×

தனது காதலை ஏற்காததால் ஆத்திரம்; பெண் இன்ஜினியர், சகோதரியின் புகைப்படத்தை நிர்வாணமாக சித்தரித்து அனுப்பி மிரட்டல்

சென்னை: தனது காதலை ஏற்காததால் தனது நண்பருடன் சேர்ந்து பெண் இன்ஜினியர் மற்றும் அவரது சகோதரியின் புகைப்படத்தை நிர்வாணமாக சித்தரித்து வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி மிரட்டிய மதுரை வாலிபர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் அண்ணாநகரை சேர்ந்தவர் ராணி(24)(பெயர்மாற்றப்பட்டுள்ளது). பொறியாளரான இவர், கடந்த 2 ஆண்டுகளாக மயிலாப்பூரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி, சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கிராபிக் டிசைனராக பணியாற்றி வருகிறார். அதே ஊரை சேர்ந்த நவீன்ராஜ்(27) என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ராணியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பல முறை தனது காதலை ராணியிடம் கூறியும் அவர் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதேநேரம் ராணி மதுரையில் படிப்பை முடித்துவிட்டு, சென்னைக்கு வேலைக்கு வந்துவிட்டார். தனது காதலியை மறக்கமுடியாமல், நவீன்ராஜூம் சென்னைக்கு வந்து தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். பணி முடிந்ததும், ராணியை காலை மற்றும் மாலை நேரங்களில் பின் தொடர்ந்து தனது காதலை ஏற்றுக்கொள்ளும் படி தொந்தரவு செய்து வந்துள்ளார். ஆனால் நவீன்ராஜின் காதலை ராணி ஏற்கவில்லை. ஒரு கட்டத்தில் மயிலாப்பூரில் ராணி தங்கியுள்ள பெண்கள் விடுதியின் சுவற்றில் சினிமா பாணியில் தனது காதலை வெளிப்படுத்தி போஸ்டர் ஒட்டியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராணி விடுதியின் வார்டனிடம் புகார் அளித்தார். அதன்படி விடுதி வார்டன் நவீன்ராஜை பிடித்து கடுமையாக எச்சரித்து அனுப்பியுள்ளார்.

ஒரு கட்டத்தில் ராணி தனக்கு கிடைக்க மாட்டார் என்று எண்ணி, திருப்பூர் மாவட்டம் பள்ளமடம் கந்தசாமி கவுண்டன் ெதருவை சேர்ந்த தனது நண்பர் ருத்ரமணிகண்டன்(29) என்பவரிடம் கூறியுள்ளார். அதற்கு ருத்ரமணிகண்டன் அளித்த யோசனைப்படி, நவீன்ராஜ், பேஸ்புக் பக்கத்தில் ராணி தனது குடும்பத்துடன் பதிவு செய்திருந்த புகைப்படத்தை எடுத்து, அதில் ராணி மற்றும் ராணியின் சகோதரியின் புகைப்படத்தை மார்பிங் செய்து, நிர்வாணமாக கடந்த 9ம் தேதி இரவு ருத்ரமணிகண்டன் செல்போனில் இருந்து ராணி செல்போனக்கு வாட்ஸ் அப் அனுப்பி மிரட்டியுள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராணி, ஆபாச புகைப்படத்துடன் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி இன்ஸ்பெக்டர் அந்தோணி விஜித்ரா ராணியின் செல்போன் போனுக்கு நிர்வாண புகைப்படம் அனுப்பிய நவீன்ராஜ் மற்றும் அவரது நண்பர் ருத்ரமணிகண்டனை பிடித்து விசாரணை நடத்திய போது, கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ராணியிடம் பல வழிகளில் நவீன்ராஜ் காதலை சொல்லியும், அதை ஏற்காமல் உதாசீனப்படுத்தியதால் புகைப்படத்தை நிர்வாணமாக மார்பிங் ெசய்து மிரட்டியது தெரியவந்தது. அதைதொடர்ந்து நவீன்ராஜ் மற்றும் ருத்ரமணிகண்டன் ஆகியோர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம், ஐடி ஆக்ட் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post தனது காதலை ஏற்காததால் ஆத்திரம்; பெண் இன்ஜினியர், சகோதரியின் புகைப்படத்தை நிர்வாணமாக சித்தரித்து அனுப்பி மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Madurai Waliber ,WhatsApp ,Madurai District ,
× RELATED இன்ஸ்டாகிராமில் துப்பாக்கி, கத்தியை காட்டி ரீல்ஸ் வெளியிட்டவர் கைது