×

தெலங்கானாவில் பரபரப்பு ஒரு ரூபாய் தகராறில் வாலிபர் கொலை: நண்பர் கைது

திருமலை: தெலங்கானாவில் பிரியாணிக்கு ஒரு ரூபாய் கூடுதலாக அனுப்பிய தகராறில் நண்பனை அடித்து கொன்றவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலம், வாரங்கல் மில்ஸ் காலனி கரீப்நகர் கோர்ரேகுண்டாவைச் சேர்ந்தவர் பிரேம்சாகர்(38), ஆட்டோ டிரைவர். காந்தி நகரை சேர்ந்தவர் ஜன்னுஅரவிந்த்(36). இருவரும் நண்பர்கள். இந்நிலையில், கடந்த 31ம் தேதி இரவு காந்திநகரில் உள்ள பிரியாணி கடைக்கு பிரேம்சாகர் சென்றுள்ளார். அங்கு சிக்கன் பிரியாணி பிளேட் ரூ.59க்கு விற்கப்படுகிறது. அதனை அவர் பார்சல் வாங்கினார். அதற்கான பணத்தை போன்பே மூலம் அவர் செலுத்தினார். ரூ.59க்கு பதிலாக ரூ.60 செலுத்தியதாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த அவரது நண்பர் ஜன்னுஅரவிந்த், பிரேம்சாகரிடம் நீயே ஆட்டோ ஓட்டி பிழைக்கிறாய். எதற்காக 1 ரூபாய் கூடுதலாக கொடுக்கிறாய்?’ எனக்கேட்டுள்ளார்.

அதற்கு பிரேம்சாகர், `நான் பிச்சைக்காரன் அல்ல, தெரிந்துதான் ரூ.1 கூடுதலாக கொடுத்தேன்’ எனக்கூறினார். இதனால் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜன்னுஅரவிந்த், பிரேம்சாகரை காலால் எட்டி உதைத்தாராம். இதில் நிலைதடுமாறிய பிரேம்சாகர், அங்குள்ள ஒரு கல் மீது விழுந்தார். இதில் தலையில் காயம் ஏற்பட்டு அவர் சுயநினைவு இழந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் மில்ஸ் காலனி போலீசார் கொலை வழக்காக மாற்றி ஜன்னுஅரவிந்தை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

The post தெலங்கானாவில் பரபரப்பு ஒரு ரூபாய் தகராறில் வாலிபர் கொலை: நண்பர் கைது appeared first on Dinakaran.

Tags : Telangana ,Tirumala ,Premsagar ,Korrekunda ,Warangal Mills Colony ,Warangal State ,
× RELATED `வெல்கம் மேடம்’ என வரவேற்று ஐஏஎஸ்...