×

கோவை மருதமலை வனத்தில் உடல்நலம் பாதித்த தாய் யானைக்கு சிகிச்சை: தாயை பிரியாமல் குட்டியானை பாச போராட்டம்

கோவை: மருதமலை வனப்பகுதியில் உடல்நிலை பாதித்த யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். தாய் யானையை விட்டு பிரியாமல் குட்டி யானை அங்கேயே இருந்து கண்ணீர் விட்டு பாச போராட்டம் நடத்தியது. கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட மருதமலை அடிவாரம் வனப்பகுதியில் வனப்பணியாளர்கள் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, யானை பிளிரும் சத்தம் கேட்டது. இதையடுத்து, சத்தம் வந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது பெண் யானை ஒன்று குட்டியுடன் இருந்தது. பெண் யானை நடக்க முடியாமல் உடல்நலம் பாதித்த நிலையில் கீழே விழுந்து கிடந்தது. அந்த தாய் யானையை குட்டி யானை எழுப்ப முயற்சி செய்து கண்ணீர் விட்டுக்கொண்டு இருந்தது. இதனை பார்த்த வனத்துறையினர் உடனடியாக மாவட்ட வன அலுவலருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியன், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், கோவை ரேஞ்சர் திருமுருகன், வன கால்நடை டாக்டர்கள் சுகுமார், ராஜேஸ் ஆகியோர் சென்றனர். டாக்டர்களின் முதற்கட்ட ஆய்வில் தாய் யானைக்கு வயிறு தொடர்பான பிரச்னையால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கலாம் என தெரியவந்தது. இதையடுத்து, யானைக்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து வாழைப்பழம் உள்ளிட்டவை யானைக்கு உணவாக அளிக்கப்பட்டது. இதனை யானை உட்கொண்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும், டாக்டர்கள் தாய் யானைக்கு சிகிச்ைச அளிக்கும்போது அதன் மூன்று மாத குட்டி யானை, தாயை பிரியாமல் அங்கேயே இருந்தது. தாய் யானையின் மீது அமர்ந்தும், அதனை முட்டி தள்ளியும் எழுப்ப முயன்றது. குட்டியானையின் இந்த பாச போராட்டம் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இது குறித்து கள இயக்குனர் மற்றும் மண்டல வனபாதுகாவலர் ராமசுப்பிரமணியன் கூறியதாவது: உடல்நலம் பாதித்த பெண் யானைக்கு 40 வயது இருக்கும். அதனுடன் உள்ள குட்டி யானை பிறந்து 3 மாதம் இருக்கும். யானை இரவு முதல் மருதமலை வனத்தில் படுத்து இருந்ததாக தெரிகிறது. எங்களுக்கு தகவல் வந்தவுடன் சம்பவ இடத்திற்கு டாக்டர்கள் குழுவுடன் சென்று யானைக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. யானைக்கு வாழைப்பழம் அளிக்கப்பட்ட நிலையில், அதனை சாப்பிட்டது. வயிறு பிரச்னையால் யானையின் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. இந்த யானை 13 யானைகள் கொண்ட குழுவை சேர்ந்தது.

அந்த யானை கூட்டம் அருகில் சுற்றி கொண்டு இருப்பதால், சிகிச்சை அளிக்கப்படும் இடத்தின் அருகே கண்காணிப்பு பணியில் வனத்துறை குழு ஈடுபட்டு உள்ளனர். யானைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. குட்டியானை அங்கேயே இருந்தாலும் சிகிச்சை அளிக்கும்போது எவ்வித தொல்லையும் தரவில்லை. குட்டி யானையையும் கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post கோவை மருதமலை வனத்தில் உடல்நலம் பாதித்த தாய் யானைக்கு சிகிச்சை: தாயை பிரியாமல் குட்டியானை பாச போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Goa Marudhamalai ,KOWAI ,MARUDAMALA FOREST ,Marudamalai ,Kowai Forest ,Goa Marudhamalai Forest ,
× RELATED கோவையில் யானை மந்தைகளுடன் குட்டியானையை சேர்க்க முயற்சி!!