×

பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை கூலிப்படையை சேர்ந்த 5 பேர் கைது: காதலியுடன் சென்றவரை தீர்த்துக்கட்டியது எப்படி? விசாரணையில் திடுக் தகவல்

நெல்லை: நெல்லையில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் தீபக்ராஜன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கூலிப்படையை சேர்ந்த 5 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். காதலியுடன் சென்றவரை தீர்த்துக்கட்டியது எப்படி? என்று விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மூன்றடைப்பு அருகே வாகைக்குளத்தை சேர்ந்த சிவகுருநாதன் மகன் தீபக்ராஜன் (32). பசுபதி பாண்டியன் ஆதரவாளரான இவர், கடந்த 20ம்தேதி பாளை கேடிசி நகர் ரவுன்டானா பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் முன் மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தீபக்ராஜன் மீது கொலை உள்ளிட்ட 23 வழக்குகள் உள்ளன. இதனால் தீபக்ராஜன் மீது முன்விரோதம் உள்ளவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடந்தது. மேலும் கொலையாளிகள் தப்பி சென்ற கார், நெல்லை மாவட்ட கிராம எல்லைக்கு உட்பட்ட ஒரு இடத்தில் திரும்பி கிராமங்கள் வழியாக சென்றது தெரிய வந்துள்ளது. அதை ஒட்டியுள்ள கிராமங்களிலும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில், நாங்குநேரி நவீன், முன்னீர்பள்ளம் ஐயப்பன், ஸ்ரீவைகுண்டம் ஐயப்பன் மற்றும் சரவணன், முருகேசன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் துணை கமிஷனர் ஆதர்ஷ் பஷேரா தலைமையிலான உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தீபக்ராஜனை கொலை செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக சிலர் முயன்று வந்தனர். ஆனால் எப்போதும் அவருடன் பாதுகாப்பாக ஆட்கள் இருப்பதால் அவரை கொலை செய்ய முடியாமல் இருந்தது. இந்தநிலையில்தான், தீபக்ராஜன் ஒரு பெண்ணை காதலிப்பது தெரியவந்தது. இந்தப் பெண்ணின் தோழி சில ஆண்டுகளுக்கு முன்னர் பக்கத்து ஊரைச் சேர்ந்த மாற்று சமூக வாலிபரை காதலித்துள்ளார். இது தெரிந்ததும், இந்தப் பெண், அந்தப் பகுதியைச் சேர்ந்த வக்கீல் முத்துமனோ என்பவரிடம் தெரிவித்துள்ளார். அவர், மாற்று சமூக வாலிபரை, தாக்கியுள்ளார். இனிமேல் இந்தப் பெண்ணிடம் பேசக்கூடாது என்று எச்சரித்து அனுப்பிவிட்டார். அதன்பின்னர் அந்தப் பெண்ணுக்கும், முத்துமனோவுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் பழகி வந்துள்ளனர்.

இந்தநிலையில், முத்துமனோ ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு தன்னுடைய நண்பர் தீபக்ராஜனிடம், தன்னுடைய காதலியை நெல்லை அருகே உள்ள ஒரு தனியார் சட்டக்கல்லூரியில் சேர்க்கும்படி கூறியுள்ளார். அவரும் கல்லூரியில் சேர்த்து விட்டுள்ளார். பாளையங்கோட்டை சிறையில் முத்துமனோ படுகொலை செய்யப்பட்டார். அதன்பின்னர் சட்டக்கல்லூரியில் படித்து வந்த பெண்ணுக்கு உதவி செய்து வந்த தீபக், பின்னாளில் அவரை காதலிக்கத் தொடங்கியுள்ளர். இந்தக் காதலுக்கு பெண்ணின் வீட்டிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்தநிலையில், கடந்த திங்கள்கிழமை காலையில் காரில் காதலியின் வீட்டுக்குச் சென்று அவரை அழைத்துக் கொண்டு ஒரு விழாவுக்கு சென்றுள்ளார். அந்த விழாவில் காரிலேயே இருந்த தீபக்ராஜன், காதலியை மட்டும் விழா
வுக்கு அனுப்பியுள்ளார். அதன்பின்னர் கல்லூரிக்கு அழைத்துச் சென்றுள்ளார். கல்லூரியில் சுமார் 3 மணி நேரம் வகுப்புகளை கவனித்த காதலி, பின்னர் மதியம் 1 மணிக்கு வெளியில் வந்துள்ளார். அவரை கல்லூரி முன்பு காத்திருந்த தீபக்ராஜன், பின்னர் அவரை அழைத்துச் கொண்டு மதியம் சாப்பிடுவதற்காக பாளையங்கோட்டை கேடிசி நகருக்குச் சென்றார். போகும்போது காரில் பிற சமூகத்தைச் சேர்ந்த 2 மாணவிகள் சென்றுள்ளனர்.

அதில் ஒரு மாணவியின் உறவினர்தான், கூலிப்படையைச் சேர்ந்த நவீன் என்று தெரியவந்துள்ளது. அவர் மீது பல கொலை வழக்குகள் உள்ளன. அவரது தலைமையில் சுமார் 15க்கும் மேற்பட்டவர்கள் ஓட்டலுக்கு வந்துள்ளனர். தீபக் ராஜனுடன் வந்த 3 பெண்களும் ஓட்டலில் சாப்பிட்டு முடித்து விட்டு புறப்படும்போது, தீபக்ராஜன் மட்டும் காரை எடுக்க வெளியில் வந்துள்ளார். அப்போது கொலை நடந்துள்ளது. அதில் நேரடியாக 6 பேர் ஈடுபட்டுள்ளனர். மற்ற 9 பேர் அங்க தனித்தனியாக நின்று கொண்டிருந்தனர். இவர்களிடம் தப்பினால் அவர்கள் கொலை செய்ய திட்டமிட்டிருந்தனர்.

தீபக்ராஜன் எப்போதும் தனியாக செல்வது இல்லை. ஆனால், காதலிதான் பல முறை அவரை தனியாக பல இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனால் காதலி மீது முழு நம்பிக்கை வைத்து தனியாக சென்று வந்துள்ளார்.
தனியாக சென்ற சந்தர்ப்பம் எதிராளிகளுக்கு தெரிந்ததால்தான் இந்தக் கொலை நடந்துள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள 5 பேருமே கூலிப்படையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் நேரடியாக இந்தக் கொலையில் ஈடுபடவில்லை என்று கூறப்படுகிறது. கூலிப்படையைச் சேர்ந்த நவீன் என்பவரது தலைமையிலானவர்கள் இந்தக் கொலையில் ஈடுபட்டுள்ளனர்.

அதில் நவீன் மீது, பல கொலை வழக்குகள் உள்ளன. சென்னையில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் என்பவரை கொன்ற வழக்கு உள்பட பல வழக்குகள் உள்ளன. கூலிப்படையாக செயல்படக் கூடியவர். ராமையன்பட்டி அருகில் உள்ள வேப்பன்குளத்தைச் சேர்ந்த ஒருவர்தான் நவீனிடம் கொலை செய்யும் திட்டத்தைக் கொடுத்துள்ளார். நவீன் மற்ற குற்றவாளிகளை அழைத்துச் சென்றுள்ளார். நவீனைத் தவிர மற்ற யாருக்கும் தீபக்ராஜனை கொலை செய்யும் திட்டம் தெரியாது என்று கூறப்படுகிறது.

மேலும், இவர்கள் சமுதாயத்திற்காக கொலை செய்யக்கூடியவர் இல்லை. கூலிப்படையாக செயல்படுகிறவர்கள். இதனால் அவருக்கு பின்னால், பணம் கொடுத்து யாரோ உதவியிருப்பது தெரியவந்துள்ளது. அதில் ரூ.20 லட்சம் வரை பேரம் பேசப்பட்டு, அதில் ரூ.12 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கொலையில் நேரடியாக ஈடுபட்டவர்கள் இதுவரை பிடிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சரண் அடைந்தவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கொலையாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில் அவர்களே போலீசில் சரண் அடைந்துள்ளனர். இது பெரிய சந்தேகத்தையும் போலீசாருக்கு ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

* நவீன் மீது பல கொலை வழக்குகள் உள்ளன. சென்னையில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் என்பவரை கொன்ற வழக்கு உள்பட பல வழக்குகள் உள்ளன. கூலிப்படையாக செயல்படக் கூடியவர்.
* தீபக்ராஜனை கொல்ல ரூ.20 லட்சம் வரை பேரம் பேசப்பட்டு, அதில் ரூ.12 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படு கிறது.

* மேலும் 3 பேருக்கு ஆபத்து? ரவுடியின் காதலி மெசேஜ்
கடந்த சில மாதங்களுக்கு முன் நெல்லை பிரபல ரவுடி பிளாக் ஜாக்குவார் ஜேக்கப் கைது செய்யப்பட்டார். அவரது முன்னாள் காதலி போலீசாருக்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜில் ஜேக்கப் தனது வளர்ச்சிக்காக மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த தீபக்ராஜன் உள்ளிட்ட 4 பேரை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் தீபக்ராஜன் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அந்த லிஸ்ட்டில் உள்ள 3 பேரையும் போலீசார் எச்சரித்து பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

* சென்னையில் பதுங்கலா?
கூலிப்படையினர் வழக்கமாக கொலையில் ஈடுபடுவார்கள். அவர்களுக்குப் பதில் சம்பந்தம் இல்லாதவர்கள் சரண் அடைவார்கள். இதனால் வழக்கும் நிரூபிக்கப்படாமல் குற்றவாளிகள் விடுதலையாவார்கள். ஆனால் முதல் முறையாக குற்றவாளிகள் சிசிடிவி கேமராவில் சிக்கியுள்ளனர். இதனால்நவீன்தான் கொலையாளி என்பது தற்போது ஆதாரமாக சிக்கிவிட்டது. மேலும் கொலையாளிகள் பயன்படுத்திய காரின் எண்ணை வைத்து விசாரித்தபோது, சென்னையைச் சேர்ந்த பதிவு எண் என்று தெரிந்தது. அந்த எண்ணை வைத்து உரிமையாளர் முகவரியை விசாரித்தபோது, கொலையாளிகள் போலியான கார் எண்ணை வைத்து கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் கொலையாளிகள் செங்கல்பட்டு வரை காரில் வந்ததை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். அதன்பின்னர் அவர்கள் வேறு காரில் சென்னைக்குள் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் சென்னை மற்றும் பக்கத்து மாவட்டங்களிலும் கொலையாளிகளை பிடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

* உடலை வாங்க மறுப்பு
3வது நாளாக நேற்றும் தீபக்ராஜனின் உடலை அவரது உறவினர்கள் வாங்க மறுத்தனர். போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனிடையே உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி நெல்லை வண்ணார்பேட்டையில் பல்வேறு அமைப்பினர் திரண்டு நேற்று மறியல் நடத்தினர். கொலையில் மாற்று சமுதாயத்தினர் ஈடுபட்டுள்ளதால் தீண்டாமை வழக்காக மாற்றவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை கூலிப்படையை சேர்ந்த 5 பேர் கைது: காதலியுடன் சென்றவரை தீர்த்துக்கட்டியது எப்படி? விசாரணையில் திடுக் தகவல் appeared first on Dinakaran.

Tags : Pashupati Pandian ,Nellai ,Deepakrajan ,Nellai District ,Palayamgottai ,Dinakaran ,
× RELATED பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை தேடப்பட்டு வந்த 2 ரவுடிகள் கைது