×

உலக கோப்பை பயிற்சி ஆட்டம்; ஓமன், நமீபியா வெற்றி: முதல் ஆட்டத்தில் கனடா அபாரம்

டரூபா: உலக கோப்பை டி20 தொடருக்கான பயிற்சி ஆட்டங்களில் ஓமன், நமீபியா அணிகள் வெற்றியை பதிவு செய்தன. ஐசிசி ஆண்கள் டி20 உலக கோப்பை போட்டி ஜூன் 2ம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் தற்போது நடைபெறுகின்றன. இந்திய நேரப்படி நேற்று அதிகாலை டிரினிடாட், டரூபா நகரில் 2 பயிற்சி ஆட்டங்கள் நடந்தன. முதல் ஆட்டத்தில் பப்புவா நியூ கினியா – ஓமன் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஓமன் பந்துவீச்சை தேர்வு செய்ய, நியூ கினியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 139 ரன் எடுத்தது. அதிகபட்சமாக லேகா சியகா 28 ரன் எடுத்தார். ஓமன் வீரர்கள் கேப்டன் அகிப் சுலேரி 3, பிலால் கான் 2 விக்கெட் எடுத்தனர். தொடர்ந்து விளையாடிய ஓமன் 19.1 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதிகபட்சமாக ஜீஷன் மக்சூத் 45 ரன் விளாசினார். கினியாவின் கபுவா மோரியா, அலியி நாவ், சார்லஸ் அமினி தலா 2 விக்கெட் எடுத்தனர்.

2வது ஆட்டத்தில் நமீபியா – உகாண்டா அணிகள் மோதின. டாஸ் வென்ற நமீபியா முதலில் பந்துவீச… உகாண்டா 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 134 ரன் சேர்த்தது. அதிகபட்சமாக முகசா ஆட்டமிழக்காமல் 51 ரன், ராபின்சன் ஒபுயா 38 ரன் விளாசினர். நமீபியா சார்பில் ஜாக் பிரஸ்ஸல், கேப்டன் ஜெரார்ட் எராஸ்மஸ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். அடுத்து களமிறங்கிய நமீபியா 18.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன் விளாசி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணியின் நிகோலஸ் டேவின் 54 ரன், ஜேபி கோட்ஸி 29 ரன் விளாசினர். உகாண்டா தரப்பில் ஹென்றி சென்யோண்டோ 2, காஸ்மாஸ், பிலால், அல்பேஷ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

முன்னதாக, அமெரிக்காவின் டாலஸ் நகரில் நடந்த முதலாவது பயிற்சி ஆட்டத்தில் கனடா – நேபாளம் அணிகள் மோதின. கனடா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 183 ரன் குவித்தது.
நிகோலஸ் கிர்டன் 52, ரவீந்தர்பால் சிங் ஆட்டமிழக்காமல் 41, நவனீத் தாளிவால் 32 ரன் எடுத்தனர். நேபாளத்தின் அபினாஷ் போரா 2 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து 184 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நேபாளம்19.3 ஓவரில் 120 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கனடா 63 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. நேபாள வீரர் குஷால் மல்லா 37 ரன் எடுத்தார்.
கனடா தரப்பில் தில்லான் ஹேலிகர் 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

 

The post உலக கோப்பை பயிற்சி ஆட்டம்; ஓமன், நமீபியா வெற்றி: முதல் ஆட்டத்தில் கனடா அபாரம் appeared first on Dinakaran.

Tags : World Cup ,OMAN ,NAMIBIA ,Canada ,Daruba ,World Cup T20 ,ICC ,T20 World Cup ,USA ,West Indies ,Dinakaran ,
× RELATED உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்...