூப்பர் மர கோபுரம் 10 மாடிகளுடன் அமைக்கப்பட உள்ளது. இந்த கோபுரத்தின் மேல் 40 மீட்டர் சுற்றளவில் 100 பேர் நின்று பூங்காவை பார்க்கும் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட உள்ளன. இதுமட்டுமின்றி, இந்த பூங்காவில் பசுமை நடைபாதை, ரோப் கார் வசதி, மலர்களை கொண்டு வடிவமைக்கப்படும் குகைகள், நறுமண பயிர்கள், புல் தரை, மூங்கில் தோட்டம் அமைக்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: கலைஞர் நூற்றாண்டு பூங்காவை வடிவமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ரோப் கார் மூலமாக சுற்று வட்டாரத்தில் உள்ள இயற்கை காட்சிகளை பார்வையாளர்கள் கண்டுகளுக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

இதுதவிர, பூத்துகுலுங்கும் மலர்கள், குளிரூட்டப்பட்ட கண்ணாடி தொட்டம், உணவு விடுதி, நீரூற்றுகள் என காண்போரை கவரும் வகையில் வடிவமைத்து வருகிறோம். இந்த பூங்கா சென்னை மக்களுக்கு சிறந்த பொழுது போக்கு இடமாக விளங்குவதோடு மட்டுமல்லாது மாநகரின் சுற்றுச்சூழலையும் மேம்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

The post சென்னையில் உலக தரம் வாய்ந்த கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Artist Centenary Park ,Chennai ,Gardens by the Bay ,Singapore ,Dinakaran ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...