×

பாவங்களை மறைப்பது நன்றன்று!

ஒரு குடும்பத்தில் அக்கா தம்பி இருவர் இருந்தனர். ஒருமுறை பெற்றோர் வெளியே சென்றிருந்த நேரம், தன் தந்தை வாங்கி கொடுத்த விளையாட்டுத் துப்பாகியால் வீட்டிலிருந்த கோழியை சிறுவன் கொன்றுவிட்டான். அதை அக்கா பார்த்துவிட்டாள். அன்று முதல் அக்கா, தன் தம்பியை ஒரு அடிமையை போல வேலை வாங்க ஆரம்பித்தாள். தன் வேலையும் சேர்த்து செய்ய வைத்தாள். சிறுவனுக்கு அழுகையும் கோபமும் வந்தாலும், எங்கே பெற்றோரிடம் சொல்லி தனக்கு தண்டனை வாங்கி தருவாளோ, என பயந்து அவளுக்கு கீழ்ப்படிந்து செய்து வந்தான். ஒருமுறை அக்காவின் அடக்குமுறை எல்லை மீறவே, தந்தையிடம் அடிவாங்கினாலும் பரவாயில்லை, இனிமேல் அக்காவிடம் அடிமைப்பட வேண்டாம் எனக் கருதி, தந்தையிடம் நேரே சென்றான்.

இவன் தயங்கித் தயங்கி நிற்பதைக்கண்ட தந்தை, அவனை அன்போடு அழைத்து விசாரித்தார். அவன் உண்மையை தன் தந்தையிடம் சொல்லவே, ‘‘நீ இதற்காகவா இவ்வளவு நாள் கஷ்டப்பட்டாய்?’’ எனச் சொல்லி, அவன் உண்மையை ஒப்புக் கொண்டதை மெச்சிக் கொண்டார். பின்னர், அவனை அணைத்து அவனுக்கு தேவையானதை வாங்கிக் கொடுத்தார்.

இறைமக்களே, நம் பாவங்களை மறைப்பது நன்றன்று, நமக்கு ஒரு வியாதி வந்தால், அதை மறைக்காமல் மருத்துவரிடம் சொல்லி, அவர் தருகின்ற சிகிச்சையை நாம் பின்பற்றினால், நாம் அந்நோயிலிருந்து குணமாகி விடுதலை பெற்று மீண்டும் இன்புற்று வாழலாம். மாறாக, அதைச் சொல்லாமல் மறைத்து வைத்தால், அது நமக்குள் பெருகி நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாய் அழித்து, முற்றிலுமாக மரணத்துக்குள் தள்ளிவிடும். அதுபோலவேதான் பாவமும். அதை நாம் தேவனிடம் அறிக்கை செய்து, அவரது மன்னிப்பைப் பெற்றுக் கொண்டால், நித்தியமாய் வாழலாம். மாறாக, அதை மறைத்துவைத்தால், அது நமது ஆத்துமாவைக் கொன்று, வாழ்நாள் முழுவதும் அடிமைத்தனம் என்னும் கூண்டில் வைத்திருக்கும்.

இறுதியில், நம்மை நித்திய மரணத்துக்குள் தள்ளிவிடும். பரிசுத்த தேவன், பலியாக்கப்பட்ட காரணம் நாம் பாவத்தோடு வாழ்வதற்காக அல்ல, பாவத்திலிருந்து விடுதலை பெறுவதற்காகவே. இயேசு கிறிஸ்துவின் ரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும் (1 யோவான் 1:7) நாம் பாவத்தை அறிக்கை செய்வது மட்டுமல்ல, அதை விட்டுவிடவும் அழைக்கப்பட்டுள்ளோம், ‘‘தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்’’ (நீதிமொழிகள் 28:13) என்றும், ‘‘நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால் பாவங்களை நமக்கு மன்னித்து, எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் (இயேசு) உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்’’ (1 யோவான் 1:8,9) என்றும் இறைவேதம் கூறுகிறது. நமது பாவங்களை உணர்ந்து அறிக்கை செய்து, தேவமன்னிப்பைப் பெற்றுக் கொள்வோமாக. மன்னிக்க தேவன்
ஆயத்தம்; நாம் ஆயத்தமா?

– அருள்முனைவர். பெவிஸ்டன்.

The post பாவங்களை மறைப்பது நன்றன்று! appeared first on Dinakaran.

Tags :
× RELATED இந்த வார விசேஷங்கள்