×

குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு; இடிந்து விழுந்த வீட்டுக்குள் இருந்து வெளியேற முடியாமல் விடிய விடிய தவித்த மூதாட்டி: தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளது. நாகர்கோவிலில் மழைக்கு இடிந்து விழுந்த வீட்டில் இருந்த வெளியேற முடியாமல் விடிய, விடிய தவித்த மூதாட்டியை, தீயணைப்பு துறையினர் இன்று காலை உயிருடன் மீட்டனர். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து, குமரி மாவட்டத்திலும் தற்போது மழை நீடித்து வருகிறது. நேற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பதிவாகி உள்ளது. களியல் பகுதியில் 28.4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மயிலாடி, கொட்டாரம், நாகர்கோவில், குளச்சல், இரணியல், குருந்தன்கோடு உள்ளிட்ட பகுதிகளிலும் குறிப்பிட்டத்தக்க அளவு மழை பதிவாகி உள்ளது. மலையோர பகுதிகளிலும் மழை காரணமாக அணைகளுக்கு தொடர்ந்து நீர் வரத்து உள்ளது. இன்று காலையிலும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. நாகர்கோவிலில் வடசேரி, கிருஷ்ணன்கோவில், கோட்டார் உள்ளிட்ட பகுதிகளில் காலையில் பெய்த மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவ, மாணவிகள் குடைபிடித்தவாறு சென்றனர். தொடர்ந்து 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.44 அடியாக இருந்தது. அணைக்கு 703 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 637 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 69.95 அடியாக உள்ளது. அணைக்கு 252 கன அடி தண்ணீர் வந்து ெகாண்டு இருந்தது. சிற்றார்-1ல் 16.07 அடியாக நீர்மட்டம் இருந்தது. அணைக்கு 162 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 150 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. சிற்றார்-2ல் 16.17 அடியாக நீர்மட்டம் உள்ளது. பொய்கை 15.9 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 41.42 அடியாக உள்ளது. முக்கடல் அணையின் நீர்மட்டம் 18.4 அடியாக உள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 70 அடியை எட்டி வருகிறது. அணை நீர்மட்டம் 72 அடியாக உயரும் தருவாயில் பெருஞ்சாணி அணைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும். கடந்த 2 நாளாக பெய்த தொடர் மழையால், மாவட்டத்தில் 2 இடங்களில் வீடுகள் இடிந்துள்ளன. இதில் நாகர்கோவில் அருகே உள்ள புல்லுவிளையில் பொன்னுசாமி என்பவரின் வீடு இடிந்து விழுந்தது. நேற்று மாலையில் வீட்டின் ஒரு பகுதி அப்படியே இடிந்தது.

இந்த வீட்டில் பொன்னுசாமியின் மனைவி பாக்கியவதி (72) என்பவர் மட்டும் உள்ளார். அவரும் எழுந்து நடந்திருக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருந்தார். வீடு இடிந்து விழுந்த பகுதியில் இல்லாமல், மற்றொரு பகுதியில் கட்டிலில் படுத்திருந்ததால், அவர் உயிர் தப்பினார். இருப்பினும் எழுந்து நடக்க கூட முடியாத நிலையில் இடிபாடுகளுக்குள் விடிய, விடிய கட்டிலில் கிடந்தார். இது குறித்து இன்று காலை தீயணைப்பு துறைக்கு அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்யகுமார் உத்தரவின் பேரில், உதவி கோட்ட அலுவலர் துரை தலைமையில் தீயணைப்பு துறையினர் சென்று அந்த மூதாட்டியை மீட்டனர். அவருக்கு ஒரே ஒரு மகள் உண்டு. அவர் வேறொரு வீட்டில் வாடகைக்கு உள்ளார். அவருக்கு தகவல் தெரிவித்து, தற்போது மாற்று இடத்தில் பாக்கியவதியை தங்கி வைத்துள்ளனர். பாக்கியவதி உடல் நிலை சரியில்லாமல் உள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தான், உணவு கொடுத்து உதவி உள்ளனர். இரவில் வீடு இடிந்த சத்தம் கேட்க வில்லை. காலையில் வீடு இடிந்தததை பார்த்ததும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ேதாம் என அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூறினர். இந்த மூதாட்டிக்கு அரசு உதவ வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு; இடிந்து விழுந்த வீட்டுக்குள் இருந்து வெளியேற முடியாமல் விடிய விடிய தவித்த மூதாட்டி: தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர் appeared first on Dinakaran.

Tags : Kumari district ,Fire ,Nagarko ,Nagarkovo ,Southwest ,Kerala ,Dinakaran ,
× RELATED நாகர்கோவிலில் பாதாள சாக்கடை பணிகள்...