×

ஆஸ்திரியா சுய கோல் பிரான்ஸ் வெற்றி

டுஸ்ஸல்டார்ப்: யூரோ கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் டி பிரிவு லீக் ஆட்டத்தில், ஆஸ்திரியா அணி சுய கோல் அடித்ததால் பிரான்ஸ் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை தொடரில் நேற்று டி பிரிவு லீக் ஆட்டத்தில் ஆஸ்திரியா-பிரான்ஸ் அணிகள் மோதின. முன்னாள் சாம்பியனான பிரான்ஸ் தாக்குதலை ஆஸ்திரியா வீரர்கள் எளிதாக தடுத்தனர். இரு தரப்பும் சளைக்காமல் போராடியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. ஆஸ்திரியாவின் நடுகள வீரர் கிறிஸ்டோப் பவும்கார்ட்னரின் அற்புதமான கோல் முயற்சியை பிரான்ஸ் கோல் கீப்பர் மைக் துடிப்பாக செயல்பட்டு தடுத்தார்.

38வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஒஸ்மான் டெம்பிள் தட்டித்தந்த பந்தை கேப்டன் கிளியன் எம்பாப்பே கோலாக்க முயற்சித்தார். அந்த கோல் முயற்சியை ஆஸ்திரிய வீரர் மேக்ஸ்மிலன் வோபர் தலையால் முட்டி திசை மாற்ற முயன்றபோது, பந்து சொந்த கோல் வலைக்குள் புகுந்தது. இந்த சுய கோலால் பிரான்ஸ் 1-0 என முன்னிலை பெற்றது. 2வது பாதியில் பிரான்ஸ் அணிக்கு கிடைத்த அருமையான வாய்ப்பை எம்பாப்பே (54வது நிமிடம்) தவறவிட்டார். இருதரப்பும் கோலடிக்க முனைப்பு காட்டியதில், முட்டல் மோதல் ஏற்பட நடுவர்கள் மஞ்சள் அட்டை காட்டி எச்சரித்தனர். 2வது பாதியில் மட்டும் 5 வீரர்கள் மஞ்சள் அட்டை எச்சரிக்கைக்கு ஆளானார்கள். பிரான்ஸ் வீரர்கள் ஆன்டோய்னி டச்சோமேனி, கிளியன் எம்பாப்பே ஆகியோர் காயம் அடைந்தனர். மேற்கொண்டு கோல் ஏதும் விழாத நிலையில், பிரான்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

The post ஆஸ்திரியா சுய கோல் பிரான்ஸ் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Austria ,France ,Dusseldorf ,Euro Cup Group D ,Euro Cup ,Dinakaran ,
× RELATED பர்மிட்டை புதுப்பிக்க அரசு மறுப்பு...