×

பூரன் அதிரடி ரன் குவிப்பு: வெஸ்ட் இண்டீஸ் சாதனை வெற்றி

கிராஸ் ஐலெட்: ஐசிசி டி20 உலக கோப்பையின் கடைசி லீக் ஆட்டத்தில் சி பிரிவில் உள்ள வெஸ்ட் இண்டீஸ்-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இரு அணிகளும் தலா 3 வெற்றியுடன் ஏற்கனவே சூப்பர்-8 சுற்று வாய்ப்பை உறுதி செய்திருந்த நிலையில், முதலிடத்துக்கான மோதலாக இது அமைந்தது. கிராஸ் ஐலெட்டில் நேற்று நடந்த இபோட்டியில் டாஸ் வென்ற ஆப்கான் பந்துவீச… வெஸ்ட் இண்டீஸ் தொடக்க வீரர் பிராண்டன் கிங் 7 ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். எனினும், ஜான்சன் சார்லஸ் – நிகோலஸ் பூரன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு அதிரடியில் இறங்க வெஸ்ட் இண்டீஸ் ஸ்கோர் எகிறியது.

ஜான்சன் 43 ரன் (27 பந்து, 8 பவுண்டரி) விளாசி ஆட்டமிழந்தார். அடுத்த வந்த ஷாய் ஹோப் 25 ரன் (17 பந்து, 2 சிக்சர்), கேப்டன் ரோவ்மன் பாவெல் 26 ரன் (15 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து பெவிலியன் திரும்பினர். பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்டு ஆப்கான் பந்துவீச்சை சிதறடித்த பூரன் 98 ரன் (53 பந்து, 6 பவுண்டரி, 8 சிக்சர்) விளாசி துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டாக, வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன் குவித்தது. இந்த உலக கோப்பையின் லீக் சுற்றில் அதிகபட்ச ஸ்கோர் இதுதான். ஆந்த்ரே ரஸ்ஸல் 3, ரூதர்போர்டு 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆப்கான் தரப்பில் குல்பாதின் நயீப் 2, ஒமர்சாய், நவீன் உல் ஹக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து 219 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆப்கான், 16.2 ஓவரில் 114 ரன் மட்டுமே சேர்த்து 104 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அதிகபட்சமாக இப்ராகிம் ஸத்ரன் 38 ரன் (28 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), அஸ்மதுல்லா ஒமர்சாய் 23 ரன் (19 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் ரஷித் கான் 18, கரிம் ஜனத் 14 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ஒபெத் மெக்காய் 3, அகீல் உசைன், குடகேஷ் தலா 2, ரஸ்ஸல், ஜோசப் தலா 1 விக்கெட் அள்ளினர். ஆட்ட நாயகனாக நிகோலஸ் பூரன் தேர்வானார். இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் சி பிரிவில் 8 புள்ளிகளுடன் முதல் இடத்தை உறுதி செய்தது.

* டி20 உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது (218). முன்னதாக, 2007ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 205/6 மற்றும் 2012ல் ஆஸி.க்கு எதிராக 205/5 எடுத்திருந்தது.
* பவர்பிளேயில் வெஸ்ட் இண்டீஸ் 1 விக்கெட் இழப்புக்கு 92 ரன் விளாசியது, டி20 உலக கோப்பையில் புதிய சாதனையாக அமைந்தது. 2014ல் அயர்லாந்துக்கு எதிராக நெதர்லாந்து படைத்த சாதனை (91/1) முறியடிக்கப்பட்டது.
* டி20 உலக கோப்பையில் அதிக சிக்சர் விளாசிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற சாதனை நிகோலஸ் பூரன் வசமானது (128 சிக்சர்). கிறிஸ் கேல் (124), எவின் லூயிஸ் (111), போலார்டு (99) அடுத்த இடங்களில் உள்ளனர்.

The post பூரன் அதிரடி ரன் குவிப்பு: வெஸ்ட் இண்டீஸ் சாதனை வெற்றி appeared first on Dinakaran.

Tags : Pooran ,West Indies' ,Cross ,Islet ,West Indies ,Afghanistan ,ICC T20 World Cup ,Super ,8 round ,
× RELATED நொய்டாவில் ஆன்லைனில் வாங்கிய அமுல் ஐஸ்கிரீமில் பூரான்