×

அம்பத்தூர் சிடிஎச் சாலையில் விளையாட்டு பொருள் விற்பனை கடையில் தீ விபத்து: பட்டாசு பொறியால் விபரீதம்

அம்பத்தூர்: அம்பத்தூர், சிடிஎச் சாலையில் நேற்றிரவு விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடை திடீரென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் பல லட்சம் மதிப்பிலான விளையாட்டு பொருட்கள் எரிந்து சேதமாகிவிட்டன. அருகில் உள்ள திருமண மண்டபத்தில் பட்டாசு வெடித்ததில் கிளம்பிய தீப்பொறி பட்டதில் விபரீத விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சென்னை அம்பத்தூர், சிடிஎச் சாலையில், தொலைபேசி இணைப்பகம் அருகே யுவராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடை இயங்கி வருகிறது.

இதையொட்டி டிராக் உள்ளிட்ட பல்வேறு விலையுயர்ந்த விளையாட்டு சாதனங்கள் வைக்கப்படும் குடோன் உள்ளது. இந்நிலையில், நேற்றிரவு 9 மணியளவில் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யு கடை மற்றும் குடோன் அருகே பட்டாசு தீப்பொறி விழுந்தது. இதில் கடை மற்றும் குடோனில் வைத்திருந்த பல லட்சம் மதிப்பிலான விளையாட்டு பொருட்களில் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அப்பகுதியில் கரும்புகை மண்டலம் சூழ்ந்தது.

இதுகுறித்து தகவலறிந்ததும் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடை மற்றும் குடோனில் பரவியிருந்த தீயை சுமார் 3 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் முற்றிலும் அணைத்தனர். இவ்விபத்தில் பல லட்சம் மதிப்பிலான விளையாட்டு பொருட்கள் மற்றும் சாதனங்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. இப்புகாரின்பேரில் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

முதல் கட்ட விசாரணையில், விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்கு அருகே உள்ள திருமண மண்டபத்தில் பட்டாசு வெடித்ததில் கிளம்பிய தீப்பொறிகள் பட்டு விளையாட்டு பொருட்கள் மற்றும் சாதனங்கள் தீப்பிடித்து எரிந்ததாக தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

The post அம்பத்தூர் சிடிஎச் சாலையில் விளையாட்டு பொருள் விற்பனை கடையில் தீ விபத்து: பட்டாசு பொறியால் விபரீதம் appeared first on Dinakaran.

Tags : Ambattur ,CDH Road ,Ambatore ,Ambatore, CDH Road ,Fireworks ,Dinakaran ,
× RELATED விளையாட்டு பொருட்கள் விற்பனையகத்தில் தீவிபத்து