×

புதிதாக கட்டும் வீட்டின் செப்டிக் டேங்க்கில் மனித எலும்புக்கூடு: சீர்காழியில் பரபரப்பு

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த சட்டநாதபுரத்தில் வசித்து வருபவர் கேசவன்(49). நாங்கூர் முன்னாள் ஊராட்சி தலைவர். தற்போது செம்பதனிருப்பு மெயின் ரோட்டியில் புதிதாக இடம் வாங்கி வீடு கட்டி வருகிறார். இவரது வீட்டின் பின்புறம் 15 அடி ஆழத்தில் செப்டிக் டேங்க் கட்டி மரப்பலகையால் மூடப்பட்டிருந்தது.

நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். ஒரு சிறுவன் அடித்த பந்து செப்டிக் டேங்குக்குள் விழுந்தது. இதையடுத்து செப்டிக் டேங்கில் விழுந்த பந்தை எடுப்பதற்கு சிறுவர்கள் சென்றனர். அப்போது செப்டிக் டேங்கை மூடி வைத்திருந்த மரப்பலகையை எடுத்து பார்த்துபோது மனித எலும்புக்கூடு கிடந்தது. இதுகுறித்து கேசவனிடம் சிறுவர்கள் தெரிவித்தனர். அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தியதுடன் தஞ்சை தடய அறிவியல் சோதனை நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் செப்டிக் டேங்கில் கிடந்த எலும்புக்கூட்டை இன்று காலை தடய அறிவியல் சோதனை நிபுணர்கள் கைப்பற்றி சோதனை நடத்தினர். இந்த சோதனை முடிவில் தான் யாருடைய எலும்புக்கூடு, ஆணா, பெண்ணா, எலும்புக்கூடு இங்கு எப்படி வந்தது என்பது தெரியவரும். இதுகுறித்து செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புதிதாக கட்டும் வீட்டின் செப்டிக் டேங்க்கில் மனித எலும்புக்கூடு: சீர்காழியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Sirkhazi ,Sirkazhi ,Kesavan ,Chattanathpuram ,Mayiladuthurai district ,Panchayat ,Nankur ,Sembathanaripu Main Roti ,
× RELATED சீர்காழியில் இரவில் கொட்டி தீர்த்த மழை