×

மேலைச் சிதம்பரம்

சைவ சமயத்தில் ‘கோயில்’ என்று போற்றப்படுவது சிதம்பரம். இதுவே சைவ சமயத்தின் தலைமைப்பீடமாகும். இந்தச் சிதம்பரத்தை போலவே ஒரு தலம் உண்டு. அதுதான் ‘மேலைச் சிதம்பரம்’ என்று அழைக்கப்படும் பேரூர். கோயம்புத்தூருக்கு மேற்கில் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இத்தலம் எல்லா உயிர்களுக்கும் வீடுபேற்றை அளிக்கும் தலமாகும். மனிதர்களுக்கு மட்டுமல்ல; மரத்திற்கும்கூட முக்தி அளிக்கும் தலம் இது. அதற்கு சாட்சியாக இத்தலத்தின் முன்புறத்திலேயே ஒரு புளியமரம் விளங்குகிறது.

பல்லாண்டுகளைக் கடந்து வாழும் இம்மரத்தின் விதையை எடுத்து இன்னொரு இடத்தில் விதைத்தால் அது முளைப்பதில்லை. இது ‘பிறவாப்புளி’ என்று போற்றப்படுகிறது. இதேபோல, பல நூற்றாண்டுகளைக் கடந்து வாழும் பனைமரமும் இங்கு உண்டு.

இது ‘இறவாப்பனை’ என்று போற்றப்படுகிறது. இறப்பும் பிறப்பும் இல்லாத முக்தியைத் தருவதால், சுந்தரர் இத்தலத்து இறைவனை, “பேரூர் உறைவாய் பட்டிப்பெருமான் பிறவா நெறியானே” என்று பாடுகிறார். இப்படிப் பாடிய சுந்தரரே ஒருமுறை பொருள்வேண்டி இங்கு வரும்போது, “முக்தியைத் தரும் இத்தலத்தில் பொருட்செல்வத்தைத் தரக்கூடாது” என்று கருதிய சிவபெருமான், அம்பிகையுடன் வேளாண் தம்பதியாக வேடம் தரித்து வயலில் விவசாயம் செய்யச் சென்றுவிட்டார் என்கிறது தலபுராணம்.

பங்குனி உத்திரத்தின்போது இறைவனே வயலில் இறங்கி வேளாண்மை செய்யும் பணியை இன்றும் விழாவாக இத்தலத்தில் காணமுடியும். யுகயுகமாக இருக்கும் இத்தலத்தில் வழிபட்டு பிரம்மா, விஷ்ணு, காலவ முனிவர், சுந்தரர், அருணகிரிநாதர், கரிகாலச் சோழன் எனப் பலர் உய்ந்துள்ளனர். பசுக்கள் மேயும் பட்டியிலிருந்து பசுவின் கால் குளம்படிபட்டு வெளிப்பட்ட காரணத்தால், ‘பட்டீசுவரர்’ என்று பெயர் தாங்கி அருளும் இந்த இறைவனின் சிவலிங்கத்தின் மீது பசுவின் கால் குளம்படி பட்ட சுவடு இன்னும் காணப்படுகிறது. இப்படியாக இறைவன் எழுந்தருளியிருக்கும் இத்தலம் ஒரு காலத்தில் அரசவனமாக இருந்தது. அதனால் இது வடமொழியில் ‘பிப்பிலவனம்’ என்று போற்றப்படுகிறது.

ஆலங்காட்டில் ஆடித்தோற்ற காளிக்கு, இந்த அரசங்காட்டில் இறைவன் பாத தரிசனம் தருகிறார். இங்குள்ள நடராஜப் பெருமானின் பாதத்தைக் காணும் வகையில் காளிதேவி ஆலயம் இங்குக் காணப்படுகிறது. சிதம்பரச் சபையைப் போன்றே மனித உடம்பின் தன்மையில் அமைந்துள்ள இத்தலத்தின் கனகசபை கவின்மிகு கற்சிற்பங்களுடன் காணக்காண கண்ணுக்கு வியப்பைத் தரக்கூடியது.

உலகில் எங்கும் இல்லாத வகையில் இங்குள்ள நடராஜருக்கு பனித்த சடை காணப்படுகிறது. மற்ற தலங்களில் விரித்த சடை காணப்படும். இந்த பனித்த சடையைத்தான்,

“பனித்த சடையும் பவளம்மேனியில் பால்வெண்ணீறும்”

– என்று நாயனார் பாடினாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. இதுவே இறைவன் இங்கு ஆனந்தக் கூத்தாடினார் என்பதற்குச் சான்று. இத்தகு தலத்தில் ஓடும் ஆறு ‘காஞ்சிமாநதியாகும்’. கங்கையில் நீராடிய பயனை நல்கும் இந்த ஆற்றில் மனித எலும்புகளை இட்டால், அவை கல்லாக மாறுகின்றன. மேலும், இவ்வூர் எல்லைக்குள் பசுஞ்சாணத்தில் புழு உண்டாவதில்லை. இவ்வாறு எந்த நிலையிலும் நமக்கு முக்தியைத் தரும் இத்தலம், முக்தித் தலங்களின் முடிமணியாகத் திகழ்கிறதுஎன்றால் அது மிகையல்ல.

-முனைவர் சிவ. சதீஸ்குமார்

The post மேலைச் சிதம்பரம் appeared first on Dinakaran.

Tags : Upper Chidambaram ,Chidambaram ,Saivism ,Perur ,Maleich Chidambaram ,Coimbatore ,Dinakaran ,
× RELATED பலத்த காற்றுடன் மழை: இருட்டில் சிதம்பரம் ரயில் நிலையம்