×

கலவரம் செய்ய யாரையாவது கடவுள் அனுப்புவாரா?: பிரதமர் மோடிக்கு மம்தா கேள்வி

கொல்கத்தா: “நாட்டில் கலவரம் செய்ய, பொய்களை பரப்ப கடவுள் யாரையாவது அனுப்புவாரா?” என பிரதமர் மோடிக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா கிண்டலாக கேள்வி எழுப்பி உள்ளார். பிரதமர் மோடி அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், “நான் மனிதப்பிறவியே அல்ல. கடவுளால் பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டவன். இந்த பூமியில் சில செயல்களை கடவுள் என் மூலம் செய்ய விரும்புகிறார். அதற்காக கடவுள் கொடுத்த சக்தியால்தான் நான் சோர்வடையாமல் பணி செய்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மேற்குவங்க மாநிலம் 24 பர்கனாஸ் மாவட்டத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது, “தேர்தல் தோல்வி பயத்தில் பாஜ தலைவர்கள் அர்த்தமற்ற பேச்சுகளை பேசி வருகின்றனர். நாட்டில் ஒருவர்(பிரதமர் மோடி) நான் மனிதப் பிறவியே கிடையாது. கடவுள் என்னை அனுப்பி வைத்தார் என்று சொல்கிறார். அப்படி சொல்பவருக்கு ஒரு கேள்வி. நாட்டில் கலவரங்களை செய்ய கடவுள் யாரையாவது அனுப்பி வைப்பாரா? விளம்பரங்கள் மூலம் பொய்களை பரப்ப யாரையும் அனுப்புவாரா?

சிஏஏ என்ற பெயரில் தன் மக்களை துன்புறுத்த கடவுள் தன் தூதரை அனுப்பி வைப்பாரா? 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதியை நிறுத்துவாரா? கிராமப்புற வீடுகள் கட்டுவதை தடுப்பாரா? மக்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்துவேன் என்ற வாக்குறுதியை திரும்ப பெற கடவுள் சொன்னாரா? இதுபோன்ற செயல்களை கடவுள் செய்ய முடியாது” என்று அடுக்கடுக்கான கேள்வி எழுப்பி மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

The post கலவரம் செய்ய யாரையாவது கடவுள் அனுப்புவாரா?: பிரதமர் மோடிக்கு மம்தா கேள்வி appeared first on Dinakaran.

Tags : God ,Mamata ,PM Modi ,KOLKATA ,West ,Bengal ,Chief Minister ,Modi ,
× RELATED கோயில் சிற்பங்களுக்கு வர்ணம் பூசும் தம்பதியினர்!