×

விருதுநகர் மாவட்டத்தில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்களை இயக்கினால் பறிமுதல்: கலெக்டர் எச்சரிக்கை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி இயக்கினால் பஸ்கள் பறிமுதல் செய்யப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு முழுவதிலும் 1,535 ஆம்னி பஸ்கள் தமிழ்நாட்டில் பதிவு செய்து முறையாக இயக்கப்பட்டு வருகின்றன. இவைதவிர 943 ஆம்னி பஸ்கள் பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த பஸ்கள் அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று தமிழ்நாட்டிற்குள் விதிகளை மீறி இயங்கி வருகின்றன. இவ்வாறு விதிகளை மீறி இயங்கும் ஆம்னி பஸ்களால் அரசுக்கு, பேருந்து ஒன்றுக்கு ஒரு காலாண்டுக்கு குறைந்த பட்சம் ரூ.1,08,000 வீதம் ஆண்டொன்றிற்கு குறைந்த பட்சம் ரூ.4,32,000 நிதி இழப்பு எற்படுகிறது. மேலும் இத்தகைய பேருந்துகளின் உரிமையாளர்கள் நாகாலாந்து உள்ளிட்ட பிற மாநிலங்களில் தவறான ஆதாரங்களை சமர்ப்பித்து அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு விதிகளுக்குப் புறம்பாக தமிழ்நாட்டிற்குள் முறைகேடாகவும், சட்டத்திற்குப் புறம்பாகவும் இயக்கி வருகின்றனர்.

இதனை ஒழுங்குபடுத்துவதற்கு ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து, மொத்தம் உள்ள 905 இதர மாநில பதிவெண் கொண்டு இயங்கும் ஆம்னிப் பேருந்துகளில் 105 ஆம்னி பேருந்துகள் மட்டுமே பிற மாநில பதிவெண்ணை ரத்து செய்துவிட்டு தமிழ்நாட்டில் மறுபதிவு செய்து முறையான அனுமதி சீட்டு பெற்று இயங்க ஆரம்பித்துள்ளன. ஆனால், இன்னும் 800 ஆம்னி பஸ்கள் தங்களது சட்டத்திற்கு புறம்பான இயக்கத்தை நிறுத்தவில்லை. இதனால் அரசிற்கு ஆண்டுக்கு ரூ.34.56 கோடி நிதி இழப்பு ஏற்படுகிறது. முறைகேடாக மற்றும் சட்டத்திற்குப் புறம்பான ஆம்னி பஸ்களை இயக்க இனி அனுமதி கிடையாது.

மீறி இயக்கினால், பஸ் உரிமையாளர்களின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது. விதிகளை மீறி இயங்கும் பிற மாநில ஆம்னி பஸ்களின் விவரங்கள் www.tnsta.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை மீறி இயங்கும் பிற மாநில ஆம்னி பஸ்களில் பொதுமக்கள் முன்பதிவு செய்திருந்தால் அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
அரசின் இந்த எச்சரிக்கையை மீறி இதில் பயணம் செய்யும் பொதுமக்களின் சிரமங்களுக்கு அரசு பொறுப்பேற்காது. விதிகளை மீறி இயக்கப்படும் ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்படும். உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

 

The post விருதுநகர் மாவட்டத்தில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்களை இயக்கினால் பறிமுதல்: கலெக்டர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Virudhunagar district ,Virudhunagar ,Omni ,Collector ,Jayaseelan ,Tamil Nadu ,
× RELATED விருதுநகர் மாவட்டத்தில் மீண்டும்...