×

?வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?

– பாக்கியம், பட்டுக்கோட்டை.

இது பற்றிய குறிப்பு, “பிரஹத்சம்ஹிதா’’ என்ற நூலில் காணப்படுகிறது. இந்த வாஸ்து புருஷ மண்டலம் என்பது, இரண்டு முறைகளில் பிரிக்கப்படுகிறது. மனையின் மொத்த அளவினை ஒரு சதுரமாகக் கணக்கில் கொண்டு, அதனை 8×8=64 பாகங்களாகவும், 9×9=81 பாகங்களாகவும் பிரித்துப் பார்க்கும் இரண்டு வெவ்வேறு கணிதங்கள் உண்டு. பெரும்பாலும், இரண்டாவதாக உள்ள 81 கட்டங் களாகப் பிரித்து அதன் அடிப்படையில் கட்டிடங்களை உருவாக்குகிறார்கள். இதனை கிராமப்புறத்தில், குழிக்கணக்கு என்று சொல்வார்கள். நீள அகலத்தினை ஒன்பது, ஒன்பது குழிகளாக பாவித்து மொத்தம் 81 குழிகளைக் கொண்டு ஒவ்வொரு குழிக்கும் ஒவ்வொரு விதமான தேவதைகளை நிர்மாணித்து இந்த பகுதியில் கழிப்பறை அமைய வேண்டும். இந்த பகுதியில் சமையலறை, இதில் பூஜை அறை போன்ற அமைப்புகளைத் தீர்மானிக்கிறார்கள். இந்த வாஸ்து புருஷ மண்டலத்தின் அடிப்படையில் கட்டப்படும் கட்டிடங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமைகிறது.

?திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை ஏன் உடைக்க சொல்கிறார்கள்? அதன்
அர்த்தம் என்ன?

– எம்.மனோகரன், ராமநாதபுரம்.

பூசணிக்காய் மாத்திரம் அல்ல, எலுமிச்சம்பழம், தேங்காய் ஆகியவற்றிற்கும் திருஷ்டி தோஷத்தைப் போக்கும் சக்தி உண்டு. இந்த மூன்றுமே திருஷ்டியை ஈர்க்கும் திறன் கொண்டது என்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள். அதிகப்படியான திருஷ்டிதோஷம் இருக்கும் இடத்தில், இந்த மூன்றும் அழுகிவிடுவதையும் நாம் பார்த்திருப்போம். இவற்றில் இருக்கக்கூடிய திரவம் இந்த திருஷ்டியை தன்னகத்தே ஈர்த்துக் கொள்கிறது. வெள்ளைபூசணியை உடைப்பதற்கு கூச்மாண்டன் எனும் அரக்கனின் கதையைச் சொல்வார்கள்.

அதாவது தேவர்களுக்கு கடும் தொல்லை அளித்து வந்த கூச்மாண்டன் எனும் அரக்கனை, விஷ்ணுபகவான் சம்ஹாரம் செய்த தருணத்தில் தன்னுடைய மரணம் என்பது எப்பொழுதும் மக்களுக்கு நன்மை தரும் வகையில் அமைய வேண்டும் என்று வரம் கேட்டானாம். அவ்வாறே வரம் அருளிய பகவான், நீ பூமியில் பூசணிக்காயாக பிறப்பாயாக, உன்னை திருஷ்டி கழிக்கும் விதமாக சுற்றி உடைப்பதன் மூலம், மக்களின் துன்பங்கள் காணாமல் போகும் என்ற வரத்தினைத் தந்ததாக கர்ணபரம்பரை கதை உண்டு. அதனால்தான் அந்த அரக்கனின் பெயரில் பூசணியை கூஷ்மாண்டம் என்று அழைப்பார்கள்.

வெளியில் தன்னைச் சுற்றி இருக்கும் எதிர்மறை சக்திகளை உள்ளிழுத்துக்கொண்டு நேர்மறை சக்தியை வெளியிடும் திறன் வெள்ளைப் பூசணிக்கு இருப்பதால் அதனை திருஷ்டி சுற்றி உடைப்பதற்கு பயன்படுத்துகிறார்கள். இதனை முதலில் இடமிருந்து வலமாக மூன்று முறையும் வலமிருந்து இடமாக மூன்று முறையும் மேலிருந்து கீழாக மூன்று முறையும் சுற்றி உடைப்பார்கள். முதலில் சுற்றத் தொடங்கும்போது இருக்கும் அதன் எடையானது ஒவ்வொரு சுற்றுக்கும் அதிகரிப்பது போலவும் கடைசியாக மேலிருந்து கீழாக சுற்றும்போது அதிக பாரத்துடன் இருப்பது போலவும் அதனைச் சுற்றுபவர்கள் உணர்வார்கள். இதனைக் கொண்டு திருஷ்டி அதிகமாக இருக்கிறது என்றும் சொல்வார்கள்.

?பால்வெளி மண்டலத்தில் உள்ள கோள்களுக்கும், மனித வாழ்விற்கும் என்ன தொடர்பு?

– சு.பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்.

நிச்சயமாகத் தொடர்பு என்பது உண்டு. கோள்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு, இந்த பூமியின் மீதும் பூமியில் வாழும் மனிதர்களின் மீதும் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது. எளிதில் நாம் புரிந்துகொள்ள பல உதாரணங்கள் உண்டு. எங்கோ கோடிக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள சூரியனின் வெப்பம் நம்மைச் சுடுகிறது. சூரியனின் வெப்பத்தால் கடல்நீர் ஆவியாகிறது. பௌர்ணமி நாள் அன்றும் அமாவாசை நாள் அன்றும் கடல் சீற்றத்தில் மாற்றத்தைக் காண்கிறோம். மனிதனின்
மனநிலையில்கூட அந்நாட்களில் மாற்றத்தை உணர்கிறோம். சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரண்டு கிரஹங்களும் நம் கண்களுக்குத் தெளிவாகத் தெரிவதால் அவற்றை உதாரணமாகப் பார்க்கிறோம். இதேபோல, மற்ற கிரஹங்களின் தாக்கமும் இந்த பூமியின் மீதும் பூமியில் வாழுகின்ற மனிதர்களின் மீதும் உண்டாகிறது என்பதை நம் முன்னோர்கள் கண்டறிந்து வைத்திருக்கிறார்கள். வானில் வால்நட்சத்திரம் உண்டானால் அது தெரியும் பகுதியில் ஏதோ ஒரு விரும்பத்தகாத சம்பவம் நடக்கப்போகிறது என்பதையும் சொல்லி வைத்தார்கள். ஆக, பால்வெளி மண்டலத்தில் உள்ள கோள்களுக்கும், மனித வாழ்விற்கும் தொடர்பு உண்டு என்பது மறுக்க முடியாத உண்மையே.

?க்ருஹ வாஸ்துவைப் பின்பற்றுவது உண்மையில் நமக்கு பலன்களைத்
தருகிறதா?

– சிந்துஜா ராஜகோபாலன், பெங்களூரு.

நிச்சயமாகப் பலன்களைத் தருகிறது. வாஸ்து என்பது புவியியல் ரீதியான அறிவியல் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, அந்த இடத்தில் நீரோட்டம் என்பது எத்திசையை நோக்கிச் செல்கிறது, வீட்டின் எந்தப் பகுதி மேடாக இருக்க வேண்டும், எந்தப்பகுதி தாழ்ந்து இருக்க வேண்டும், காற்றோட்டம் என்பது எத்திசையில் இருந்து வருகிறது, சூரிய வெளிச்சம் என்பது வீட்டிற்குள் தங்குதடையின்றி வருகிறதா, எந்த நேரத்தில் சூரிய ஒளி வீட்டிற்குள் வருகிறது போன்ற விஷயங்களை உள்ளடக்கியதே வாஸ்து என்பது ஆகும். அதன் அடிப்படையில் வீட்டினை நிர்மாணிக்கும்போது அந்த வீட்டிற்குள் வசிப்பவர்களின் ஆரோக்கியம் நல்லமுறையில்தானே இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருந்தால் கடினமாக உழைக்க முடியும். கடினமாக உழைப்பவன் நிச்சயமாக வாழ்வில் உயர்வினைக் காண்பான் அல்லவா? அதனால்தான் வாஸ்துவிற்கு இத்தனை முக்கியத்துவம் தருகிறார்கள்.

?நாம் பயன்படுத்திய ஆடையை மற்றவர்களுக்கு தானமாக வழங்கலாமா?

– பொன்விழி, அன்னூர்.
கூடாது. தானம் என்பது வேறு, தர்மம் என்பது வேறு. தானம் என்றாலே ஏதோ ஒரு பலனை எதிர்பார்த்து செய்வது ஆகும். அந்த வகையில் வஸ்திர தானம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் புதிய வஸ்திரத்தைத்தான் தானம் செய்ய வேண்டும். அதே நேரத்தில் எந்தவிதமான பலனையும் எதிர்பாராமல் இயலாதவர்களுக்கு நம்மால் ஆன உதவி என்ற பெயரில் தர்மம் செய்ய நினைப்போர் உபயோகித்த ஆடையை தர்மமாக தந்துவிடலாம். அதுவும் கிழிந்த ஆடையாக இருக்கக்கூடாது. லேசாக கிழிந்து இருந்தாலும், நெருப்புப் பொறி பட்டிருந்தாலும் அதனை அடுத்தவர்களுக்கு வழங்கக்கூடாது. நாம் உபயோகித்த ஆடையை தர்மம் செய்யும்போது, அதனை நன்றாக துவைத்து உலர்த்தி அதன் பின்னரே ஏழை எளியவர்களுக்குத் தர வேண்டும். இந்த ஆடையால் எனக்கு எந்தவிதமான உபயோகமும் இல்லை, அதனால் இதனை தருகிறேன் என்ற எண்ணத்துடன் தர்மம் செய்யக்கூடாது. எனக்குப் பயன்பட்டது போல இது மற்றவர்களுக்கும் உபயோகமாக இருக்கட்டும் என்ற எண்ணத்துடன்தான் தர்மம் செய்ய வேண்டும்.

திருக்கோவிலூர் K.B ஹரிபிரசாத் சர்மா

 

 

The post ?வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன? appeared first on Dinakaran.

Tags : Luck ,Pattukottai ,
× RELATED வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி...