சென்னை: சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை போலீஸ் கமிஷனர் மற்றும் மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு செய்தனர். தமிழகத்தில் கடந்த 19ம் தேதி தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. வடசென்னை, மத்திய சென்னை மற்றும் தென்சென்னை ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, 4 அடுக்கு காவல் துறை பாதுகாப்புடன் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுவதால், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், உத்தரவின்பேரில் மேற்படி 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் வாக்குகள் எண்ணிக்கையையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் இணைந்து நேற்று ராணி மேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் லயோலா கல்லூரி ஆகிய வாக்கு எண்ணும் மையங்களுக்கு நேரில் சென்று காவல் அதிகாரிகளுடன் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டனர்.
மேலும், வாக்கு எண்ணும் மையங்களின் உள்புறமும், வெளிப்புறமும் மேற்கொண்டுள்ள பிரத்யேக பாதுகாப்பு ஏற்பாடுகள், கட்டமைப்புகள் மற்றும் சிறப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை பார்வையிட்டு காவல் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தனர். மேலும், காவல் ஆணையர் உத்தரவின்பேரில், சென்னையில் உள்ள முக்கிய இடங்கள், சந்திப்புகள், கட்சி தலைமை அலுவலகங்கள் மற்றும் பிற இடங்களில் சென்னைகாவல்துறை மூலம் பாதுகாப்புகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
The post வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு appeared first on Dinakaran.