×

காரைக்காலில் தூங்கி வழியும் துப்புரவு நிறுவனம்: புழுதி பறக்கும் சாலைகள்

*தானியங்கி துப்புரவு லாரியை தினமும் இயக்க கோரிக்கை

காரைக்கால் : காரைக்கால் மாவட்டம் முழுவதும் குப்பைகள் சேகரிப்பு,தூய்மை பணிகளை காரைக்கால் நகராட்சியுடன் இணைந்து ஹெச்.ஆர்.ஸ்கொயர் என்ற தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.நகராட்சி மற்றும் ஐந்து கொம்யூன் பஞ்சாயத்துகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் தினம் தோறும் காரைக்கால் அடுத்த பறவை பேட் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது.

தூய்மை பணியின் தொடர்ச்சியாக காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் சாலைகளில் பரவி கிடக்கும் மண்,தூசுகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை தவிர்க்கும் வகையில் துப்புரவு பணி மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு உதவியாக ரூ.80 லட்சத்தில் அதிநவீன கருவிகள் பொருத்திய தானியங்கி துப்புரவு லாரி,பேட்டரியில் இயங்கும் 10 சிறிய ரக துப்புரவு வாகனங்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு சாதனங்கள் என ரூ.3 கோடியே 75 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் கடந்த ஆண்டு மார்ச் 26ம் தேதி காரைக்கால் நகராட்சி மற்றும் ஹெச்.ஆர்.ஸ்கொயர் துப்புரவு நிறுவனத்திடம் மாவட்ட நிர்வாகம் ஒப்படைத்தது.

₹80 லட்சம் மதிப்பிலான அதிநவீன துப்புரவு கருவிகள் பொருத்தப்பட்ட தானியங்கி துப்புரவு லாரி துவக்க நிகழ்ச்சி அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நேரு சாலையில் உள்ள தூசிகள்,மண்ணை அள்ளி துப்புரவு பணியை மேற்கொண்டது. அதன் பின் இது நாள் வரை காரைக்காலில் உள்ள எந்த சாலையிலும் பல லட்சம் செலவில் வாங்கப்பட்ட லாரி காணவில்லை.அதே நேரத்தில் சாலையில் மண்,தூசிகள் பரவி வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர்.பொதுமக்களின் நலனுக்காக வாங்கப்பட்ட துப்புரவு லாரியை துப்புரவு நிறுவனம் பல்வேறு காரணங்களை கூறி லாரியை இயக்கமால் இருந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து திருப்பட்டினம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் கணபதி கூறியதாவது:காரைக்கால் நகர்ப்பகுதி மற்றும் ஐந்து கொம்யூன் பஞ்சாயத்துகளில் உள்ள சாலைகளில் மண்,தூசுகள் ஆகியவற்றை அகற்றி நகர்ப்புற சாலைகளை தூய்மையாக வைத்திருக்கவும்,ஸ்வட்ச் பாரத் திட்டத்தை நகர் மற்றும் கிராமம் முழுவதும் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் பல்வேறு நிதி ஆதாரங்களை கொண்டு அதிநவீன கருவிகள் பொருத்திய தானியங்கி துப்புரவு லாரியை காரைக்கால் நகராட்சி வசம் ஒப்படைத்தது.

ஆனால் காரைக்கால் நகரம் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து பிரதான சாலைகளில் இன்றும் கூட மண் தூசுகள் பறந்த வண்ணம் உள்ளது.அதிக வேகத்தில் காற்று வீசும் போது சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது மண் துகள்கள் மேலே விழுந்து பல நேரங்களில் நிலை தடுமாறுகின்றனர்.சாலை ஓரங்களில் கொட்டிக்கிடக்கும் மண் துகளில்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் கன நேரத்தில் சிக்கி சறுக்கி விழுந்து காயம் அடைகின்றனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு அம்பாள் சத்திரம் பகுதியில் வளைவில் கொட்டிக்கிடந்த நிலக்கரி துகளில் சறுக்கி விழுந்து 10 க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் காயம் அடைந்தனர்.விபத்து ஏற்படுவதற்கு முன்பே முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாக மேற்கண்ட விபத்து பகுதி மற்றும் சாலையில் தானியங்கி துப்புரவு லாரியை கொண்டு பயன்படுத்தி நிலக்கரி துகள்களை அகற்றி சாலையை சுத்தப்படுத்தி இருந்தால் விபத்துகளை தவிர்த்து இருக்கலாம்.

இதே நிலை காரைக்கால் பிரதான சாலைகளான பாரதியார் வீதி,காமராஜர் வீதி,திருநள்ளாறு சாலை,சென்னை நாகை தேசிய சாலை,டாக்டர்.கருணாநிதி புறவழி சாலை,ஜிப்மர் சாலை என பிரதான முக்கிய சாலைகளில் மண் தூசுகள் பரவி அடுத்த விபத்துக்கள் நடைபெறும் சூழல் நிலவுகிறது.இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்திலேயே பயணிக்கின்றனர்.

எனவே காரைக்கால் சாலைகளில் 100 சதவீத தூய்மையை கொண்டு வருவதற்காக பல லட்சம் செலவில் வாங்கப்பட்ட தானியங்கி துப்புரவு லாரியை தினம் தோறும் இயக்கி காரைக்கால் மாவட்ட சாலைகளை மாசு அற்ற சாலையாக கொண்டுவர துப்புரவு பணியை மேற்கொள்ளும் நிறுவனம் முன்வர வேண்டும்.துப்புரவு லாரியை இயக்க உள்ள சிறு சிறு குளறுபடிகளை களைந்து தொடர்ந்து துப்புரவு பணியை மேற்கொள்ள காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி ஆணையர் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு நாளில் 8 கிமீ தூரம் சுத்தம் செய்ய முடியும்

நகராட்சி அதிகாரி கூறுகையில் ஒரு டிரக்-மவுண்டட் ரோட் ஸ்வீப்பர், ஸ்ட்ரீட் ஸ்வீப்பர் டிரக் என்றும் அழைக்கப்படுகிறது.தானியங்கி துப்பரவு லாரியை கொண்டு ஒரு நாளில் சுமார் 8 கி,மீ தூரம் கொண்ட சாலையை சுத்தம் செய்ய முடியும்.இது தெருக்கள், சாலைகள் மற்றும் பிற நடைபாதை மேற்பரப்புகளை சுத்தம் செய்ய வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பு வாகனமாகும். இது சாலை மேற்பரப்பில் இருந்து குப்பைகள், அழுக்கு, இலைகள் மற்றும் பிற கழிவுப் பொருட்களை அகற்ற தூரிகைகள் மற்றும் உறிஞ்சும் வழிமுறைகளுடன் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு வாஷரில் பொதுவாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பெரிய தூரிகைகள் வாகனத்தின் முன்புறத்தில் சுழலும்.

இந்த கத்திகள் அதிக வேகத்தில் இயங்குகின்றன, சாலை மேற்பரப்பில் இருந்து குப்பைகளை துடைத்து, அதை துப்புரவு செய்பவரின் மையத்திற்கு நகர்த்துகின்றன. வெற்றிட தூரிகைகளுக்குப் பின்னால் அமைந்துள்ள ஒரு வெற்றிட அமைப்பு சுத்தம் செய்யப்பட்ட குப்பைகளைப் பிரித்தெடுத்து, டிரக்கில் ஒரு ஹாப்பர் அல்லது பையில் சேகரிக்க பயன்படுகிறது. வெற்றிட அமைப்புகள் பெரும்பாலும் ஒரு வெற்றிடத்தை உருவாக்கும் விசிறிகள் அல்லது ஊதுகுழல்கள் உள்ளடக்கியது, குப்பைகளை சேகரிக்கும் பகுதிக்கு இழுக்கிறது.

மேலும் இந்த நவீன கருவிகள் பொருந்திய லாரியானது ஒரே நேரத்தில் சாலையில் உள்ள தூசுகள்,மண்,குப்பைகள் ஆகியவற்றை லாரியில் உள்ள தனி தனி சென்சார் கருவிகள் மூலம் சேகரித்து பின்னர் தூசு துகள்களை கட்டுப்படுத்த லாரியில் உள்ள 500 லிட்டர் தண்ணீர் தொட்டி கொண்டு உயர் அழுத்த நீர் பம்ப் மூலம் நீர் தெளிப்பு முனைகள் வழியாக சாலையில் தெளித்து தூசு துகளை கட்டுப்படுத்தும்.இது போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் லாரியில் இடம்பெற்றுள்ளது.

The post காரைக்காலில் தூங்கி வழியும் துப்புரவு நிறுவனம்: புழுதி பறக்கும் சாலைகள் appeared first on Dinakaran.

Tags : Karaikal ,HR Square ,Dinakaran ,
× RELATED காரைக்காலில் வரும் 21ம் தேதி உள்ளூர் விடுமுறை!!