×

தமிழகத்தின் பெங்களூரு என்று அழைக்கப்படும் ஓசூரில் வரன்முறைப்படுத்தாத நிலங்கள் பதிவால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு: தொழில் நகராக மாறிவருவதால் கைவரிசை காட்டும் அதிகாரிகள்

ஓசூர்: தமிழகத்தின் பெங்களூரு என்று அழைக்கப்படும் ஓசூரில் தற்போது ரியல் எஸ்டேட் பெரிய அளவில் வளர்ச்சி கண்டிருப்பதை பயன்படுத்தி வரன்முறைப்படுத்தாத நிலங்களை பதிவுத்துறை அதிகாரிகள் தினமும் பல லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு பதிவு செய்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மிழ்நாட்டில் செழிப்பான மாவட்டங்களில் ஒன்று கிருஷ்ணகிரி. அங்கு பெரிய, பெரிய தொழிற்சாலைகள், கல் குவாரிகள், கிரானைட் மலைகள் நிறைந்த மாவட்டமாக உள்ளன. தொழில் வளர்ச்சியில் அசுர வளர்ச்சியை இந்த மாவட்டம் கண்டு வருகிறது. மேலும் பெங்களூருவில் இருந்து ஒரு மணி நேரத்தில் வந்து சேரக்கூடிய இடமாக உள்ள ஓசூர் தற்போது கடும் வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக தனியார் நிறுவனங்கள் மட்டுமல்லாது அரசு தொழிற்பேட்டைகள், நிறுவனங்கள் ஏராளமாக தொடங்கப்பட்டு வருகின்றன. இதனால், இந்த மாவட்டத்துக்கு பதவிக்கு வர எப்போதும் அரசு அதிகாரிகளுக்குள் கடும் போட்டி ஏற்படும். அதில் முன்னணியில் இருப்பது பதிவுத்துறைதான். மேலும், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களை சேர்ந்த மக்கள் வேலை வாய்ப்புகளுக்காக ஓசூர் நகரில் நிரந்தரமாக தங்கி விடுவதால், அங்கு குடியிருப்பு மனைகளின் மதிப்பு கூடிக்கொண்டே போகிறது. இதனால் மற்ற மாவட்டங்களில் பணியாற்றி வரும் அதிகாரிகள் கூட கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பணிக்கு வருவதையே விரும்புகின்றனர்.

காரணம், ஓசூரில் குடியேறிய மக்கள் தங்கள் ஊதியத்திற்கு ஏற்றபடி அதிக விலை கொடுத்து வீட்டு மனைகள் வாங்கத் தயாராக இருப்பதுதான். இதனால் ஓசூரில் பதிவுத்துறையில் வழக்கமாக நேர்மையான அதிகாரிகளையே போடுவது வழக்கம். அதேநேரத்தில் பல நேர்மையான அதிகாரிகள் அங்கு வருவதற்கு அச்சமும் தெரிவிக்கின்றனர். வேண்டும் என்றே அலுவலகத்துக்குள் பணத்ைத வைத்து விட்டு, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அவர்களே போட்டுக்கொடுத்து நேர்மையான அதிகாரிகளை வசூல் அதிகாரிகள் மாட்டி விடுகின்றனர். இதனால் அவர்களும் நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்கிக் கொள்கின்றனர். இதை வசூல் செய்யும் அதிகாரிகள் பயன்படுத்திக் கொண்டு இந்தப் பதவிக்கு வந்து விடுகின்றனர். 023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி வடிவேலு தலைமையில் சோதனை நடத்தப்பட்டபோது, அந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.5 லட்சத்திற்கும் மேற்பட்ட ரொக்க பணம் கைப்பற்றப்பட்டது. இதனால் அங்கு பணியாற்றிய அதிகாரிகள் மாற்றப்பட்டனர். தற்போது ஓசூர் சார்பதிவாளராக யாரும் நியமிக்கப்படவில்லை. அவருக்கு கீழ்நிலையில் உள்ள துணை சார்பதிவாளரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், சார்பதிவாளர் அலுவலர்கள் பலரும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு, தங்களுக்கென தனி ராஜ்ஜியமே நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஓசூர் மாநகராட்சி தொழில் நகரம் என்பதால், குடியிருப்பு நிலங்களின் விலை மதிப்பு கூடிக்கொண்டே போகிறது.

இதனால் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பை விட, நிலத்திற்கான பதிவு செய்யும் கட்டணத்தை, சார்பதிவு அதிகாரிகள் விருப்பப்படி நிர்ணயித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், கோடிக்கணக்கில் வீட்டு மனைகள் விற்பனை செய்து வரும் நபர்களுக்கு சகல வசதியோடு தனி மரியாதையும், சாதாரண மக்களுக்கு ஒரு பாகுபாடும் ஓசூர் சார்பதிவாளர் அலுலகத்தில் காட்டப்படுவதாக கூறப்படுகிறது. நகராட்சி மற்றும் டிடிசிபியிடம் அனுமதி பெறாத மனைகள் தற்போது பெரிய அளவில் சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறதாம். தினமும் ஏராளமான பத்திரங்கள் பதிவு செய்யப்படுகிறதாம். இதனால் பதிவாளர் அலுவலகமே தினமும் திருமண மண்டபம் போலத்தான் காட்சியளிக்குமாம். நகராட்சி, டிடிசிபி அனுமதி பெறாத நிலங்களை தினமும் பதிவு செய்வதால் அரசுக்கு தினமும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

ஆனால், பதிவுத்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு தினமும் 50 லட்சத்துக்கு மேல் செல்வதாக கூறப்படுகிறது. இதை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள், இந்த பதிவு அலுவலகத்தை கண்டுகொள்வதில்லையாம். மேலும் மாவட்ட பதிவாளர், புதியவர் என்பதால் அவருக்கு கள நிலவரம் இன்னும் தெரியவில்லையாம். அவர் நேர்மையான அதிகாரியாக இருந்தாலும், புதியவர் என்பதால் இந்த அலுவலகங்களுக்கு வருவதே இல்லையாம். இதனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் தினமும் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறதாம். எனவே, உடனடியாக ஓசூர் பதிவு அலுவலகத்தை தணிக்கை செய்வதோடு, பல மாதங்களாக காலியாக உள்ள சார்பதிவாளரையும் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதாம்.

 

The post தமிழகத்தின் பெங்களூரு என்று அழைக்கப்படும் ஓசூரில் வரன்முறைப்படுத்தாத நிலங்கள் பதிவால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு: தொழில் நகராக மாறிவருவதால் கைவரிசை காட்டும் அதிகாரிகள் appeared first on Dinakaran.

Tags : Osur ,Bengaluru ,Tamil Nadu ,Hosur ,Bengaluru of Tamil Nadu ,
× RELATED ஒசூர் அருகே மதுபோதையில் கணவனை அடித்துக் கொன்றவர் கைது..!!